அரசியல்

கௌதம் கம்பீரின் செயல்பாடு கீழ்த்தரமாக உள்ளது ! கண்ணீர் வடித்த ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்!

கௌதம் கம்பீரின் செயல்பாடு கீழ்த்தரமாக உள்ளது ! கண்ணீர் வடித்த ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷி போட்டியிடுகிறார். டெல்லியில் தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க வினர் ஆம் ஆத்மி வேட்பாளர் குறித்து மோசமான வார்த்தைகளில் விமர்சித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கௌதம் கம்பீர் கிரிக்கெட் மைதானத்தில் எதிரணி வீரர்களின் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும், விளாசிய போது மிகவும் ரசித்து உற்சாகமடைந்த, இந்த நாட்டு மக்களில் நானும் ஒருவர். ஆனால், அரசியல்வாதியாக கௌதம் கம்பீரின் செயல்பாடு மிகவும் மட்டமாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கி செல்வதற்கு அவர் தயாராகிவிட்டார்.

பெண் என்றும் பாராமல் என்னை பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து துண்டு பிரசுரங்களை கம்பீர் சார்பில் தொகுதியில் வினியோகித்து வருகின்றனர் என்றார். அதிஷி பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென உடைந்து அழுதுவிட்டார். அவரை அருகில் இருந்த ஆம் ஆத்மி நிர்வாகிகள் தேற்றினர்.

குறிப்பிட்ட அந்த துண்டு பிரசுரத்தில் ஜாதி ரீதியான தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சுட்டிக்காட்டிய அந்த துண்டு பிரசுரத்தில், செய்தியில் பிரசுரிக்க முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். அதில் , கௌதம் கம்பீர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்குவார் என்று நாங்கள் கற்பனை செய்து பார்க்கவில்லை. இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டால், பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும்? அதிஷி நீங்கள் வலிமையாக இருக்கவும். உங்களுக்கு இது எவ்வளவு கடினமான சூழ்நிலை என்பதை என்னால் உணர முடிகிறது. இது போன்ற சக்திகளை தான் நாம் எதிர்த்து போரிட வேண்டியுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories