உணர்வோசை

'ஆழம் காண முடியாத வாழ்க்கைத் தத்துவம்' - எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் நினைவு தின சிறப்புக் கட்டுரை!

மலையாள இலக்கிய உலகின் மகத்தான எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர். தமிழில் மொழிபெயர்க்கப்பட பஷீரின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் புதிய வாசிப்பு வாசலைத் திறந்து வைத்தது.

'ஆழம் காண முடியாத வாழ்க்கைத்  தத்துவம்' - எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் நினைவு தின சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

மலையாள மொழியின் நவீன இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர். 1908 -ம் ஆண்டு ஜனவரி 19-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கம் தாலுகாவில் 'தலையோலப்பரம்பில்' பிறந்தார். ஜூலை 5, 1994'ல் மறைந்தார்.

பஷீர் என்ற எழுத்தாளரை புரிந்துகொள்வதற்கு முன்பாக பஷீர் என்ற மனிதரை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய சுதந்திர போராட்டம் வீறுகொண்டு நடைபெற்றுவந்த வேளையில் இளைஞரான பஷீர் தனது வீட்டை விட்டு வெளியேறுகிறார். விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தார். கோழிக்கோடு கடற்கரையில் உட்கார்ந்து உப்பு தயாரிக்கிறார். ராஜதுரோக வழக்கு அவர் மீது விழுகிறது. இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் அவர் இருந்தபோதான அனுபவங்கள் ‘மதிலுகள்’ எனும் நாவலாக பின்னாளில் உருவாகிறது.

'ஆழம் காண முடியாத வாழ்க்கைத்  தத்துவம்' - எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் நினைவு தின சிறப்புக் கட்டுரை!

மனிதர்கள் மட்டுமின்றி பஷீரின் கதைகளில் அவர் வீட்டு கோழி, ஆடு, பாம்பு, நரி என அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அவரது காதாபாத்திரங்களின் பெயர்கள் கூட 'சிங்கிடி முங்கன்' , 'எட்டுகால் மும்முஞ்சு' என விசித்திரமாக இருக்கும். தன் முதுமையை பற்றிச் சொல்லும்போது கூட 'நான் இப்போது ஐந்தாறு தரமான வியாதிகளுக்குச் சொந்தக்காரன்' என்கிறார் கிண்டலாக.

பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ராஜத்துரோக வழக்கு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பஷீர், அங்கு கிடைத்த அனுபவங்களையே 'மதிலுகள்' என்ற நாவலாக எழுதினார். சிறையில் இருக்கும்போதே அவருக்கு சிறையில் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒருவருடன் மதில் ஒன்றின் இருபுறமும் இருந்து பேசிகொள்வதன் வாயிலாக உருவாகும் காதலும் அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களும் அற்புதமான இலக்கியமாக உருவானது.

சிறைச்சாலைக்குள் பீடி, அச்சு வெல்லம், ஊறுகாய் என்று நிறையப் பொருட்கள் வெகு சுலபமாக விற்கப்படுகின்றன . சிறை வார்டன்களுக்கு வழங்கப்படும் லஞ்சம், சிறைகளின் உள்ளும் தலைவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை என்று பஷீர் தனது மதிலுகள் நாவலில் சிறைத்துறை சீர்கேடுகளை உரைக்கிறார். சமூகத்தின் மீது அதீத அக்கறை கொண்ட எழுத்தாளனாக மதிலுகள் குறுநாவலில் வைக்கம் முகமது பஷீர் உருவெடுத்தார்.

'ஆழம் காண முடியாத வாழ்க்கைத்  தத்துவம்' - எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் நினைவு தின சிறப்புக் கட்டுரை!

எனது சதையும், ரத்தமும், எலும்பும் தோலும் அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம் என்று சொன்ன வைக்கம் முகமது பஷீர், வீட்டை விட்டு வெளியேறி நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூதாட்டக்காரர், திருடன் என பல பாத்திரங்களை வாழ்க்கையில் ஏற்றவர்.

பஷீர் சில காலம் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் மனம் பேதலித்தவர்களுடன் இருந்தபோது அவர், ‘பாத்தும்மாயுடே ஆடு’ என்ற நாவலை எழுதினார். அதன் முன்னுரையில் அவர் எழுதுகிறார்.

நாலு பக்கங்களிலும் 20, 30 பைத்தியக்காரர்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். கைகளில் விலங்கு பூட்டியவர்களும், கால்கள் தளைகளால் பிணைக்கப்பட்டவர்களுமாகப் பலவிதமான மனிதர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்று எழுதுகிறார். பஷீர் என்ற எழுத்தாளரின் நல்ல அதிர்ஷ்டத்தின் ஒரு பகுதியே பஷீரின் பைத்திய நிலை, அவரது ஆழங்காண முடியாத வாழ்க்கைத் தத்துவத்தில் இந்த உண்மையைக் காணலாம் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன்.

பஷீர் தனது கதைகளில் உண்மையைத் தேடுபவராக இருந்தார். பஷீரின் நாவல்கள் அனைத்தும் கேரளத்தின் முஸ்லீம் சமுதாய நிலையை விவரிப்பவை. ‘பாத்தும்மாயுடே ஆடு’, ‘முகச்சீட்டுகளிக்காரண்டே மகள்’, ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ போன்ற நாவல்களில் தனது சமூகத்தைப் பற்றி எடுத்துரைக்கும் மனப்பான்மை அவரிடத்தில் இருந்தது. ‘என்டுப்புப்பாக் கோரான யுண்டார்னு’ ( எனது தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது) என்ற நாவலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பேரில் சிலகாலம் இந்த நாவலுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

'ஆழம் காண முடியாத வாழ்க்கைத்  தத்துவம்' - எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் நினைவு தின சிறப்புக் கட்டுரை!

பஷீரின் கதையில் வரும் எந்தப் பாத்திரத்துக்கு எதிராகவும் நமது மனங்களில் வெறுப்போ, அருவருப்போ எழ முடியாது. பஷீரின் பெரும்பாலான கதைகள் நான் என்று தொடங்கி பஷீரையே பிரதான பாத்திரமாகக் கொண்ட கதைகள். அப்படி இருப்பதனால் அவர் கதைகளில் வரும் சம்பவங்களும், சமூகம், தலைவர்கள், சம்பிரதாயங்கள் பற்றிய கிண்டல்களும், அதே கிண்டல் கலந்த பார்வையை கொண்டு சமூகத்தின் மீது கேள்வி எழுப்பும் மனசாட்சியாக இருக்கிறார் பஷீர்.

பால்யகால சகி, பாத்துமாயுடே ஆடு, மதிலுகள் என நூறு பக்கங்களுக்கு உள்ளாகவே அவர் எழுதிய ஒவ்வொரு நாவல்களும் நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும். பஷீர் என்ற எழுத்தாளன் நீண்ட பிரசங்க முறையைப் பின்பற்றவில்லை. பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கவில்லை. ஆனால், மனிதரின் மனசாட்சியாக இருந்து பேசியிருக்கிறார்.

முடிவற்ற சூன்யம் என்றால் வெறுமை அதாவது ஒன்றுமில்லாமை என்பது பொருள். அந்த வெறுமையில் இருந்துதான் எல்லாம் தோன்றியிருக்கிறது. தெரிந்தது, தெரியாதது அனைத்தும் என்று கூறும் பஷீரின் படைப்புகளும் வெறுமையில்தான் தொடங்கியிருக்கின்றன.

ஆனால், பஷீர் இன்னமும் இலக்கிய வாசகர்களிடம் முழுமையாகி இருக்கிறார். எளிமையின் பூரணமாக. இன்னும் நிறைந்துகொண்டே இருப்பார். ஒளிவீசும் முழுநிலவாக.

banner

Related Stories

Related Stories