முரசொலி தலையங்கம்

வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!

சுற்றி வளைத்து த.வெ.க. அரசு சொல்ல வருவது, ‘எங்களிடம் எந்தப் புதிய திட்டத்தையும் எதிர்பார்க்காதீர்கள்’ என்பதுதான். ‘ஸாரி ப்ரோ’ என்று சொல்வதற்கு 210 பக்கமா? என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

20.06.2026

இருட்டு உள்ளத்தோடு வெள்ளை அறிக்கை!

தி.மு.க. ஆட்சியின்மீது குற்றம் சொல்வதற்காக அல்ல; த.வெ.க. ஆட்சியைத் தப்பிக்க வைப்பதற்காக நிதித்துறை சார்பிலான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சியைப் பற்றியோ, நிர்வாகத்தைப் பற்றியோ, நிதியைப் பற்றியோ, அரசாங்கக் கருவூலத்தைப் பற்றியோ எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக தேர்தலுக்கு முன்னதாக அள்ளி வீசினார் விஜய். அவை எதுவும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் ஆகும். அவரது சினிமா வசனத்தை நிஜம் என நம்பி வாக்களித்த அப்பாவி வாக்காளர்கள், ‘விஜய் அண்ணா! எப்போ அண்ணா வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்?’ என்று இப்போதே கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

• குழந்தை பிறந்து விட்டது. மோதிரம் எங்கே விஜய் அண்ணா?

• கல்யாணம் வெச்சிருக்கேன். தாலிக்குத் தங்கம் எப்போ?

• வேலையில்லாமல் இருக்கேன். 4000 ரூபாய் எப்ப வரும்?

• அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு 15,000 ரூபாய் எப்போது?

• முதியோர் உதவித் தொகை 3000 வந்துவிடுமா?

• மகளிர் உரிமைத் தொகை 2,500 எப்போ போடுவீங்க?

– இப்படி மக்கள் கேட்கிறார்கள். தேர்வு அறையில், எல்லாம் மறந்து போன மாணவனாக உட்கார்ந்து இருக்கிறார் விஜய். ‘இப்ப வர்றேன்’ என்றவர், தனியறையில் பதுங்கிக் கொண்டார்.

‘மற்றவங்க மாதிரி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கிறவன் நான் இல்லை’ என்று சொன்னவர் அவர்தான். இப்போது என்ன சொல்கிறார்? ‘ நீங்க தான் கஜானாவை எல்லாப் பக்கமும் லாக் பண்ணி வெச்சுட்டு போயிட்டீங்களே?’ என்கிறார்.

வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!

பழைய மன்னராட்சிக் காலம் போல கஜானா என்றால் லட்சம் கோடி பணத்தை அடுக்கி வைத்திருப்பார்கள் என்று நினைத்தாரா விஜய்? முதலமைச்சர் அலுவலகத்துக்குள் உள்ளே வந்து பார்த்து, ‘இங்க என்ன பணத்தையே காணும்’ என்று, ‘கிணத்தைக் காணோம்’ என்பதைப் போல விஜய் குதிக்கிறார். கனைக்கிறார்.

ஒரு அரசாங்கத்தின் நிர்வாகத் திறனால் ‘நிதி’ மூலதனம் திரட்டப்படும். நிர்வாகத் திறன் இல்லாதவர் மட்டுமல்ல, நிர்வாகம் என்றால் என்ன என்ற புரிதலே இல்லாதவர் விஜய் என்பதால்தான் முழிக்கிறார். ‘எனக்கு ஆறு மாதம் டைம் கொடுக்க வேண்டாமா?’ என்றவர், 30 நாட்களுக்குள் எதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்?

அவர்களுக்குக் கடந்தகால தி.மு.க. அரசைக் குற்றம் சாட்டுவதை விட, ‘நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமையில் இருக்கிறோம், ப்ளீஸ். புரிந்துகொள்ளுங்கள் ப்ரோ’ என்று சொல்ல நினைக்கிறார்கள். இருட்டு உள்ளத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.

ஆண்டுதோறும் வெளியாகும் நிதிநிலை அறிக்கையைப் படித்தாலே, அதில் தமிழ்நாட்டின் கடன் நிலவரம் இருக்கும். அது எதுவும் தெரியாமல், ‘சிவாஜி செத்துட்டாரா?’ என்பது மாதிரியான அறிக்கைதான் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை.

தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 13 லட்சம் கோடி ரூபாய் என்று அவர் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. கடந்த தி.மு.க. அரசின் சார்பில் 10 லட்சம் கோடி எனச் சொல்லப்பட்டு இருந்தது. அதில் போக்குவரத்து, மின்சாரம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்து 13.18 லட்சம் கோடி என்கிறார் அமைச்சர் மரிய வில்சன். இதில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 4.87 லட்சம் கோடி கடன் கூடுதலாகச் சேர்ந்துள்ளது என்பதையும் அவரே சொல்லி இருக்கிறார். மீதிக் கடன்கள் அனைத்தும் அதற்கு முந்தியவை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டின் கடன் 5.13 லட்சம் கோடியாக இருந்தது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார்.

‘ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் கடன் வாங்கிவிட முடியாது. அந்த உச்சவரம்புக்குள்தான் கடன் தொகை உள்ளது’ என்று அமைச்சர் மரிய வில்சன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ‘மாநிலங்களின் கடன் உச்சவரம்பை ஒன்றிய அரசுதான் நிர்ணயிக்கிறது. ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் மாநிலங்களால் எந்தக் கடனும் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவில்தான் தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் தெளிவாகச் சொல்லிவிட்டார். எனவே, ‘கடன் அதிகம்’ என்பதற்கான பதிலை நிதி அமைச்சரும், நிதித்துறைச் செயலாளருமே சொல்லி விட்டார்கள்.

வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!

‘மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைந்ததால் மாநில வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது’ என்று இந்த வெள்ளை அறிக்கையிலேயே (பக்கம் 94–98) இருக்கிறது. இதையே அவர்கள் ஒப்புக் கொண்டு இருப்பதற்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு இவ்வளவு கடன் இருக்கிறது என்பதற்கு வெள்ளை அறிக்கை தேவையில்லை. தவறாக வாங்கப்பட்டு இருந்தால், முறையற்ற வகையில் செலவு செய்யப்பட்டு இருந்தால், அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வெள்ளை அறிக்கை இருக்கவேண்டும். அப்படி எந்தக் குற்றச்சாட்டையும் அமைச்சர் மரிய வில்சனால் வைக்க முடியவில்லை.

‘முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சமூகநலன் சார்ந்தவைதான். அதைக் குறை சொல்லவில்லை. எந்தத் திட்டத்துக்கும், தேவையில்லாமல் நிதி செலவிடப் பட்டதாகக் கண்டறியவில்லை’ என்று அமைச்சர் மரிய வில்சன் ஒப்புக் கொண்டுள்ளார்.

வரி வசூல் திறன் குறைந்து விட்டதாம். நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரியைப் போடப் போகிறோம் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் அமைச்சர் மரிய வில்சன். ‘மக்களே தயாராகிக் கொள்ளுங்கள்’ என்கிறார்.

‘அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், வட்டி என மாநிலத்தின் வருவாயில் 64 விழுக்காடு கட்டாயச் செலவாகிறது’ என்கிறார் அமைச்சர்.மற்ற மாநிலங்களில் சம்பளம் குறைவு என்ற பட்டியல் எதற்கு? அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது தவறு என்கிறாரா?ஊதியத்தைப் பாதியாக்க நினைக்கிறாரா? உங்களது ‘கப்சா’ வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு அரசு ஊழியர்கள் சம்பளத்தையும், ஓய்வூதியங்களையும் எதற்காகச் சொல்லிக் காட்டுகிறீர்கள்?

‘நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது’ என்று கவலைப்படுகிறார் நிதி அமைச்சர். என்ன செய்யலாம்? வாழும் வயதைக் குறைக்க ஏதாவது சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்களா? சமூகநலத் திட்டச் செலவினங்கள் அதிகம் ஆவது குறித்து கவலைப்படும் அரசாங்கம், எப்படி மக்கள் நல அரசாங்கமாக இருக்க முடியும்?

சுற்றி வளைத்து த.வெ.க. அரசு சொல்ல வருவது, ‘எங்களிடம் எந்தப் புதிய திட்டத்தையும் எதிர்பார்க்காதீர்கள்’ என்பதுதான். ‘ஸாரி ப்ரோ’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?

banner

Related Stories

Related Stories