
மாநில சுயாட்சிக்கு வேட்டு!
முரசொலி தலையங்கம் (16.11.2026)
எதையும் உருவாக்கத் தெரியாத விஜய், இருப்பதை அழிப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒன்றிய – மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையறுக்க திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான ஆணையத்தைக் கலைத்துவிட்டார் இன்றைய முதலமைச்சர் விஜய். அவரது ஆட்சிக்கு எத்தனையோ களங்கங்கள் உள்ளது. அதில் மிகப்பெரிய களங்கம் இது.
‘இது சட்டபூர்வமான அமைப்பு அல்ல’ என்கிறது விஜய் அரசு. இவர்களுக்கு சட்டம் தெரியுமா? சட்டபூர்வமான ஆட்சிதான் நடத்துகிறார்களா? சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? விஜய் நியமித்துள்ள ஆட்கள் எல்லாம் சட்டபூர்வமாகத் தான் நியமிக்கப்பட்டுள்ளார்களா? இந்த நாட்டில் யார் சட்டத்தைப் பற்றி எல்லாம் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா?
நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்து மறுநாளே அந்த அலுவலகத்தை பூட்டி, பெயர் பலகையை எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
அந்தக் குழு முதல் கட்டமாக ஒரு அறிக்கை கொடுத்துள்ளது. அந்த அறிக்கையை இணையத் தளத்தில் இருந்து எதற்காக நீக்க வேண்டும்? எந்தளவுக்கு மிக மோசமான, கடைந்தெடுத்த எதேச்சதிகார சிந்தனையுடன் விஜய் அரசு செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அகில இந்தியப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளைக் கொண்ட CCG அமைப்பு முதலமைச்சர் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. 72 அதிகாரிகள் இதில் கையெழுத்து போட்டுள்ளார்கள்.
“இக்குழுவை கலைத்ததை புரிந்து கொள்ள முடியவில்லை. உயர்மட்டக் குழு, சட்டப்பூர்வ அந்தஸ்து பெறாத அமைப்பு என த.வெ.க. அரசு குறிப்பிடுகிறது, ஆனால் மாநில சட்ட ஆணையமும், ஒரு நிர்வாக அமைப்பே. அதற்காக அதைக் கலைத்து விடுவார்களா? இந்திய சட்ட ஆணையம் கூட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு அல்ல. அதுவும் ஒரு நிர்வாக அமைப்புதான். ஒன்றிய – மாநில உறவுகளை ஆய்வுசெய்வதை உயர்நிலைக் குழுவிடமிருந்து மாநில சட்ட ஆணையத்திற்கு மாற்றுவது ஒரு பிற்போக்கான நடவடிக்கை ஆகும். அரசியல் நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் அரசு ஊழியர்களான நாங்கள், த.வெ.க. அரசின் முடிவுக்குப் பின்னால் வலுவான நியாயத்தை காண முடியவில்லை. உங்கள் அரசாங்கம் உண்மையான கூட்டாட்சி ஜனநாயகக் கொள்கையை முழுமையாக ஏற்கவில்லை”என்று கண்டித்துள்ளார்கள். இதற்கு த.வெ.க. அரசு பதில் சொல்ல வேண்டாமா?
மாநில சுயாட்சிக்காக, மாநில உரிமைகளுக்காக வாய்கிழியக் கத்திய கட்சிகள் சில இன்றைய த.வெ.க. அரசாங்கத்தை உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் மனப்பூர்வமாக ஆதரித்து வருகின்றன. அந்தக் கட்சிகளுக்கு விஜய் எடுத்தது தவறான முடிவு எனத் தெரியவில்லையா? அழுத்தம் தர வேண்டாமா? முதலமைச்சரைப் போலவே வாய்மூடித்தான் கிடப்பீர்களா?
மாநில சுயாட்சிக் கொள்கை என்பது தி.மு.க.வின் கொள்கை, இக்குழுவை அமைத்தவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் என்பதற்காக மவுனம் காக்கிறீர்களா?
பல்வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட மக்களைக் காப்பாற்றும் அரசியல் கொள்கை வடிவமாக மாநில சுயாட்சி இருக்க வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகிய காலம் முதல் சொல்லி வருகிறது. மாநிலக் கட்சியாக இருந்தாலும் பரந்து பட்ட இந்தியாவைக் காக்கும் உன்னதமான நோக்கத்துடன் இதனை முன்மொழிந்து வருகிறது தி.மு.க.
ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆய்வதற்காக 1969–ஆம் ஆண்டே இராஜமன்னார் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை ஒன்றிய அரசிற்கும், பிற மாநில அரசுகளுக்கும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அதன்பின்னர் ஒன்றிய அரசால் நீதியரசர் சர்க்காரிய கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதியரசர் வெங்கடாசலையா கமிஷன், நீதியரசர் எம்.எம்.பூஞ்சி கமிஷன் என பல்வேறு குழுக்கள் அமைக்க அதுவே அடித்தளமாகவும் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2024–ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்க நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்கள். பேராசிரியர் நாகநாதன், அசோக் வரதன் ஷெட்டி ஐ.ஏ.எஸ். (ஓய்வு) ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். அக்குழு தனது அறிக்கையின் முதல் தொகுதியை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது.
ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு விரைவு படுத்தப்பட்டுள்ளதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது ஓர் ஆரோக்கியமற்ற போக்கு என்பதையும், இதனைச் சீர்செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அந்த அறிக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. மிக வலுவான ஒரு கூட்டாட்சிதான் இன்றைய தேவை என்பதையும் அக்குழுவின் அறிக்கை சொல்கிறது. இது ஏன் விஜய்க்கு கசக்கிறது? சதிக்கும்பலின் வலையில் முதலமைச்சர் சிக்கி இருக்கிறார். இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வைக்கப்பட்ட வேட்டு ஆகும். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியை வைத்துள்ளார் விஜய்.
சுயாட்சி கொண்ட மாநிலங்களால்தான் மக்களைக் காக்க முடியும். மக்களுக்கு நெருக்கமானவை மாநில அரசுகள் தான். எனவே மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் தேவை. அத்தகைய சூழ்நிலை ஒன்றிய அரசால் தானாக செய்து தரப்படாது. குறைந்தபட்சம் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கு நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான ஆணையம் தேவை. இந்த அறிக்கையை ஆயுதமாகக் கொண்டுதான் இந்தியா முழுமைக்குமான மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
ஆட்சிக்கு வந்து இருக்கப் போகும் குறைந்தபட்ச நாட்களுக்குள் அனைத்தையும் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு அழித்து விட்டுச் செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்து செயல்பட்டு வருகிறார் விஜய். ஒன்றிய மாநில அதிகாரங்களை வரையறுக்கும் நீதியரசர் குழுவை மீண்டும் செயல்பட த.வெ.க. அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.






