முரசொலி தலையங்கம்

“சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம்தான் இது.. யாராவது இதை தேர்வு செய்வார்களா?” - முரசொலி தாக்கு!

இந்திய நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி தான் செலவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டப் போகிறார்களாம் என்று முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

“சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம்தான் இது.. யாராவது இதை தேர்வு செய்வார்களா?” - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

22.09.2026

பட்டினப்பாக்கம் மீனவர்கள் எதிர்ப்பு!

உருப்படியாகச் செய்ய வேண்டிய எதையும் முதலமைச்சர் விஜய் செய்யவில்லை. ஒரு புதிய ஆட்சி வந்தால், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். அதைச் செய்யவில்லை. அறிவிக்கப்பட்ட ஓரிரு திட்டங்களும் அரைகுறையாகச் செய்து தரப்பட்டுள்ளன. அல்லது கடந்த ஆட்சி செய்த திட்டங்களைத் தொடர வேண்டும். அதையும் செய்யவில்லை விஜய். பல திட்டங்களை முடக்கிவிட்டார். பல திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றிவிட்டார். இதுதான் விஜய் செய்திருப்பது.

அவருக்கோ அவரது அமைச்சர்களுக்கோ கனவுகள் இல்லை. சிந்தனைத் திறன் இல்லை. தொலை நோக்குப் பார்வை இல்லை. மொத்தத்தில் ஆட்சி அதிகாரத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் கெட்ட எண்ணங்கள் மட்டும் நிறைய இருக்கின்றன. அவதூறுகள் மூலமாக ஆட்சி நடத்துவது போலக் காட்டிக் கொள்ள நினைக்கிறார். தி.மு.க. மீது பழிபோட்டு தனது ஆட்சியை நகர்த்தப் பார்க்கிறார்.

ஊரான் வீட்டு நெய்யில் தனக்கு ஸ்வீட் செய்து கொண்டு இருக்கிறார். நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் தொடங்கி வைக்க சொந்தச் செலவில் போகவேண்டியவர் அரசாங்க காசில் லண்டன் சென்று வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் காலம் காலமாக இதுவரை ஆண்ட அனைத்து முதலமைச்சர்களும் இருந்த அறையை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றி6 கோடி ரூபாயைச் செலவு செய்தார். மேட்டூர் அணைத் தண்ணீரைத் திறந்து வைக்க சேலம் சென்ற ஒரு மணி நேரத்துக்கு 5 கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவாம். இத்தகைய சூழலில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போகிறாராம்.

இந்திய நாடாளுமன்றம் கட்டவே 900 கோடி ரூபாய் தான் செலவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 1200 கோடி ரூபாயில் தலைமைச் செயலகம் கட்டப் போகிறார்களாம். ரூ.6 கோடியில் தனக்கு அறை கட்டியதிலேயே பல்வேறு முறைகேடுகள் நடந்தன. ரூ.1200 கோடியில் கட்டும்போது ஆயிரக்கணக்கான முறைகேடுகள் நடக்கத்தான் போகிறது.

“சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம்தான் இது.. யாராவது இதை தேர்வு செய்வார்களா?” - முரசொலி தாக்கு!

தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தேர்வு செய்துள்ள பட்டினப்பாக்கம் என்பது மீனவர்கள் காலம் காலமாக வாழும் பூமி ஆகும். பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட உள்ள பகுதிக்கு தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டுமீங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் ஆக மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளாகவே உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவ மக்கள்.

இப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது என்று முள்ளிக்குப்பம் மீனவர்கள் பஞ்சாயத்து சபை கூடி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். விஜய் அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையாக இவர்கள் போராடி வருகிறார்கள். ‘சுறா படத்தில் மீனவராக நடித்த விஜய், நிஜத்தில் எங்களை ஏமாற்றி விட்டார்' என்று கொந்தளிக்கிறார்கள்.

முள்ளிக்குப்பம் பகுதியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டமன்றம், தலைமைச் செயலகக் கட்டட வளாகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என்றும் தமிழ்நாடு நிதித் துறைச் செயலாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்.

வரலாற்றுப் பூர்வமாக தங்களுக்கு இப்பகுதியில் வாழ்விட உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும், அதனடிப்படையில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம் என்றும் மீனவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்பகுதியை கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கான நீண்ட காலக் குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நீண்ட காலமாக அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

“தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் உருவாக்கப்படும் அதி உயர் பாதுகாப்பு வளையங்கள், போக்குவரத்துத் தடைகள், விழா நேரக் கட்டுப்பாடுகளால் பாரம்பரிய சாலையோர மீன் விற்பனை, வலை பராமரிப்பு மற்றும் அன்றாட மீன்பிடித் தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது” என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

“சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம்தான் இது.. யாராவது இதை தேர்வு செய்வார்களா?” - முரசொலி தாக்கு!

ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவது தான் நடக்கப் போகிறது. மேலும், இது சட்டமன்றம், தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கு சரியான இடமும் அல்ல.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் இது. சென்னையில் மட்டும் 206 பேர் மரணம் அடைந்தார்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரைப் பகுதிகளைச் சூறையாடியது அந்தச் சுனாமி. கடற்கரையோரப் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தார்கள். இத்தகைய ஒரு கடற்கரைப் பகுதியை யாராவது தலைமைச் செயலகம் கட்டத் தேர்வு செய்வார்களா?

இதன் மூலமாக மீனவர்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார் விஜய். அவரது பல செயல்பாடுகள் மர்மமாக இருக்கின்றன. சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை ரகசியமாக வைத்துள்ளது இந்த அரசு. விமான நிலையங்களை எடுத்து பராமரிக்கும் தனியார் நிறுவனங்களின் அதிபர்கள், விஜய்யை நேரில் வந்து சந்தித்துள்ளார்கள். இதற்கும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததற்கும் பின்னணி உள்ளது. விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு, அந்த இடத்தை வேறு பணிகளுக்கு மடைமாற்றம் செய்ய விஜய் திட்டமிடுகிறார். அத்தகைய கெட்ட எண்ணத்தில்தான் மீனவர்களிடம் இருந்தும் நிலங்கள் பறிக்கப்பட இருக்கிறது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதால் மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்படும். அவர்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். கடலோரச் சூழலியல் பாதிப்பை அடையும். காலநிலைப் பாதிப்புகளும் காலப்போக்கில் ஏற்படும். பொதுமக்களுக்கும் கடலுக்கும் கடற்கரைக்குமான உறவு பாதிக்கப்படும். ரூ.1200 கோடி செலவு செய்து கட்டடம் கட்ட பாதுகாப்பான இடமும் அது அல்ல. அரசு ஊழியர்கள் அச்சமற்ற நிலையில் அங்கு பணி புரியவும் முடியாது. எனவே பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது அனைத்து வகையிலும் பாதகமான முடிவே ஆகும்.

banner

Related Stories

Related Stories