உணர்வோசை

மனிதனும் ரேஸில் ஓடும் குதிரையும் ஒன்றா ? நம் வாழ்க்கை முறைகள் சூறையாடப்படுவது எப்படி ?

நிறுவனங்களும் மேலாளர்களும் ஜாக்கிகளாக அமர்ந்து கொண்டு நம்மை அடித்துக் கொண்டிருக்கின்றனர். என்றேனும் வாழ்க்கை என்னும் கேரட்டை பிடித்துவிடுவோம் என நம்புகிறோம். ஆனால்...!

மனிதனும் ரேஸில் ஓடும் குதிரையும் ஒன்றா ? நம் வாழ்க்கை முறைகள் சூறையாடப்படுவது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரேஸ் குதிரைகள் வேகமாக ஓடுவதற்கு ஒரு சூட்சுமம் செய்யப்படுவதுண்டு. குதிரையின் தலையிலிருந்து வாய்க்கு சற்று முன் தள்ளி ஒரு கேரட் கட்டித் தொங்கவிடப்படும். பந்தயம் தொடங்கும்போது கேரட் குதிரையின் கண்ணுக்கு தெரிவது போல் தொங்கவிடப்படும். கேரட்டை பிடிப்பதற்கென குதிரை ஓடத் தொடங்கும். முதுகில் அமர்ந்திருக்கும் ஜாக்கி அறைந்தும் அடித்தும் குதிரையை வேகப்படுத்துவான். அடியும் பசியும் சேர்த்து கேரட்டை நோக்கி குதிரையை வேகமாக ஓடச் செய்யும்.

அந்தோ பரிதாபம், இறுதிவரை கேரட் குதிரைக்குக் கிடைக்காது. ஓடிய வேகத்தில் வாயில் நுரை தள்ளியதே மிச்சமாக இருக்கும்.

நாமும் இந்த குதிரைகள் போலத்தான். வாழ்க்கை என்கிற கேரட்டை துரத்திக் கொண்டு ஓடுகிறோம். நிறுவனங்களும் மேலாளர்களும் ஜாக்கிகளாக அமர்ந்து கொண்டு நம்மை அடித்துக் கொண்டிருக்கின்றனர். என்றேனும் கேரட்டை பிடித்துவிடுவோம் என நம்புகிறோம். ஆனால்...!

மனிதனும் ரேஸில் ஓடும் குதிரையும் ஒன்றா ? நம் வாழ்க்கை முறைகள் சூறையாடப்படுவது எப்படி ?

நம்மை சுற்றி தினம் ஒரு வாழ்க்கை அழிக்கப்படுகிறது. தினம் ஒரு வாழ்க்கை தோற்றுப் போகிறது. தினமும் ஒருவருகேனும் பூமி காலடியில் நழுவுகிறது.அந்த உண்மைகளை நாம் காண விரும்புவதில்லை. அச்சமயங்களில் முகத்தைத் திருப்பி சென்று விடுகிறோம்.

சமீபத்திய நம் வாழ்க்கை முறைகள் எப்படி வாழ்க்கையை சூறையாடுகின்றன என்பதை நான் நேற்று பார்க்க நேர்ந்தது.

Zomato-வில் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன். 20 நிமிடங்கள் ஆகியும் செயலியின் மேப்பில் உணவு கொண்டு வருபவர் அசையாமல் நிற்பதாகக் காட்டியது. வழக்கமாக உழைப்பவன் மீது கோபத்தைக் காட்டச் செய்யும் முதலாளித்துவத்தின் அயோக்கிய உத்தியில் வீழும் தன்மையிலிருந்து வெளிவந்துவிட்டதால் பொறுமை காத்தேன்.

மொபைல் செயலிழந்திருக்கலாம்.

டிராபிக்காக இருக்கலாம். வாகனத்தில் பிரச்சினையாக இருக்கலாம். தொழில்நுட்பத்துக்கு புரியாத பிசகுகளை கொண்டதல்லவா மனித வாழ்க்கை? மனிதனை இயந்திரமாக பார்த்துவிடக் கூடாது என்ற சித்தாந்தத்தில் இருப்பவனென்பதால் காத்திருப்பு என்னை மூழ்கடிக்கவில்லை.

மனிதனும் ரேஸில் ஓடும் குதிரையும் ஒன்றா ? நம் வாழ்க்கை முறைகள் சூறையாடப்படுவது எப்படி ?

சற்று நேரத்தில் அழைப்பு வந்தது. சொமாட்டோதான். அழைப்பை ஏற்றதும் "அய்யா.. வணக்கங்கய்யா.. சொமேட்டோங்கய்யா...!"

வந்துவிட்டதாக சொன்னதால் படியிறங்கி உணவு பெறச் சென்றேன். வாசலில் இல்லை. சற்றுத் தள்ளி இருக்கலாம் என எண்ணி செல்பேசியில் தொடர்பு கொண்டேன். தள்ளிதான் நின்று கொண்டிருந்தார். கை காட்டி அடையாளம் காட்டினேன்.

மனம் நடக்க சொன்னபோதும் அசைய முடியவில்லை. கால்களிலிருந்து குற்றவுணர்வு என்னை விழுங்கத் தொடங்கியிருந்தது.

அவர் வந்தார். கேரியரில் வைத்த பெட்டியில் இருந்து பொட்டலத்தைக் எடுத்துக் கொடுத்து, 'மன்னிச்சிருங்கய்யா.. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு!" என சென்றார்.

50 வயதுகளில் இருந்த அவர் வந்திருந்தது சைக்கிளில்.

உழைப்பையும் உழைப்பவரையும் உதிரி ஆக்கும் gig economy-யும் செயலி வாழ்க்கையும் ஒவ்வொரு நாளும் நம்மை குற்றவுணர்வுக்கு உள்ளாக்கக் கூடிய ஒரு வாழ்க்கை யதார்த்தத்தை முகத்தில் அறைந்து காட்டிக் கொண்டே இருக்கிறது.

ஐந்து நட்சத்திரங்களை அள்ளிக் கொடுத்துவிட்டு தப்பியோடிக் கொண்டே இருக்கிறோம் நாம்!

banner

Related Stories

Related Stories