தமிழ்நாடு

காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும் நமது உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது.

காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைமீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியது வருமாறு:-

செய்வதை மட்டும்தான் சொல்வோம் என்று அவர்கள் கூறியதை அவர்களே மறந்துவிட்டனர். 'கஜானா காலி' என்ற பிரச்சாரம் கேலிக்கூத்தாகிவிட்டது.பல்வேறு திட்டங்களுக்கு 'வெற்றித் திட்டம்' என அலங்காரமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் எங்களின் திராவிட மாடல் திட்டங்கள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. உங்களின் புதிய திட்டங்களைத் தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஆயிரம் கைகளை வைத்து ஆதவனை மறைக்கலாம் என்று கனவு காண்பதுபோல, திட்டத்தின் பெயரை மாற்றி இருக்கிறீர்கள்.நாடே திரும்பிப் பார்த்து, பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டம் 'விடியல் பயணத் திட்டம்'. ஆனால், நீங்கள் மாநிலம் முழுவதும் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவித்தீர்கள்; அதை நடைமுறைப்படுத்தினீர்களா?தமிழக மக்கள் இன்று ஏமாந்து நிற்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகப் பெரியார், அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நல்லாட்சி நடத்திய அம்மா இவர்களையெல்லாம் எங்களின் இதயங்களில் எங்களின் கடைசி காலம் வரை வைத்திருப்போம்; ஆனால், படத்தைக்காட்டி ஏமாற்ற மாட்டோம். எந்தக் காலத்திலும் நான் மாற மாட்டேன்; சுற்றிச் சுற்றித் திராவிட இயக்கத்தில்தான் இருப்பேன்.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதனால்தான் நான் இந்த இயக்கத்தில் இணைந்தேன்; அதனால்தான் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை என் சட்டைப்பையில் வைத்திருக்கிறேன்.

பட்ஜெட்டை எத்தனை முறை திருப்பித் திருப்பிப் பார்த்தாலும், பழைய ஓய்வூதியம் பற்றி அதில் ஒரு வார்த்தை கூட இல்லை.நெசவாளர்கள் இன்று ஏமாந்து, விழி பிதுங்கி நிற்கிறார்கள்.'அடுத்த 50 ஆண்டுகளுக்குக் கடன் வாங்காமல் அரசை இயக்க முடியாது' என்று நிதித்துறைச் செயலாளர் கூறுகிறார்.

எனவே, கடந்த காலக் கடன் குறித்து இவர்கள் பேசும் பேச்சு தவறானது.அறிவிப்புகள் அதிகம், ஆனால் செயல்படுத்துவதற்கான முதலீடுகள் குறைவு என்பதை இந்த நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.கடந்த ஆட்சியில் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உற்பத்தி, முதலீடு, வருவாய் வளர்ச்சி ஆகியவற்றின் நோக்கம் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது.ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய வலுவான நிதிநிலை அறிக்கையை இந்த அரசு பின்பற்றத் தவறியிருக்கிறது.திராவிட மாடல் அரசின் திட்டங்களை யாரும் கடந்துவிட முடியாது; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை யாரும் மிஞ்சிச் சிந்திக்க முடியாது.

தமிழ்நாடு எப்போதும் கர்நாடக மாநிலத்தைப் பகை மாநிலமாகக் கருதியதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் கூறுவதை இரு மாநிலங்களும் கேட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றே விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் காவிரிப் பிரச்சினையைச் சட்டரீதியாக எதிர்கொண்டோம்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நல்லதல்ல. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நமக்குக் கிடைத்த சட்டப்பூர்வ உரிமைகளை, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

banner

Related Stories

Related Stories