
முரசொலி தலையங்கம் (08-09-2026)
கொளத்தூர் வழக்கு எழுப்பிய கேள்விகள்
கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அந்த வழக்கு எழுப்பிய கேள்விகள் இன்னமும் பதில் சொல்லப்படாமல் அப்படியே இருக்கின்றன.
தி.மு.க. தலைவர் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இதில் ஒரு மனுவைதான் உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
இது குறித்து தி. மு.க. சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள குறைப்பாட்டை நாம் அனை வருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாகப் பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில், தலைவர் தந்த ஒப்புதலால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார். இதுவே முழு உண்மை ஆகும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள குறைபாடு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு நீதிமன்றம் உரிய பதிலை அளிக்கவில்லை.
"ஒருவேளை அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட அது தொடர்பாக தேர்தல் வழக்கில்தான் கோரமுடியும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்- றால் தேர்தலில் 2, 3 இடங்களைப் பிடித்தவர்கள் தேர்தல் வழக்குகளை தொடர்வதற்குப் பதிலாக இதுபோல ரிட் வழக்குத் தொடர வாய்ப்பாக அமைந்துவிடும். இந்த வழக்கில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகளின் உண்மைத் தன்மை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய முடியாது” என்று உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
‘குற்றச்சாட்டுகளை ஆராய முடியாது' என்று சொல்லி இருக்கிறார்களே தவிர, ‘குற்றச்சாட்டுகள் தவறானவை' என்று சொல்லவில்லை.
கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரையில் தி.மு.க. சட்டத்துறை சார்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க வலியுறுத்தப்பட்டது. இவை ஆராயப்பட்டது. அப்போது பல்வேறு தவறுகள் நடந்துள்ளது என்பது கண்டறியப்பட்டது. இதனை சட்டத்துறை செயலாளர் என். ஆர். இளங்கோ ஊடகங்களுக்கு அறிவித்தார்.
*29.07.2826- முதல் 05.08.2026 வரை Checking and Verification நடைபெற்றது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் சோதனையில் 5 கருவிகள் செயல்படவில்லை.
*கொளத்தூர் தொகுதியில் பரிசோதிக்கப்பட்ட இயந்திரங்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றில் கடுமையான கோளாறுகளும், சீல் வைப்பதில் முறைகேடுகளும் உள்ளன.
*தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயர் இருந்த வாக்கு செலுத்தும் கருவி (Ba11ot Unit)-ஐ வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Contro1 Unit) அடையாளம் காண இயலவில்லை.
*ஒரு வாக்கு இயந்திரத்தில் பாதுகாப்பு சீல்கள் புதியவையாக நிரப்பப்படாமல் இருந்தது .

*வாக்குச்சாவடி 157 இல் நான்கு இயந்திரங்களிலும் இருந்த 7 முகவரி அட்டைகளும் எந்த விவரமும் எழுதப்படாமல் காலியாக புத்தம் புதிய அட்டைகளாக ஒட்டப்பட்டு இருந்தன. எழுதப்பட்ட விவரங்கள் மறைந்து விடக் கூடாது என்பதற்காக முகவரி அட்டையின் பின்புறம்தான் அரக்கு முத்திரை வைக்க வேண்டும். ஆனால் இங்கு விவரங்களே எழுதப்படாத காலியான அட்டையின் முன் பக்கத்தில் அரக்கு முத்திரை வைக்கப்பட்டிருந்தது.
*இரண்டு அரக்கு முத்திரைகள் இருக்க வேண்டும். இரண்டு அரக்கு முத்திரைகள் இல்லை.
*வழக்கமாக ஒவ்வொரு இயந்திரமும் சீல் வைக்கப்பட்டு, அதன் மீது address tag என்கிற காகிதம் ஒட்டப்பட்டிருக்கும். அதில் எண்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். வாக்குச்சாவடி எண் 75-இல் வாக்குப்பதிவு செலுத்தும் இரண்டு யூனிட்களில் எண்கள் மாறியிருந்தன.
*வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை அல்லது பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பது அறிவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எங்களுக்குத் தெளிவாகியுள்ளது. எனவே, இந்- தத் தேர்தல் முறையான தேர்தல் அல்ல என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவை அனைத்தும் தி.மு.க. சட்டத்துறை எழுப்பிய கேள்விகள் ஆகும். இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரியிடம் மூத்த வழக்கறிஞர் என். ஆர் . இளங்கோ கேள்வி எழுப்பினார். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 19 கேள்விகளை எழுதிக் கொடுத்துள்ளது தி.மு.க. சட்டத்துறை. இந்தப் பழுதுகளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி விளக்கங்களை முறையாக, முழுமையாக இதுவரை யாரும் தரவில்லை.
இவை அனைத்தும் கண்டறியப்பட்ட தவறுகள் ஆகும். நடந்துள்ள முறைகேடுகள் ஆகும். இக்கேள்விகள் இன்னமும் பதில் சொல்லப்படாமல் அப்படியே இருக்கின்றன. இதுபோல இன்னும் எவ்வளவோ நடந்திருக்கலாம். இதுபோல இன்னும் எத்தனையோ தொகுதியில் நடந்திருக்கலாம். இவற்றுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டாமா? இந்த முறைகேட்டை ஆய்வு செய்ய வேண்டாமா தேர்தல் ஆணையம்?
‘மக்களின் தீர்ப்பே இறுதியானது' என்பதை, 'இயந்திரங்களின் தீர்ப்பே இறுதியானது' என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தைத்தான் கொளத்தூர் வழக்கு எழுப்புகிறது.






