உணர்வோசை

'கொரோனாவை விடக் கொடிய தொற்று': சமூகநீதியை ஒழிக்க நினைக்கும் சதிகாரர்களின் விஷம பிரச்சாரத்தை வீழ்த்துவோம்!

கொரோனாவை விடக் கொடிய சாதிய தொற்றுநோயினை பரப்பிட நினைக்கிறது சமூக நீதியை ஒழிக்க நினைக்கும் சதிகாரக் கூட்டம். இந்த கூட்டத்தின் விஷமப்பிரச்சாரம் பெரியார் மண்ணில் நிச்சயம் எடுபடாது.

'கொரோனாவை விடக் கொடிய தொற்று': சமூகநீதியை ஒழிக்க நினைக்கும் சதிகாரர்களின் விஷம பிரச்சாரத்தை வீழ்த்துவோம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

காலங்காலமாக அடக்குமுறை என்னும் தீக்குண்டத்தில் அகப்பட்டுக் கொண்ட பெண்களை, சுயமரியாதை எனும் கைத்தடியைக் கொடுத்து மீட்டு வந்தார் தந்தை பெரியார். அவரது திராவிட இயக்கம், பெண் அடிமையாவதை தடுக்க சுயமரியாதை திருமணம் என்ற யுக்தியை கண்டுபிடித்தது.

ஆணுக்கு பெண் சமம் என்பதை நிறுவ, பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க, சமூக நீதியை நிலைநிறுத்த சுயமரியாதை திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள சுக்கிலநத்தம் என்ற ஊரில் சண்முகம் மற்றும் மஞ்சுளா என்ற இணையருக்கு, 1928-ம் ஆண்டு முதல் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் நடத்தி வைத்தார். அந்த திருமணம் ஒரு விதவைத் திருமணம். மணமகள் மஞ்சுளா ஒரு விதவை. அப்போது நடைபெற்ற சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி அங்கீகாரம் பெறாதவையாகவே இருந்தன. இதனால் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்வோர் பல துன்பங்களை அனுபவித்தனர்.

‘கலப்பு திருமணம்’ செய்வது ‘தெய்வக்குத்தம்’ என்று 'குய்யோ முய்யோ'வென கத்தியவர்களுக்கு, ‘மனித ஜாதியில் பிறந்த ஆணுக்கும், மனித ஜாதியில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது எப்படி கலப்பு திருமணம் ஆகும்? நான் என்ன மனிதனுக்கும், மாட்டுக்குமா திருமணம் செய்து வைத்தேன்’ என்று கொதித்து எழுந்தார் தந்தை பெரியார்.

1967-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணச் சட்டம், பேரறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்று நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, மசோதா சட்டமாகும் முன், அதன் வரைவு நகலை தந்தை பெரியாருக்கு அனுப்பி வைத்தார் பேரறிஞர் அண்ணா. அதில், ‘மாலை மற்றும் தாலி’ என்று குறிப்பிட்டு தாலி என்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்ததை கவனித்த பெரியார், தாலியை கட்டாயமாக்க வேண்டாம், ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என்பதாக ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பின்னே, அதில் திருத்தம் மேற்கொண்டு அதனைச் சட்டமாக்கினார் அண்ணா.

தாலி என்பது பெண்ணுக்கு தடையாகி விடக்கூடாது என்ற உயரிய சிந்தனையை வெளிப்படுத்தினார் தந்தை பெரியார்.

ஜாதிக்கான வேர், சுய ஜாதி திருமண முறை என்பதைக் கண்டறிந்த தந்தை பெரியார், அந்த நச்சுச் செடியை வேரறுக்க ஜாதி மறுப்பு திருமணம் எனும் ஆயுதத்தை தந்தை பெரியார் கையில் எடுத்ததும் அதற்கான சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை 28.11.1967 அன்று கொண்டு வந்தார் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, கலப்புத் திருமணம் (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரும் செய்துகொள்ளும் திருமணம்) செய்து கொண்ட தம்பதியருக்கு தங்கப்பதக்கமும், சான்றும் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தினார். சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் இருந்து நீங்க, பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்திட, சமூக நீதி காத்திட கலப்புத் திருமண உதவித் திட்டங்கள் கை கொடுத்தன.

பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய சமுதாய மறுமலர்ச்சி 1974ல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியிலும் தொடர்ந்தது. கலைஞர், கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு ஒன்றரை சவரன் மதிப்புள்ள தங்கப்பதக்கமும், சிறுதொழில் தொடங்க வட்டியில்லாக் கடனும், 3 சென்ட் வீட்டு மனையும், 200 ரூபாய் ரொக்கப்பணமும் அளித்தார். அதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும் இந்த திட்டம் தொடர்ந்தது.

1996 ஆம் ஆண்டு கலப்பு திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் பெயரில் தொடர்ந்தது. கூடுதல் நிதியுதவி 10 ஆயிரமாக வழங்கப்பட்டது. 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்த திட்டத்தின் பெயரினை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு மண உதவித்திட்டம் என்று மாற்றினார். 2006 ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி மலர்ந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் இந்த திட்டத்தின் நிதியுதவியை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தினார்.

2011ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கத்தை இணைத்து கொடுத்தார். தற்போது ரூ.50 ஆக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

'கொரோனாவை விடக் கொடிய தொற்று': சமூகநீதியை ஒழிக்க நினைக்கும் சதிகாரர்களின் விஷம பிரச்சாரத்தை வீழ்த்துவோம்!

ஆக, தந்தை பெரியார் போட்ட விதை, பேரறிஞர் அண்ணாவால் தண்ணீர் ஊற்றப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் மரமாக வளர்க்கப்பட்டு இன்று பூத்துக் குலுங்குகிறது கலப்புத் திருமண உதவித் திட்டம் என்ற அந்த சமூக நீதிக்கான வழிகாட்டி மரம்.

திராவிட முன்னேற்றக் கழகம், 2021 ஆண்டு தேர்தல் அறிக்கையில், அஞ்சுகம் அம்மையார் கலப்புதிருமண உதவித் திட்டத்திற்கு நிதியுதவி ரூ.60 ஆயிரமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை, சமூக அநீதியாளர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதோ என்னவோ... பதறுகிறார்கள். சமூக ஊடகங்களில் ஊளையிடுகிறார்கள். சாதி, சமய ஒற்றுமைக்கு வேட்டு வைக்க வெடித்து கிளம்புகிறார்கள்.

கூப்பாடு போடும் கூட்டம் கதறுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கு எதிராக சாதிய சண்டைகளை மூட்டிவிட அக்கிரகாரங்களின் ஏவல்களாக ஊளையிடுகிறார்கள். கலப்பு மண உதவித்திட்டத்தால் சுயசாதி கவுரவம் போவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்த கலப்பு மணத் நிதியுதவித் திட்டத்தை புரிந்து கொள்ளாத விஷமிகள் பொய் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் இரண்டு வகைகளில் இந்த திட்டம் செயல்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை வேறு வகுப்பைச் சேர்ந்தவர் திருமணம் செய்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும் என்பது முதல்வகை. பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்துகொண்டால் அவருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்பது இரண்டாம்வகை.

ஆக, கலப்புத் திருமண உதவித்திட்டம் என்பது தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்டவருக்கும்தான். இதில் யாருக்கு என்ன பாதிப்பு வந்தது? ஏன் பதறுகிறார்கள் இவர்கள். பாசிச பா.ஜ.க., தனது ஆக்டோபஸ் கரங்களால் தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் நேரத்தில் சுயமரியாதை திருமணங்களும், கலப்புத் திருமண நிதியுதவி திட்டங்களும் சமூக நீதியை நிலைநிறுத்த உதவுகின்றனவே. அதற்காகத்தான் கலப்புத் திருமண நிதியுதவி குறித்த விஷமப் பிரச்சாரங்கள்.

'கொரோனாவை விடக் கொடிய தொற்று': சமூகநீதியை ஒழிக்க நினைக்கும் சதிகாரர்களின் விஷம பிரச்சாரத்தை வீழ்த்துவோம்!

கடந்த சில தினங்களாக தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க., சமூக வலைத்தள பிரிவைச் சேர்ந்த ஒருவர் சிக்கியிருக்கிறார். மற்றொரு பெண்மணி விரைவில் சிக்க இருக்கிறார். இவர்களின் விஷமப் பிரச்சாரம் தி.மு.க.,வின் வெற்றியை ஒருபோதும் பாதிக்காது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்ற தமிழர்களின் உணர்வை யாராலும் சீர்குலைக்க முடியாது.

இந்த தேர்தல் காலத்தில், கொரோனாவை விட கொடூரமான தொற்றை பரப்பி வரும் சமூக நீதிக்கு எதிரான கும்பலிடம் இருந்து பெரியார் மண் தம்மை காப்பாற்றிக் கொள்ளும். ஆம். பாசிச பா.ஜ.க., தமிழகத்தில் தொற்றிவிடாமல் இருக்க வலுவான தடுப்பூசியாய் நம் வாக்கினை பயன்படுத்துவோம். சமூக நீதி காக்க உதயசூரியனில் வாக்களித்து நம்மையும் காத்துக் கொள்வோம்.

banner

Related Stories

Related Stories