
முரசொலி தலையங்கம் (23.09.2026)
மெகாவாட் பொய்கள்!
"ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே! ஒன்னு மின்வெட்டு... இன்னொன்னு அரிவாள் வெட்டு!” என்று ஒரே போடாகப் போட்டார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! நான்கு மாத ஆட்சி நான்கே சொற்களில் முடித்துவிடப்பட்டது.
விஜய் ஆட்சிக்கு வந்தது முதல் வெளிச்சம் போய்விட்டது என்பதன் அடையாளமாக, எங்கும் எப்போதும் எல்லா ஊரிலும் எல்லா நேரத்திலும் மின்வெட்டு. மின்சாரம் கட்!
‘அஞ்சு கட்சி மாறிய அமாவாசையான' இத்துறையின் அமைச்சர் நிர்மல்குமாருக்கு இதுபற்றிய கூச்சமே இல்லை. தனது துறையைக் கவனிக்கத் துப்பு இல்லாமல் அடுத்தவர் துறைக்கு எல்லாம் ஆளுக்கு முந்தி பதில் சொல்லித்திரிகிறார். எப்போதாவது மின்வெட்டு குறித்து பதில் சொல்ல முன்வந்தால் மெகாவாட் கணக்கில் பொய்களைச் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் மின்வெட்டே கிடையாது என்பார். ஆதாரத்துடன் கேள்வியை எழுப்பினால் பொய்மூட்டைகளை அவிழ்ப்பார்.
இதுவரை அவர் சொன்ன பொய்களைப் பாருங்கள்...
• தி.மு.க.வினரால் மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது.
• மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒரு சில ஊழியர்களால் திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுகிறது.
• பியூஸ் கட்டையைத் திருடிச் சென்று விடுவதால் மின்வெட்டு ஏற்படுகிறது.
• ஆமாம் மின்சாரப் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முயற்சித்து வருகிறோம்.
• வெயில் அதிகமாக இருப்பதால் மின்சாரத் தேவை அதிகம் ஆகிவிட்டது.
• மின்வெட்டைப் பெரிதாக்குகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 14 மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது. பல மணிநேரம் மின்சாரம் இல்லாமல் அங்கு இருக்கிறார்கள்.
• மின் துறை ஊழியர்கள் மத்தியில் 1 விழுக்காடு ஊழியர்கள் கருப்பு ஆடுகள். அவர்களால் மின்வெட்டு திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
இந்த வரிசையில் நேற்றைய தினம் ஒரு மெகா பொய்யைச் சொல்லி இருக்கிறார். “பி.எஸ்.என்.எல். கேபிள் பணிக்களுக்காகத் தோண்டுவதால் மின் வெட்டு ஏற்படுகிறது” என்கிறார். நாடு முழுக்க பி.எஸ்.என்.எல். பணிக்காகத் தோண்டுகிறார்கள் என்றால் அத்துறைக்கு எத்தனை லட்சம் ஊழியர்கள் தேவை? ஊர் முழுக்க குண்டும் குழியுமாகக் கிடக்கிறதா? ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
இவருக்கு முட்டுக் கொடுக்க வந்துள்ளார் இன்னொரு அமைச்சர் செங்கோட்டையன். அவர் என்ன சொன்னார் என்றால்...
•காற்று அடிப்பது குறைவாக இருக்கிறது. அதனால் காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை.
• வெளிசந்தையில் எங்கேயும் மின்சாரம் வாங்க முடியவில்லை. அதனால்தான் மின்சாரம் தட்டுப்பாடு -என்கிறார் செங்கோட்டையன்.

• இன்னொரு மகா புத்திசாலி இந்த அமைச்சரவையில் இருக்கிறார். ‘ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு 49 ரூபாய் திருப்பித் தருகிறார்கள்' என்று சொன்ன புத்திசாலி. ஆதவ் அர்ஜூனா என்பது அவர் பெயர். இவர் ‘நான்கு கட்சி மாறிய அமாவாசை”. அவர் சொல்கிறார்...
"மழை குறைந்ததால் தண்ணீரில் இருந்து வரும் மின்சாரம் குறைந்திருக்கிறது. காற்று நின்று போனதால் அந்த மின்சாரமும் கிடைக்கவில்லை” என்று சொல்கிறார் ஆதவ் அர்ஜூனா. இதைக் கல்வெட்டாக அடித்து அதற்கு கீழே ஆதவ் அர்ஜூனா என்று போட்டால் காலா காலத்துக்கு பயன்படும், வழிகாட்டும் பொன்மொழி ஆகும். எவ்வளவு பெரிய புத்திசாலிகளை விஜய் தன்னைச் சுற்றி வைத்துள்ளார் என்பதற்கு உதாரணம் இவர்களது பேச்சுகள்.
ஆட்சி நடத்த துப்பு இல்லை. திராணி இல்லை. மக்கள் தேவைகளை அறிந்து வழங்க அறிவு இல்லை. திறமை இல்லை. வாய்க்கு வந்த காரணத்தைச் சொல்கிறார்கள். 'காரணம் சொல்பவன் காரியம் செய்ய மாட்டான்' என்பது பழமொழி. அதைத்தான் பார்க்கிறோம்.
த.வெ.க. அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதியே இருளில் கிடக்கிறது. மின்சாரம் போனால் நான்கு ஐந்து மணிநேரத்துக்கு வருவது இல்லை. குழந்தைகள், முதியோர், நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். வீட்டில் தூங்க முடியாமல் வாசலில் உட்கார்ந்து இருக்கிறார்கள் மக்கள். சாலை மறியல் செய்கிறார்கள். மின்வாரிய அலுவலகங்கள் பூட்டுப் போடப்பட்டுள்ளன. பொதுமக்களின் போன் அழைப்புகளை எடுக்க ஆள் இல்லை. மின்வாரிய அலுவலகங்கள் பொதுமக்களால் முற்றுகையிடப்படுகின்றன.
பொதுமக்களுக்கு நிம்மதி போய்விட்டது என்றால் தொழில் துறையினருக்கு தொழிலே போய்விட்டது. தொடர்மின்வெட்டு காரணமாக தொழில் நிறுவனங்களை தொடர்ச்சியாக இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோவை தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் நாள்தோறும் 18 கோடி ரூபாய் இழப்பு என்று செய்திகள் வெளியாகி உள்ளன. கோவையில் நாள் தோறும் 7 முதல் 18 முறை மின்வெட்டு ஏற்படுவதாக தொழில் துறையினர் தெரிவிக்கிறார்கள். தொடர் மின்வெட்டு காரணமாக மூலப்பொருள் வீணாகிறது. இயந்திரங்கள் பழுதடைகின்றன. தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது, ஆனால் வேலை இல்லை என்கிற நிலைமை ஏற்படுகிறது.
இப்படி ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இருட்டில் தள்ளப்பட்டுள்ளது விஜய் ஆட்சியால். ஏன் எங்கும் மின்சாரம் இல்லை என்றால், ஒரு அமைச்சர் தி.மு.க. வைக் குறை சொல்கிறார். இன்னொரு அமைச்சர் காற்றைக் குறை சொல்கிறார். மற்றொரு அமைச்சர் மழையையும் காற்றையும் குறை சொல்கிறார். இயற்கையையே சவாலுக்கு அழைக்கிறார்கள் சினிமாவைப் போல!
ஆளத் தெரியாத விஜய் படம் நடிக்கப் போகலாம். அமைச்சர்கள் அவருக்கு கதை பண்ணப் போகலாம்!






