உணர்வோசை

பறக்கும் தட்டுகளில் வருவது யார்? Nazca கோடுகள் ஏன் வந்தன? : மனிதர்களின் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

UFOக்களில் வருவது யார்? பூமியில் உள்ள நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி மறையுமளவுக்கு உயர் தொழில்நுட்பமும் அறிவும் கொண்டவர்கள் யாராக இருப்பார்கள்?

பறக்கும் தட்டுகளில் வருவது யார்? Nazca கோடுகள் ஏன் வந்தன? : மனிதர்களின் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மேற்கத்திய உலகின் வானம் கடந்த நூறு வருஷங்களில் கொரினா பார்த்த பறக்கும் தட்டைப் போன்ற பல வடிவங்களை பார்த்திருக்கிறது. வழக்கமான விமானம், ராக்கெட் போன்ற வடிவங்கள் இல்லாமல் பல வடிவங்கள் வானில் தெரிந்திருக்கின்றன. அடையாளம் காண முடியாத இத்தகைய வடிவங்களுக்கு அறிவியல் உலகம் சூட்டியிருக்கும் பெயர் UFO. Unidentified Flying Objects. அடையாளம் கண்டிட முடியாத பறக்கும் பொருட்கள்!

UFOக்களில் வருவது யார்? பூமியில் உள்ள நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி மறையுமளவுக்கு உயர் தொழில்நுட்பமும் அறிவும் கொண்டவர்கள் யாராக இருப்பார்கள்? நிச்சயமாக பூமிவாசிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே மனித குலத்தின் அவதானிப்பு.

சூரியனைப் போன்ற பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களைச் சுற்றி கிரகங்களும் பிற விண்வெளிப் படலங்களும் இருக்கின்றன. அவை எவற்றிலும் மனிதனைப் போன்ற ஜீவராசிகள் இல்லை என்பதை அறிவியலால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஏனெனில் மனித குலத்தின் அறிவும் தொழில்நுட்பமும் மொத்த பிரபஞ்சத்தை அளக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. அந்த உண்மையில் இருந்துதான் ‘அளவிட முடியாத இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா?’ என்ற கேள்வி தொடங்குகிறது.

தான் வாழும் பூமியையும் அதை சுற்றி இருக்கும் கோள்களையுமே சில நூறு ஆண்டுகளாகத்தான் கண்டறிந்திருக்கும் மனித அறிவுக்கு புரிபடாத உயரத்தில் இன்னும் சில கேள்விகளும் இருக்கின்றன.

பறக்கும் தட்டுகளில் வருவது யார்? Nazca கோடுகள் ஏன் வந்தன? : மனிதர்களின் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

பெரு நாட்டில் இருக்கும் Nazca கோடுகள் அக்கேள்விகளில் ஒன்று.

சுமாராக 80 கிலோமீட்டர் தொலைவுக்கு வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் கோடுகளே, நாஸ்கா கோடுகள்! பறவை, குரங்கு போன்ற உயிரினங்களின் தோற்றங்களை கொண்டிருக்கும் இந்த நாஸ்கா கோடுகளும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் உண்டாக்கப்பட்டவை. ஆனால் என்ன காரணத்துக்காக உருவாக்கப்பட்டன என்பதற்கான பதிவுகள் ஏதும் இல்லை. வானில் இருந்து பார்த்தால் துலக்கமாக தெரியும் அளவுக்கு இத்தனை பெரிய கோடுகள் வரையப்பட்டது யாருக்காக? யார் வரைந்திருப்பார்கள்?

அடுத்த கேள்வி நாம் அனைவரும் ரசித்துப் பார்க்கும் பிரமிடுகளைப் பற்றி. 4,500 வருடங்களுக்கு முன் எகிப்திய ராஜாக்களான பெரோக்களின் இறந்த உடல்களை பாதுகாக்க கட்டப்பட்டவையே பிரமிடுகள். பெரோக்களின் உடல்களை பாதுகாப்பதன் வழியாக அவர்களின் ஆன்மாக்களை பிற உலகங்களுக்கு கடத்தும் முயற்சியாகவும் பிரமிடுகள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விண்வெளிப் பார்வைக்கு தெளிவாக தெரியும் குறியீடுகளாக பிரமிடுகளின் வடிவமைப்புக்கு காரணம் என்ன? இத்தனை பெரிய கற்களையும் சரியான கோணங்களில் அடுக்கி, அவற்றுக்குள் அறைகளையும் அமைக்கும் அளவுக்கான விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் 4,500 வருடங்களுக்கு முந்தைய நாகரிகத்துக்கு எப்படி சாத்தியப்பட்டிருக்கும்?

ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி ஆற்றங்கரைகளில் தங்கி நாகரிகத்தின் ஆரம்பக்காலங்களை மனிதன் அடைந்தபோது அவனுக்கான அறிவியல் ரீதியான உதவிகள் பூமியில் இருந்து கிடைத்திருக்காது என நம்பப்படுகிறது. பூமியைப் போல் உயிர் வாழும் சூழல் கொண்ட, இப்பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் ஒரு கோளில் இருந்து வந்த ஜீவராசிகள் உதவியிருக்கலாம்.

மனிதனின் முதல் முக்கிய தொழில்நுட்பமான நெருப்பை பயன்படுத்தும் வழிகளை அவன் அடைவது 16 லட்சம் வருடங்களுக்கு முன் தான். குரங்கிலிருந்து இன்று நாம் பார்க்கும் மனிதனாக முழு வடிவம் அவன் பெற்றது 2 லட்சம் வருடங்களுக்கு முன்னால். கல் ஆயுதங்களை 1 லட்சம் வருடங்களுக்கு முன் தான் பயன்படுத்தத் தொடங்குகிறான். விவசாயத்தையே மனிதன் கற்றறிந்தது சுமார் 6000 வருடங்களுக்கு முன் தான். ஐரோப்பியர்கள் தங்கள் நாடுகளை விடுத்து பூமியின் பிற பிரதேசங்களை நோக்கி நகரத் துவங்கியது 15ஆம் நூற்றாண்டில். 18ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பியாவில் தொழிற்புரட்சிக்கான ஆரம்ப விதை போடப்பட்டது.

ஐரோப்பியர்களின் தொழில்நுட்பம் மிகவும் சமீபமானது. அவர்களுக்கு முன்னமே, சிந்து சமவெளி போன்ற ஆற்றங்கரைகளில் பிற மனிதக்கூட்டங்கள் நகரத்தையே கட்டக்கூடிய அளவுக்கான தொழில்நுட்பத்தை எட்டியிருந்தன. பல்லாயிரம் அடிமை மக்களின் ரத்தங்களை உறிஞ்சி மிகப்பெரும் கோட்டைகளையும் கட்டிடங்களையும் பேரரசுகள் கட்டியெழுப்பியிருந்தன. அறிவில் உயர்ந்தவர்களாக தங்களை கருதிக் கொள்ளும் ஐரோப்பியர்களுக்கு பிற இனங்களின் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் புரியவில்லை. அவர்களுக்கு அத்தகைய அறிவு இருந்தது என்பதையும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. விளைவு, பிரமிடுகளை ஏலியன்கள் கட்டியதாக நம்பத் தொடங்கினார்கள்.

உண்மையில் பூமிக்கு அந்நியமான ஜீவராசி, மனிதன்தான். உயிரை உருவாக்கிய இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் தன்னை அந்நியப்படுத்திக் கொண்டே இருக்கிறான். தன் பேராசைக்காக இயற்கையை அழித்து பூமியின் உயிர் வாழ்க்கைச் சூழலை இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறான். மேலும் மேலும் தனிமை ஆவதில் பயமும் குழப்பமும் கொண்டு ஏதோவொரு நம்பிக்கை கரம் வானில் தோன்றி தன்னை காப்பாற்றிவிடாதா என ஏங்குகிறான்.

பிற உயிர்களை அழித்து பூமியையும் அழித்து அடுத்து தான் வாழ செவ்வாய் கிரகத்தில் காலனிகள் கட்டத் தொடங்கியிருக்கிறான். ஒருவேளை மனிதனை தொடர்புகொள்ளும் வேற்றுக்கிரக ஜீவராசி என ஒன்று இருந்தால் அது மனிதனாகத்தான் இருக்கும். அவன் பூமியில் இல்லாத வேறு கிரகத்தில் இருந்து தொடர்பு கொள்வான். நம் எதிர்காலத்தில் இருந்து நமக்குச் சேதி அனுப்புவான். அந்தச் சேதியை கேட்கும் வரையாவது நாம் அழியாமல் நம்மை காப்பாற்றிக் கொள்வோமா என்பதுதான் கேள்வி!

banner

Related Stories

Related Stories