உணர்வோசை

“’திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா?” - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?

முப்பது வயதுக்கும் குறைந்த இந்த இளைஞர்களை இரண்டாம் கட்டத் தலைவர்களாக வைத்துக் கொண்டுதான் அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்தார்.

“’திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா?” - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க தன் பிறந்தநாளை திரும்பிப் பார்க்கிறது!

திராவிட இயக்கத்தின் திருவிழா மாதம் செப்டம்பர் மாதம்.

செப்டம்பர் 15 - அண்ணா பிறந்தநாள்!

செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்தநாள்!

செப்டம்பர் 17 - திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தநாள்!

இந்த மூன்றும் திராவிட இயக்கத்தின் திருவிழா நாட்கள்.

திராவிடர் கழகத்தில் இருந்தும், பெரியாரிடம் இருந்தும் அண்ணா வெளியேறி தி.மு.க.வை பெரியாரின் பிறந்தநாளிலேயே ஆரம்பித்தார். பெரியார் - அண்ணா பிரிவுக்கு பல காரணங்கள் உண்டு. அரசியல் நோக்கத்துக்கான முறையில் திராவிட கழகத்தின் அமைப்பு இருக்க வேண்டும் என்பது அண்ணாவின் விருப்பம். பெரியார் இதை ஏற்கவில்லை! 1946-ல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி வழங்கினார். பெரியார் அதில் கலந்துகொள்ளவில்லை!

திராவிடர் கழகத்தினர் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று பெரியார் சொன்னார். இதில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை!1947, ஆகஸ்ட் 15-ம் நாளான இந்திய சுதந்திர தினத்தை பெரியார் துக்க நாள் என்றார். அண்ணா இன்ப நாள் என்றார். இது வெளிப்படையான முரண்பாடாக பார்க்கப்பட்டது. அண்ணாவின் திரையுலக, இலக்கிய உலக ஈடுபாடுகளை பெரியார் ரசிக்கவில்லை.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

1948-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி மாநாட்டில் அண்ணாவும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. பெரியார் தேர்தலில் நிற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் அண்ணா ஆட்சியை கைப்பற்றி அதிகாரத்திற்கு வருவதன் மூலம் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என விரும்பினார். பெரியார் - மணியம்மையாரின் திருமணம் அண்ணா வெளியேறுவதற்கும், தி.மு.க.வை துவக்குவதற்கும் உடனடிக் காரணமாக அமைந்துவிட்டது.

பெரியார் - மணியம்மை திருமணத்திற்குப் பிறகு ஐந்துவாரங்கள் தீவிர ஆலோசனையை அண்ணாவும், அவரது ஆதரவாளர்களும் செய்தார்கள். சென்னை, பவளக்காரதெரு, 7ஆம் எண்ணுள்ள இல்லத்தில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழுக் கூட்டம் கூடியது. அக்கூட்டத்திற்கு குடந்தை கே.கே.நீலமேகம் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தை கைப்பற்ற வேண்டும். புதிய தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. திராவிடர் கழகத்தை கைப்பற்ற வேண்டும் என அதிகம் வலியுறுத்தியவர் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் தான்.

ஆனால் அண்ணா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று அவர் சமர்ப்பித்த அறிக்கையில், “கழகத்தை கைப்பற்றுவது என்பதற்கு ஒரு கால அளவோ, ஒரு உருவமோ ஏற்படாது. நாம் ஒருபுறம் திராவிடர் கழகம் என்ற லேபிளுடனும், அவர் மற்றோர் புறம் அதே லேபிளுடன் உலவுவது, இரு சாராருக்கும் இடையில் மோதவிட்டு வாழவிரும்பும் சந்தர்ப்பவாதிகள் ஆட்டமாடுவதும், இந்தச் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு, நான் முன்னாள் குறிப்பிட்டபடி பாசிசமும், பழமையும், நாட்டைநாசமாக்குவதுமான காரியம் தான் நடைபெறும் நாம் மிகப் பலர் - அவர்கள் மிகச் சிலர் என்பது அல்ல, முக்கியம்.

“’திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா?” - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?

அந்தச் சிலருடன் போராடும் பலர் இறுதியில் காணப் போகும் பலன் என்ன? என்பதும், அதற்கான நேரத்தையும், நினைப்பையும், சக்தியையும் பாழ்படுத்துவது சரியா என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சொல்லுகி றேன்” என்று முத்தாய்ப்பாய் சொல்லி கழகத்தை கைப்பற்றுவதை நிராகரித்தார்.

திராவிடர் கழகத்தின் நிர்வாகக்குழுவில் 48 பேர் இருந்தார்கள். இதில் 32 பேர் கண்டனத்தை தெரிவித்தார்கள். கட்சியை நடத்திச் செல்லும் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெரியாரின் திருமண முடிவை எதிர்த்தனர். புதிய இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்ற பொதுக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்று புதிய கட்சிக்கு பெயர் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு தோழர்களுடன் விவாதித்து எப்படி எடுக்கப்பட்டது என்று இராம.அரங்கண்ணல் - இவர் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ‘திராவிட நாடு’ இதழில் துணை ஆசிரியராக இருந்தவர் - எழுதுகிறார்.”

திராவிட நாடு பத்திரிக்கை அலுவலகத்தின் மொட்டைமாடியில் ஒரு உரையாடல் நடந்து கொண்டிருந்தது. அதில் இராம.அரங்கண்ணல், கே.டி.எஸ்.மணி, ஆர்.கே.மூர்த்தி, மதியழகன், இரா.செழியன், வேலாயுதம் உரையாடலில் இருந்தார்கள். அண்ணாவும் வந்தார். கட்சி ஆரம்பிப்பதற்கு அதிக கால தாமதம் செய்யக்கூடாது. விரைவில் கட்சி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து அண்ணாவிடம் வலியுறுத்தப்பட்டது. அப்பொழுது நடந்த உரையாடலை இராம.அரங்கண்ணல் எழுதுகிறார் “அப்போ ஒரு கட்சி ஆரம்பிக்கிற சூழ்நிலை வந்தாச்சு! அதுதானே உங்கள் எண்ணம். அரங்கண்ணல்! பேப்பரைக் கொண்டா.. சொல்லுங்கப்பா ஒரு பேர் கட்சிக்கு...!”- இது அண்ணா.

“’திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா?” - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?

“தமிழ்நாடு சோஷலிஸ்ட் கட்சி” - இது எப்படி அண்ணா இருக்கு?” - இது வேலாயுதம் (வாணன்) “இந்தப்பாரு வேலாயுதம் ! நாம புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கிறதா இருந்தா, அதிலே திராவிடர் என்பதும் இருக்கனும், கழகம் என்பதும் இருக்கனும்... ஆமாம் ! அது முக்கியம்” - இது அண்ணா. “திராவிட சோசலிஸ்ட் கழகம் - திராவிட சமதர்மக் கழகம் - திராவிட சமுதாயக் கழகம் - திராவிட தீவிரவாதிகள் கழகம் - இப்படி ஒவ்வொருவரும் மனதுக்கு பட்டதை சொல்லலானோம்” அண்ணா எல்லாவற்றையும் குறித்துக்கொண்டார்கள். பிறகு ஆங்கிலத்தில் பெயர்களை சொல்லிப் பார்த்தோம்.

அண்ணா கேட்டார், “இந்தப் பெயர் எப்படி இருக்கு?“எந்தப் பெயர் அண்ணா?”

Dravidian Progressive Federation அதாவது Dravidian-னும் வருது Federation-னும் வருது. தமிழில் திராவிடர் முன்னேற்றக் கழகம். “ரொம்ப நல்லா இருக்கு!” என்று ஒரே குரலில் சொன்னோம்.

அதிலும் கொஞ்சம் யோசிங்க! Dravidian என்று சொல்லலாமா - அதாவது திராவிடர் என்பதா? திராவிட என்பதா?” அண்ணா எங்களை யோசிக்கச் செய்தார்.

“ஆமாண்ணா! திராவிடர் என்றால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கி விடுகிறது. அதிலும் நாமெல்லாம் சோஷலிஸ்ட்கள். பகுத்தறிவு கொள்கைகளை யார் ஒத்துக்கிட்டாலும், நம்ம கட்சியில் இருக்கலாம். அய்யாவுக்கும், நமக்கும் இந்த விசயத்தில் ‘டிஃப்ரன்ஸ்’ தெரிஞ்சே ஆகனும். அதனால் திராவிட என்ற நிலப்பகுதியைக் குறிக்கிறதுதான் ரொம்ப பொருத்தம்” என்று மதியழகன் அந்த யோசனைக்கு விடையிறுத்தார்.

“அப்ப நம்ப கொள்கைகளை ஒத்துக்கிட்டா அவுங்களும் Dravidian தானே..?” அண்ணா.

“’திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா?” - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?

கட்டுரை எழுத நான் வைத்திருந்த அட்டையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயர் முதன்முதலாக எழுதப்படட்டது! எல்லோரையும் கலந்து ஒரு முடிவுக்கு வரும் வரையில் இந்த பெயரை முடிவு செய்ததாக சொல்லவேண்டாம் - என்றும், எங்களுக்கு தெரிவித்தார் அண்ணா. சென்னைக்கு வந்து, தான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டு கருத்தறிந்தார்கள். “இதுதாம்பா முடிவான பெயர்” என்று ஒரு முடிவுக்கு வந்து எழுதினார்கள். இப்படித்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் உருவாயிற்று.

(கே.ஏ.மதியழகன் தாம் வைத்திருந்த சட்டக்கல்லூரி நோட்டுப் புத்தகத்தில்தான் அண்ணா, “திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் பெயரை எழுதியதாக அநேக மேடைகளில் பேசியிருக்கிறார். நாமும் அப்பேச்சை கேட்டிருக்கிறோம். இந்த இரு நிகழ்வுகளும் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதுகிறார்)

திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழுவில் பெரும்பான்மையினர் பரிந்துரைப்படி, அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பின் வழி பணியாற்றுவது என்று 17.09.1949, சனிக்கிழமை அறிவித்தார். தி.மு.க. பிறந்துவிட்டது !

“’திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா?” - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?

அண்ணா தி.மு.க.வின் முதல் பொதுச் செயலாளரானார். நிர்வாக வசதிகளுக்காக 133 பொதுக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்தார். இப்பொதுக்குழுவில் இருந்து நான்கு முக்கிய துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவை 1) அமைப்புக்குழு, 2) பிரச்சாரக் குழு 3) அமைப்புத் திட்டக்குழு 4) நிதிக் குழு.

பொதுச் செயலாளர் - அறிஞர் அண்ணா

பிரச்சாரக்குழு செயலாளர் - நாவலர் நெடுஞ்செழியன்

அமைப்புக்குழு செயலாளர் -என்.வி.நடராசன்

சட்ட திட்டக்குழு செயலாளர் -கே.ஏ.மதியழகன்

நிதிக்குழு செயலாளர் - காஞ்சிமணி மொழியார்

பிரச்சாரக் குழுவில் தலைவர் கலைஞர், ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, டி.கே.சீனிவாசன், இன்னும் பலர் இருந்தனர். 133 பொதுக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். தலைவர் என்ற பொறுப்பை பெரியாருக்காகவே அண்ணா விட்டுவிட்டார்.

தி.மு.க.வை ஆரம்பித்தபோது அண்ணாவுக்கு வயது- 40.

தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் வயது:

1) நாவலர் நெடுஞ்செழியன் - 29 வயது

2) பேராசிரியர் அன்பழகன்- 27 வயது

3) தலைவர் கலைஞர்- 25 வயது

4) ஆசைத்தம்பி - 25 வயது

5) மதியழகன் - 23 வயது

6) சம்பத்- 23 வயது

முப்பது வயதுக்கும் குறைந்த இந்த இளைஞர்களை இரண்டாம் கட்டத் தலைவர்களாக வைத்துக் கொண்டுதான் அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்தார். தி.மு.க.வின் முதல் பொதுக்கூட்டம் 18.09.1949ஆம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்றது. சொற்பொழிவாளர்கள் 26 பேர் அமருவதற்கேற்ற வகையில் மேடை உயரமாகவும், அழகுறவும் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்திற்கு தலைமை வகிக்கும்படி பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்களை டி.எம்.பார்த்தசாரதி அவர்கள் கேட்டுக்கொண்டார். கே.கோவிந்தசாமி, வடசென்னை வி.முத்துச்சாமி ஆகிய இருவரும் வழிமொழிந்தார்கள். பெத்தாம்பாளையம் பழனிச்சாமி கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

“’திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா?” - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?

இக்கூட்டம் நடத்துவதற்கான நிதியை வழங்கியவர்கள்:

அறிஞர் அண்ணா - 1,000.00 ரூபாய்

பெத்தாம்பாளையம் பழனிச்சாமி - 100.00ரூபாய்

கே.கே.நீலமேகம் - 100.00 ரூபாய்

ப.உ.சண்முகம் - 100.00 ரூபாய்

எஸ்.நீதிமாணிக்கம் - 100.00 ரூபாய்

ஆவுடையப்பன் - 51.00 ரூபாய்

மொத்தம் = 1,451/- ரூபாய்.

இந்தப் பணத்தில் தான் தி.மு.க.வின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 01.01.1950ல் முதல் மாவட்ட மாநாடு- ஒரே நாள் மாநாடாக திருச்சியில் நடைபெற்றது. கழகம் ஆரம்பித்த நான்கு மாத காலங்களில் இந்த மாநாடு நடைபெற்றது.

கழகம் ஆரம்பித்த ஓராண்டில் 35,000 உறுப்பினர்கள். 505 கிளைக் கழகங்கள். 12 மாவட்டக் கழகங்கள் உருவாகின. தி.மு.க. துவங்கிய ஓராண்டிற்குள் 2,035 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்து சட்டத்திருத்த பெண்கள் மாநாடு 7 இடங்களில் நடத்தப்பட்டது. கோவையில் முத்தமிழ் வளர்ச்சி மாநாடு நடத்தப்பட்டது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் தி.மு.க.வின் வளர்ச்சி தெரிந்தது.

அண்ணாவின் காலத்திற்குப் பிறகு கழகத்தின் தலைமைப் பொறுப்பை கலைஞர் ஏற்றார். 45 ஆண்டுகள் தன் இமைமூடா உழைப்பாலும், இதயம் வாடாத உற்சாகத்தோடும் கழகத்தை காத்து வளர்த்தார். இப்போது திராவிட இயக்கத்தின் செயல் புயலாக உழைத்துவரும் நம்முடைய தமிழக முதல்வர் தலைவர் தளபதியார் அவர்கள் தலைமையில் கழகம் பீடுநடை போடுகிறது. 72 வயதான திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் தளபதியார் அவர்கள் தலைமையில் அரிமா நோக்கோடு தான் வந்தபாதையை திரும்பிப் பார்க்கிறது.

- கம்பம் பெ.செல்வேந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர்

குறிப்பு: இக்கட்டுரையின் முக்கிய குறிப்புகள் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய தி.மு.க. வரலாறு என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

நன்றி: முரசொலி

banner

Related Stories

Related Stories