அரசியல்

தேவையற்ற காரணங்களைக் கூறி குரியன் குழு கலைப்பு! : த.வெ.க அரசுக்கு ‘தி இந்து’ நாளேடு கண்டனம்!

“பா.ஜ.க.வைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் குரியன் குழுவை பெருமளவில் வரவேற்றிருந்தன. எனவே, இந்தக் குழு தனது பணியை நிறைவு செய்ய அனுமதிப்பது சிறப்பாக இருக்கும்.”

தேவையற்ற காரணங்களைக் கூறி குரியன் குழு கலைப்பு! : த.வெ.க அரசுக்கு ‘தி இந்து’ நாளேடு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டிய குரியன் குழுவை த.வெ.க அரசு தேவையற்ற காரணங்களைக் கூறி கலைத்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளேடு குற்றம்சாட்டியுள்ளது.

தி இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கத்தில் தெரிவித்ததாவது,

இந்தியக் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சி மற்றும் ஒன்றிய - மாநில உறவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க முந்தைய தி.மு.க அரசால் குரியன் ஜோசப் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய த.வெ.க அரசு எந்தவொரு வலுவான காரணமோ அல்லது அவசியமோ இன்றி, இக்குழுவை திடீரெனக் கலைத்துவிட்டு, அதன் பணிகளைத் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது.

குரியன் குழு தனது பணிகளை மிகுந்த புலமைத்தன்மையுடனும், தீவிரத்துடனும் மேற்கொண்டது. பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கையின் முதல் பகுதி இதற்குச் சான்றாகும்.

தேவையற்ற காரணங்களைக் கூறி குரியன் குழு கலைப்பு! : த.வெ.க அரசுக்கு ‘தி இந்து’ நாளேடு கண்டனம்!

இக்குழு ஒரு “சட்டப்பூர்வமற்ற அமைப்பு” என்று தவெக அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மாநில சட்ட ஆணையத்திற்குப் பல பொறுப்புகள் இருப்பதால், முந்தைய மாநில அரசுகள், பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் தொடர்பான முரண்பாடுகளை ஆய்வு செய்யவும், தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் உயர்மட்டக் குழுக்களை அமைத்து வந்தன.

குரியன் குழுவிற்கும் மாநில சட்ட ஆணையத்திற்கும் வழங்கப்பட்ட பணிகளின் தன்மை மற்றும் வரம்புகள் தொடர்பாக த.வெ.க அரசின் வாதம் நிலைத்து நிற்கவில்லை.

செப்டம்பர் மாதம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இக்குழுவின் செயல்பாட்டை "முடக்குவதற்கான" முயற்சி நடப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

குரியன் குழுவின் முதல் அறிக்கையை நடுநிலையுடன் ஆய்வு செய்தால், மாநில சுயாட்சி, தொகுதி மறுவரையறை மற்றும் ஆளுநர் பதவி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து, அது எவ்வளவு ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்துள்ளது என்பது புலப்படும்.

பா.ஜ.க.,வைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அறிக்கையை பெருமளவில் வரவேற்றிருந்தன. எனவே, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, இந்தக் குழு தனது பணியை நிறைவு செய்ய அனுமதிப்பது சிறப்பாக இருக்கும்.

இது, ஒன்றிய - மாநில உறவுகளில் இணக்கமான சூழலை உருவாக்கி, மிகவும் சமநிலையான கூட்டாட்சி நிர்வாகக் கட்டமைப்பை நோக்கிய அரசியல் முயற்சிகளை வலுப்படுத்தும் என்று தி இந்து ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories