உணர்வோசை

குழம்பி இருக்கும் இன்றைய தலைமுறைக்கு போன தலைமுறையால் வழிகாட்ட முடியவில்லையா? காரணங்கள் என்ன?

வாரந்தோறும் மால்களுக்கு போய் பழகிவிட்ட மனைவிகளும் குழந்தைகளும் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். வேறு வழி இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

குழம்பி இருக்கும் இன்றைய தலைமுறைக்கு போன தலைமுறையால் வழிகாட்ட முடியவில்லையா? காரணங்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இன்றைய தலைமுறையில் குழப்பம் அதிகமாக இருக்கிறது. அதன் முக்கியத்துவங்கள் புதிதாக இருக்கின்றன. மன ஆரோக்கியம் பல பிரச்சனைகள் கொள்கின்றன.

காரணம் இருக்கிறது.

போன தலைமுறையில் வாழ்க்கைக்கு ஒரே ஒரு டெம்ப்ளேட்தான்.

நன்றாக படித்துவிட்டால் ஒரு நிரந்தர வேலை நிச்சயம். வேலை கிடைத்ததும் கல்யாணம். பிறகு ஒரு பத்து வருடங்களில் ஒரு வீட்டு மனை. அடுத்த பத்து வருடங்களில் ஒரு வீடு. குழந்தை குட்டிகளை கரை சேர்க்கும்போது ஓய்வு பெற்று விடுவார்கள். பிறகு ஓய்வூதியமும் சேமிப்பும் இருக்கும். முதிய காலத்தின் மருத்துவ செலவுக்கு பிரச்சினை கிடையாது. ஈசி சேரில் அமர்ந்து கொண்டு நாட்டை திட்டிக் கொண்டு வாழ்க்கை கழிக்கலாம்.

பின்னர் 1990 வாக்கில் இந்தியா, உலக வங்கி மற்றும் பொருளாதார வல்லாதிக்கங்களின் கட்டளைக்கு இணங்கி தாராளமயப்படுத்தப்படுகிறது.

குழம்பி இருக்கும் இன்றைய தலைமுறைக்கு போன தலைமுறையால் வழிகாட்ட முடியவில்லையா? காரணங்கள் என்ன?

கடகடவென மாற்றங்கள்!

தகவல் தொழில்நுட்பத்துறை கொடி கட்டி பறக்கிறது. லட்சங்களில் சம்பளம். ஐந்து வருடத்திலேயே வீடு, கார் என ஏகத்துக்கு வாழ்க்கை கிட்டுகிறது. எல்லாரும் தனியாருக்கு பாய்கிறோம். டெம்ப்ளேட் வாழ்க்கைகள் எல்லாம் உடைபடுகின்றன. இரவுப்பணி சகஜமாகிறது. இந்த புது வாழ்க்கையை பற்றி இந்த தலைமுறைக்கும் அறிமுகம் இல்லை. அதை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கும் போன தலைமுறைக்கும் இல்லை. திடீரென கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல் இரு தலைமுறைகளும் அலைகின்றன. இது சரி, இது தப்பு என போன தலைமுறைக்கு அதன் முந்தைய தலைமுறை வழிகாட்டியது போல், இந்த தலைமுறைக்கு வழிகாட்ட, போன தலைமுறைக்கு தெரியவில்லை. ஏனெனில் எல்லாருக்கும் இந்த பொருளியல் புதிது.

சேர்ப்பதை விட செலவு செய்வது ஊக்குவிக்கப்பட்டது. சொத்து சேர்ப்பதை விட, கடன் வாங்குவது போற்றப்பட்டது. கடன் அட்டைகள் வந்தன. சகட்டுமேனிக்கு லோன்கள் கூவி விற்கப்பட்டன. நுகர்வுக்கான வெறி உடுக்கை அடித்து ஊட்டப்பட்டது. இரவு பணிகள் மனித வாழ்க்கையின் சமநிலையை பாதித்தது. உறவுகள் திணறின. காதல், காமம், குடும்பம் எல்லாம் நடப்பதறியாமல் விழி பிதுங்கி நின்றன. போதை வெறியில் கண்மண் தெரியாமல் ஆடி களைப்பது போல் ஆடி முடித்தோம்.

குழம்பி இருக்கும் இன்றைய தலைமுறைக்கு போன தலைமுறையால் வழிகாட்ட முடியவில்லையா? காரணங்கள் என்ன?

எல்லாமுமே ஒரு பத்து ஆண்டுகளுக்கு தான். வெடித்து கிளம்பிய வேகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை படுக்க ஆரம்பித்தது. அக்னிப்பிரவேச சிறுகதையில் வரும் காரின் மீது நாயகி கொள்ளும் மயக்கத்தை போல், புது வாழ்க்கைக்கு நாம் மயங்கி கிடந்த வேளையில் பொதுத்துறை சுருங்க ஆரம்பித்தது. அரசு வேலைகள் குறைக்கப்பட்டன. அந்நிய நாட்டு மூலதனம் பெருமளவுக்கு அனுமதிக்கப்பட்டது. நிறைய தனியார் நிறுவனங்கள் களம் கண்டன. பல நிறுவனங்கள் வந்ததால், உழைப்பு மலினமானது. சம்பளங்கள் அடிமாட்டு அளவுக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள்.

வேரற்ற, கொண்டாட்ட கூத்தடிப்பு வாழ்க்கைக்கு பழகி விட்ட நம்மால் அதை விட்டு வெளியே வர முடியவில்லை. லோன்களில் வாங்கிய கார்கள் முறைத்து பார்க்கின்றன. வாரந்தோறும் மால்களுக்கு போய் பழகிவிட்ட மனைவிகளும் குழந்தைகளும் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். வேறு வழி இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

குதிரை பந்தயங்களில் எல்லாம் குதிரைகள் வேகமாக ஓட ஒரு உத்தி செய்வார்கள். குதிரையின் தலையில் இருந்து ஒரு குச்சியை நீட்டி அதில் ஒரு கேரட்டை கட்டி தொங்க விடுவார்கள். அந்த கேரட்டை சாப்பிட்டு விடும் ஆசையில் குதிரை வேகமாக ஓடும். அதுபோல் நாம் வசதி, வாய்ப்பு என நினைத்து, நம் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு பழகி ஓடிக் கொண்டிருக்கிறோம். என்றாவது ஒரு நாள் நிம்மதி அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில். ஆனால் நிம்மதி என்பது நம் தலையிலிருந்து சற்று முன்னே நீட்டி, கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும் கேரட்!

ஒன்றிய அரசு எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனுக்காக செய்யும் விஷயங்களை சுமையாக நினைக்கிறது. மருத்துவம் இன்று கொள்ளை செலவு. கல்வி, மரண கொள்ளை. PF வட்டி குறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஓய்வூதியம் பொதுத்துறையிலேயே கிடையாது. தனியாரில் ஊதியம் மிகக்குறைவு. அதுவும் உங்களின் இளமைக்காலத்தை, ஒரு நாற்பது வயது வரையாவது நன்றாக வேலை வாங்கி, கசக்கி பிழிந்து, சக்கையாக்கி எறிந்துவிடுவார்கள். நடுத்தர வயதில் வேலை இன்றி emi-கள் நெறிக்க, குழந்தைகள் எதிர்காலம் பயமுறுத்த என்ன செய்வது என தெரியாமல் நிற்போம். நம் முதுமை காலத்துக்கே மருத்துவ செலவுக்கு வழியில்லாமல் இருப்போம். நம் அப்பா, அம்மா முதுமையில் நின்றுகொண்டு, கண்களில் உயிர் வறண்டு நம்மை பார்ப்பார்கள்.

குழம்பி இருக்கும் இன்றைய தலைமுறைக்கு போன தலைமுறையால் வழிகாட்ட முடியவில்லையா? காரணங்கள் என்ன?

ஆம், நம்மை சவக்குழியில் தள்ளி இருக்கிறார்கள். கொல்லோசியத்துக்குள் அடிமைகளை திறந்துவிட்டு, எவனை வேண்டுமானாலும் கொன்று உன் உயிரை காப்பாற்றிக் கொள் என அரசன் வேடிக்கை பார்ப்பதுபோல், நம்மை மோத விடுகிறார்கள்.

திறமை உள்ளவன் மட்டும் அல்ல, திறமை இல்லாதவனும் உயிர் வாழ வேண்டும். நிம்மதியுடன் இருக்க வேண்டும். அதுதான் இயற்கை நியாயம். Survival of the fittest அல்ல, survival of the weakestதான் நமக்கான தேவை.

ஆகவே கேரட்டுக்கு பின் ஓடாதீர்கள். சற்று நின்று பார்த்தால், கேரட் கட்டப்பட்டிருக்கும் சூழ்ச்சி தெரியும். சற்று விலகி நின்று உங்கள் வாழ்க்கையை கணியுங்கள். உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பொருளாதார கட்டமைப்பை மிஞ்சிய வாழ்க்கை என்ன என தேடி கண்டுபிடியுங்கள். உங்கள் திறமைக்கு, விருப்பத்துக்கு பிடித்த வேலையை பாருங்கள். ஊதியம் குறைவு என்றாலும் பரவாயில்லை. வசதி என்பது பொருட்களால் வருவதல்ல; நிறைவால் வருவது!

இந்த வேலை விட்டு வேறு வேலைக்கு நீங்கள் போனாலும் உயர்ந்த ஊதியத்துக்காகத்தான் போவீர்கள். அந்த ஊதியமும் உங்களுக்கு போதாது. சில நாட்கள் கழித்து இன்னொரு வேலைக்கு தாவ முனைவீர்கள். இதுதான் கேரட் வாழ்க்கை! இதிலிருந்து தப்பிக்க அப்படியே இதற்கு முரணான வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள். Take up a life that you are scared of. அது உங்கள் விருப்பத்துக்குரிய வாழ்க்கை ஆக இருக்கலாம். ஊதியம் குறைவு எனினும் நீங்கள் பழகிக் கொள்வீர்கள். நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். அவர்களே உங்களை வாழவும் வைத்துவிடுவார்கள்.

கொல்லோசியத்தை திறந்து, பிற அடிமைகளுடன் மோத விட்டு, அரசன் வேடிக்கை பார்க்க போவது உறுதியாகி விட்டால், அதே அடிமைகளை திரட்டி, ஒன்றிணைத்து, அந்த அரசனுடன் மோதுவதே நம் வேலையாக இருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories