
முரசொலி தலையங்கம்
06.11.2026
முகத்திரையைக் கிழித்துக் கொள்ளும் விஜய்!
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், போதைக்கு ஆதரவாகவும், அரசியலுக்கு எதிராகவும் பேசி இருக்கிறார்.
த.வெ.க. சார்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருட்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். ‘அந்தப் பக்கம் போய் விடாதீர்’ எனச் சொல்லிவிட்டு, ‘வாழ்க்கையில் Fun, Enjoyment இருக்கும், ஆனா அடிமையாகிட வேண்டாம்’ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.
‘எதற்கும் அடிமையாகிவிட வேண்டாம், ஆனால் Fun, Enjoyment இருக்கும்’ எனச் சொல்வது, ‘Taste செய்வதால் தவறில்லை’ என்று சொல்கிறாரா முதலமைச்சர் விஜய்?
அறிவுரை என்ற பெயரில் ‘போதைப் பொருள் Taste செய்வது ஒன்றும் தவறில்லை’ என்று சொல்ல வருகிறாரா விஜய்?
பொறுப்புள்ள பதவியில் இருக்கும் விஜய், ‘போதைப்பொருள் பயன்பாடு அறவே கூடாது. அது உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடும்’ என்றுதானே பேசியிருக்க வேண்டும். ‘ Fun, Enjoyment இருக்கும், ஆனா அடிமையாகிவிட வேண்டாம்’ என்றால் என்ன அர்த்தம்?
சில வாரங்களுக்கு முன் மாணவர்களை போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வைத்தவர்தான் முதலமைச்சர் விஜய்.
‘’போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதி மொழி எடுத்தார். எடுக்க வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மாணவர்களை இந்த உறுதிமொழி எடுக்க வைத்தார்.
அவரேதான் இன்று மாற்றிப் பேசுகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழ்நாட்டு மாணவ சமுதாயமும் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அதே நாளில்தான் அமைச்சர் சரத்குமாரின் வீடியோவானது வெளியானது.

விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து ஏ.டி.எம். கார்டு வைத்து பொடி நசுக்கினார் அமைச்சர் சரத்குமார். அந்த வீடியோ வெளியானது. அவர் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது ‘பவுடர்’ இழுக்கிறார். மொபைல் போன் திரையில் ‘பவுடர்’ போட்டு ஏ.டி.எம்.கார்டு மூலமாக அதைச் சீர் செய்கிறார். 500 ரூபாய் நோட்டு வைத்து இதை மறைத்துக் கொள்கிறார். இதையே வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று ரீல்ஸ் ஆக அவரே வெளியிட்டுக் கொள்கிறார். இந்த அமைச்சரை இதுவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை விஜய். இத்தகைய விஜய்யிடம் இருந்து இது போன்ற அறிவுரையைத்தானே எதிர்பார்க்க முடியும்?
விஜய்யின் மிக அருமையான தத்துவப் பாடம் உண்டே?
‘’பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சேர்ஸ் அடிக்க கெட வெட்டி கொண்டாங்கடா
ஏன் பசி நான் தணிக்க – என்று பாடியவரிடம் இந்த மாதிரியான அறிவுரை தானே வரும்?
“மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான் பாரு’’ – என்பது அந்தப் பாடலில் வரும் பொன்வரி ஆகும். அதில் உருவானவர்தான் இன்றைய அமைச்சர் சரத்குமார். அவருக்குப் பெயரே ‘கில்லி’ சரத் என்பதுதான். எந்த மாதிரியான கும்பலிடம் தமிழ்நாடு சிக்கி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவில்லையா?
போதையை ‘டேஸ்ட்’ பாருங்கள் என்பதைப் போல இன்னொரு முக்கியமான அறிவுரையையும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

தேர்தலுக்காக அன்று மாணவர்கள் – குழந்தைகளை பயன்டுத்திய விஜய் இப்போது, ‘மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை’ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். எதனால் இந்த மாற்றம்? மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். அவர்கள் முழு அரசியலையும் தெரிந்து கொண்டால் தன்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வார்கள் என்ற பயமா?
தேர்தலுக்கு முன், ‘பெற்றோரிடம் அடம் பிடித்து விஜய் மாமாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கள்’ என்று சொன்னவர் தான் இந்த விஜய். இன்று, ‘ படிக்கும் வயதில் அரசியல் தேவையில்லை’ என்று அப்படியே திருப்பிப் போடுகிறார். விஜய்யின் உண்மை முகத்தை மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்ற பயமா?
‘அவரை நம்பி ஏமாந்துவிட்டோம்’ என்று பெரியவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் இப்போது சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ‘நிறைய பண்ணுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டோம்’ என்று இளைஞர்கள் பலரும் இப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதனால்தான், ‘அரசியல் வேண்டாம்’ என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் விஜய்.
குழந்தைகளை தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியது தொடர்பாக விஜய் மீது வழக்கு இருக்கிறது. ‘குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்காக எனது வெற்றியை செல்லாது என்று சொல்ல முடியாது’ என்று உயர்நீதிமன்ற மனுவில் குறிப்பிட்டவர்தான் விஜய். ஆம், குழந்தைகளை பரப்புரைக்குப் பயன்படுத்தினேன் என்பதை ஒப்புக் கொண்ட விஜய், ‘உங்களுக்கு அரசியல் தேவையில்லை’ என்று இன்று ஏன் சொல்ல வேண்டும்?
மொத்தத்தில் அவர் முகத்திரையை அவரே கிழித்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார். அசிங்கமாகவும், அருவெறுப்பாகவும் இருக்கிறது முகம்.






