முரசொலி தலையங்கம்

“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!

மேகதாது அணை விவகாரத்தில் தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்றநிலையில், விமர்சனங்களை புறம்தள்ளிவிட்டு ஒற்றுமையக் காட்ட வேண்டும் என முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

முரசொலி தலையங்கம்

24.06.2026

கர்நாடகத்தின் பிடிவாதமும்! நடுவர் மன்ற கடிவாளமும்!

கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே ஆவோம் என்ற முடிவோடு செயல்பட்டு வருகிறது.‘கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டக் கூடாது'என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனை தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளன.

இது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் ஒரு திருத்தம் கொடுத்தார்கள்.“கடந்த 4.3.2026 அன்று அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு நீர்வளத்துறை அரசு செயலாளர், மத்திய ஜல்சக்தித் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். 'கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பிரச்சினை புதிய சிக்கல் என்பதால், நதிநீர் தாவா சட்டம் 1956 இன் படி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என்று கோரி இருந்தார். ஆகவே இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தில் அந்தக் கருத்தையும் சேர்க்க வேண்டும். புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கருத்தையும் இந்த தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.

“எதிர்க்கட்சித் தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தை தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்”என்று முதலமைச்சர் விஜய் அவர்களும் சொல்ல அதுவும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. முதலமைச்சரின் தீர்மானம்,திருத்தியவாறு பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது'என்று பேரவைத் தலைவர் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அனைத்துக் கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டார்கள்.

கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டினால் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் என்பதை அனைவரும் ஒற்றுமையாகக் காட்டினார்கள்.

“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!

மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக அரசு முனைப்புக் காட்டும் போதெல்லாம் தமிழ்நாடு அதனை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5, 2015 ஆம் ஆண்டு மார்ச் 27, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6, 2022 ஆம் ஆண்டு மார்ச் 21 - ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று நிறை வேற்றியது ஐந்தாவது முறையாகும். தமிழ்நாடு ஒற்றுமை உணர்வோடு மேகதாது அணையை எதிர்க்கிறது என்பதை மெய்ப்பித்து வந்துள்ளோம். அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் நடந்து கொள்ளக் கூடாது.

எதிர்க்கட்சித் தலைவரால் திருத்தம் கொடுக்கப்பட்டு, முதலமைச்சரால் ஏற்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளாலும் ஆதரித்து வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விமர்சிப்பது தமிழ்நாட்டின் ஒற்றுமை உணர்வைச் சிதைப்பது ஆகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஒற்றுமையாக இல்லை என்று கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் நினைக்க இது வழிவகை செய்யும்.

*காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

*கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் ஒன்றிய அரசு அளிக்கக் கூடாது.

*கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோகூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

*கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பிரச்சினை புதிய சிக்கல் என்பதால், நதிநீர் தாவா சட்டம் 1956 இன் படி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெளிவாக இருக்கிறது. இதனை விமர்சிப்பது கர்நாடக அரசுக்கே சாதகமாக முடியும்.

காவிரி உரிமை பற்றியோ, காவிரி நடுவர் மன்றம் நமக்கு அளித்துள்ள நீர் பகிர்வு குறித்தோ புதிய நடுவர் மன்றம் பரிசீலிக்கப் போவது இல்லை. மேகதாது அணையைப் பற்றியது மட்டுமே இது. தண்ணீர் வழங்குவது குறித்த பிரச்சினை அல்ல இது. கர்நாடக அரசு இன்று அவசரம் காட்டி வருகிறதே, அதனை உடனடியாக நாம் தடுத்தாக வேண்டும்.

“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!

காவிரி நடுவர் நீதி மன்றம் மூலமாகத்தான் நமக்கான உரிமையை கடந்த காலத்தில் பெற்றோம். 1991 ஜூன், 25இல் காவிரி நடுவர் மன்றமானது கர்நாடகா ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, 205 டி.எம்.சி., நீர்வழங்க வேண்டும் என இடைக்கால தீர்ப்பு கூறியது. 2007 பிப்ரவரி 5 இல் இறுதி தீர்ப்பு வழங்கியது. எனவே நடுவர் மன்றம் என்பது மிகமிக அவசியமானது ஆகும்.

2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 2018 ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடும் மிக மிக அவசியமானதாக அமைந்துள்ளது.

ஒன்றிய அரசானது இரண்டு மாநிலத்தையும் பகைத்துக் கொள்ளாத முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்கும். அந்த நேரத்தில் நடுவர் மன்றம்போன்ற அமைப்புகள்தான் நடுநிலையான தீர்ப்பை வழங்க முடியும். எனவே, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற முடிவை விமர்சிக்கும் கட்சிகள் இதனைப் புரிந்து கொண்டு, எதிர் வாதங்கள் வைப்பதை தவிர்க்கலாம்.

banner

Related Stories

Related Stories