அரசியல்

இன்னும் 25 ஆண்டுகளில் எம்.ஜி.ஆரை மக்கள் மறந்துவிடுவார்கள் : ஆ.ராசா ஏன் அப்படி சொன்னார் ?

இளைஞர்கள் பலர் டார்ச்லைட்டுக்கும், மெழுவர்த்திக்கும் வாக்களிக்கிறார்கள். அதை பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது என ஆக்ரோஷமாக பேசியுள்ளார் ஆ.ராசா.

இன்னும் 25 ஆண்டுகளில் எம்.ஜி.ஆரை மக்கள் மறந்துவிடுவார்கள் : ஆ.ராசா ஏன் அப்படி சொன்னார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கலைஞரின் 96-வது பிறந்தநாளையொட்டி, தி.மு.க சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புகழஞ்சலி மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த பொதுக் கூட்டங்களில், திராவிட இயக்கத்தின் வரலாறு, கலைஞர் செய்த சாதனைகளைப் பற்றி சுவாரஸ்யமாகவும், எழுச்சியாகவும் உரையாற்றி வருகிறார் தி.மு.க எம்.பி ஆ.ராசா. சமீபமாக அப்படி ஒரு விழா மேடையில், ”தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு” என்று சில தகவல்களை பேசினார்.

அவர் பேசியதாவது, " இளைஞர்கள் பலர் டார்ச்லைட்டுக்கும், சீமானுக்கும் வாக்களிக்கிறார்கள். அதை பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. தமிழக அரசியல் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை.” என்றவர், தமிழக அரசியல் ஆளுமைகள் செய்த வரலாற்று சாதனைகளை விளக்கி பேசினார்.

"தமிழகமெங்கும் பள்ளிகளைத் திறந்து, மாணவர்களுக்கு சத்துணவு போட்டவர் காமராஜர். ’தமிழ்நாடு’ என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இருப்பதாக சுட்டிக் காட்டி, மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரை மாற்றிய மொழி உணர்வுக்காரர் பேரறிஞர் அண்ணா.

பொதுவுடமை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட மேற்கு வங்கத்தில் இன்னும் கைரிக்‌ஷா இழுக்கும் தொழில் உள்ளது. ஆனால், அதை 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஒழித்துக் கட்டியவர் தலைவர் கலைஞர். 2019-ம் ஆண்டு இரண்டாவது முறை பதவியேற்றதும், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுக்கப்படும் என்கிறார் மோடி. ஆனால் 1973-ம் ஆண்டே அதை தமிழகத்தில் செய்து காட்டியவர் தலைவர் கலைஞர்.” என வரிசை கட்டினார்.

டாக்டர் அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாத, பெண்களுக்கான உரிமை வழங்கும் சட்டங்களை, கலைஞர் செய்து காட்டியது பற்றி தொடர்ந்து பேசினார்.

” பெண்களால் சுதந்திரமாக சாலையில் நடக்க முடியாது. விரும்பியதை செய்ய முடியாது. ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களாக பெண்கள் வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கு பெண்கள் பைக்கில் செல்கிறார்கள். ஆனால், அன்றொரு காலத்தில் பெண்கள் சைக்கில் ஓட்டக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி இருந்தது நம் சமூகம்.

இன்றைக்கு பெண்களுக்கு உள்ள உரிமைகளைப் பாருங்கள். இவை எல்லாம் எப்படி சாத்தியமானது. எப்படி இந்த சமூக மாற்றம் நிகழ்ந்தது. பெண்களுக்கான உரிமைகளை சட்டமாக்கி, பெரியாரின் மாணவன் என நிரூபித்த ஒரு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம், குடும்பங்களில் பெண்களுக்கு மதிப்பை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் பயனை இன்றைய பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

இதே சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால், அதை நிறைவேற்ற விடாமல் பல தரப்பிலும் எதிர்ப்பு வந்தது. தான் தோற்கடிக்கப்பட்டதாக கூறினார் அம்பேத்கர். ’ஆனால், வரலாற்றில் யாரேனும் ஒரு தலைவன் இந்த சட்டத்தை நிறைவேற்றுவான்’ என்றார் அம்பேத்கர். அந்த தலைவன் தான் தலைவர் கலைஞர்” என்று ஆக்ரோஷமாக பேசினார்.

”தி.மு.கவும், அ.தி.மு.கவும் இலவசங்கள் கொடுத்தன. ஆனால் அவை வரலாற்றில் இடம் பெறாது. எம்.ஜி.ஆர் சினிமாவின் காரணத்தால் மட்டுமே இன்னும் மக்கள் நினைவில் இருக்கிறார். அவரது திட்டங்களால் அல்ல. இன்னும் 25 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் மறக்கப்படுவார். வரலாற்றை திருப்பிப் போட்ட மாற்றங்களைச் செய்தவர்கள் மட்டுமே மக்களால் நினைவில் கொள்ளப்படுவார்கள். பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தலைவர்கள் செய்த வரலாற்றை மாற்றும் சாதனைகளால், இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் அவர்கள் போற்றப்படுவார்கள். அதுவே உண்மையான சாதனை” என இளைஞர்களுக்கு தமிழக அரசியல் வரலாற்றின் அரிச்சுவடிகளை விளக்கும் வகையில் இருந்தது ஆ.ராசாவின் பேச்சு.

banner

Related Stories

Related Stories