உணர்வோசை

கட்டிப்பிடி வைத்தியம்.. இதில் உள்ள நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மனதை புதைத்து பூட்டிவிட்டு நீங்கள் எங்கே சென்று வாழ்ந்துவிட போகிறீர்கள்?

கட்டிப்பிடி வைத்தியம்.. இதில் உள்ள நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

எத்தனை வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அவை ஏதும் கொடுக்காத உறுதுணையை அணைப்பு கொடுத்து விடும்!

மொழி மிகவும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம். நம் மனதுக்குள் தோன்றும் விஷயத்தை அடுத்தவருக்கு எடுத்து சொல்வதற்கென உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் நம் சிந்தனையும் சமூக உறவுகள் கொடுத்த அனுபவங்களிலும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள மொழியின் சிடுக்குகளில் புகுந்து நாம் எண்ணாத விஷயங்களை எண்ணிய விஷயங்களாக பேசும் நேர்த்தி கற்றுக் கொண்டோம். பிரதானமாக நம்மை மறைப்பதற்கென மொழியை பயன்படுத்த ஆரம்பித்தோம்.

கட்டிப்பிடி வைத்தியம்.. இதில் உள்ள நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

பல நேரங்களில் நீங்கள் பேச விரும்பும் விஷயத்தை முழுமையாய் சொல்ல தேவையான அனைத்து வார்த்தைகளை கொட்டியும், எதிரில் இருப்பவர் சரியாக அதற்கு எதிரான விஷயத்தை புரிந்து கொள்வார். நீங்கள் பேசிய வார்த்தைகள் யாவும் காற்றில் கரைந்து ஆவியாகும். நெஞ்சுக்கூடு ஒடுங்க செய்வதறியாத கையறுநிலையில் குலைவீர்கள். பற்றுக்கயிறு ஏதுமின்றி மனப்பள்ளத்தாக்குக்குள் விழத் தொடங்குவீர்கள். தரை தட்டுப்பட்டாலும் விழுந்து உடைந்து கொள்ளலாம். ஆனால், தரையே இல்லாமல் விழுந்து கொண்டே இருப்போம். உயிர் இறங்கி காலின் பெருவிரல் நுனியை அடைந்து நிற்கும். பிறகும் விழுந்து கொண்டே இருப்போம்.

நம்பிக்கைக்கும் உறுதுணைக்கும் அணைப்புதான் மிகச்சிறந்த வழி. வார்த்தைகளே தேவையில்லை. மொழியின் காலத்துக்கும் முன்னாக time warp-ல் சட்டென சென்று விட முடியும். உடலின் இளஞ்சூடு மற்றொரு உயிரின் பரிச்சயத்தை கொடுத்து விடும். பூவுலகில் நீங்கள் வாழ்வதற்கு ஒரு காரணம் இருப்பதாக நினைக்க செய்துவிடும்.

பெண்ணை அணையுங்கள். ஆணை அணையுங்கள். தோழனை அணையுங்கள். தோழியை அணையுங்கள். உங்கள் உறுப்புகளை தாண்டிய நீங்கள், அவருக்கு இருப்பதாக அறிவியுங்கள். காதலியை அணையுங்கள். காதலனை அணையுங்கள். காமத்தை தாண்டிய அவரின் அவசியத்தை புரிய வையுங்கள். தாயை அணையுங்கள். தந்தையை அணையுங்கள். அவர்களின் முக்கியத்தை தெரிவியுங்கள்.

கட்டிப்பிடி வைத்தியம்.. இதில் உள்ள நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இவ்வுலகம் மிக சிறியது. அதில் நம் வாழ்க்கைகள் மிக மிக சிறியவை. கண்கள் இடுங்கி, உயிர் ஒடுங்கி, அளவுகடந்த பதட்டத்துடன், பெரும் அவநம்பிக்கையுடன் நிராசைகளுடன் பிணங்களாக திரிந்து கொண்டிருக்கிறோம். ஒளி குன்றும் விளக்கை சின்னதாய் தூண்டினாலே பெரிதாய் பிரகாசம் கொடுக்கும். ஒரு சின்ன தூண்டலை மட்டும் கொடுத்து பாருங்கள். ஒட்டுமொத்த மனிதமே பிரகாசம் கொள்ளும். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அறிமுகமாகிறவர்கள் என எல்லாரின் இதயங்களும் துடிப்பதை அறிந்து உயிர் இருப்பதை சொல்லி, வாழ்த்து தெரிவியுங்கள்.

நீங்கள் அணைப்பை மறுக்கிறீர்கள் என்றாலும் அணைக்க மறுக்கிறீர்கள் என்றாலும் வாழ்க்கையை நிராகரிக்கிறீர்கள் என பொருள். உங்களின் சக மனிதனை அவமதிப்பதாக அர்த்தம். உங்கள் நேசத்துக்கும் மனதுக்கும் பூட்டு போட்டு ஆழ புதைத்து வைக்கிறீர்கள் என்பதாகும். அத்தனை ஆழத்துக்குள் உங்கள் மனதை புதைத்து பூட்டிவிட்டு நீங்கள் எங்கே சென்று வாழ்ந்துவிட போகிறீர்கள்?

banner

Related Stories

Related Stories