முரசொலி தலையங்கம்

“நரசிம்மராவுக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் விஜய்க்கு வரப்போகிறது...” - முரசொலி தலையங்கம்!

“நரசிம்மராவுக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் விஜய்க்கு வரப்போகிறது...” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

18.06.2026

ஏன் பதுங்குகிறார் சபாநாயகர் ?

அ.தி.மு.க.வின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும் திடீரென்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்கள். கீழ் தளத்தில் இருக்கும் சபாநாயகர் அறையில் தங்களது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, மேல் தளத்தில் அமைச்சர் அறைக்குச் சென்று த.வெ.க.வில் சேர்ந்து விட்டார்கள்.

இவர்களின் நான்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமாம். மக்கள் கண்ணை மூடிக்கொண்டு விசிலுக்கு வாக்களிப்பார்களாம். நான்கு பேரும் த.வெ.க. சார்பில் வெற்றி பெற்று விடுவார்களாம். த.வெ.க. எண்ணிக்கை நான்கு கூடிவிடுமாம். இதுதான் ஆட்சிக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் கற்பனை.

160 இடங்களைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகிவிடவில்லை விஜய். அவருக்கு அத்தகைய செல்வாக்கை மக்கள் தந்துவிடவில்லை. அவர் மொத்தமே வென்றது 108 தான். பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள 10 இடங்கள் அவருக்குத் தேவை. தேர்தலுக்கு முன்னதாக பெரிய மானஸ்தனைப் போல கொக்கரித்த விஜய் என்ன செய்திருக்க வேண்டும்? 'எனக்கு மக்கள் முழு ஆதரவு தரவில்லை, அதனால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை' என்று சொல்லி இருக்க வேண்டும்.

தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளை தன்னோடு இணைத்துக் கொண்டார். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் 13 இடங்களைக் காட்டி தான் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகச் சொல்லி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அனுமதியைப் பெற்றார் விஜய். 'காசு வாங்கிக் கொண்டு தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ்' என்று அவரால் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசும், 'கல்லாப்பெட்டி கூட்டணிக் கட்சிகள்' என்று அவரால் சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் ஆதரவுடன் தான் அவர் ஆட்சியை அமைத்தார்.

இவர்களையும் முழுமையாக நம்பினாரா என்றால் இல்லை. தேர்தல் களத்தில் எனக்கு அ.தி.மு.க. ஒரு பொருட்டே இல்லை என்று சொன்னவர் தான் விஜய். அவர் அ.தி.மு.க.வை தனக்குச் சாதகமாக உடைத்தார். அவர்களில் 25 பேர் ஆதரவையும் பெற்றார். அவர்களையும் காட்டித் தான் 144 உறுப்பினர் ஆதரவு தனக்கு இருப்பதாக நிரூபித்தார் முதலமைச்சர் விஜய். இப்படி இரவல் கட்சிகளை வைத்துத்தான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார் விஜய்.

“நரசிம்மராவுக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் விஜய்க்கு வரப்போகிறது...” - முரசொலி தலையங்கம்!

இப்படி தனக்கு ஆதரவாக வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன் என்றார். தந்தாரா? இல்லை. அதனால் 21 பேர் இருந்த இடத்துக்கே மீண்டும் போய்விட்டார்கள். நான்கு பேரை தனக்கு ஆதரவாக ராஜினாமா செய்ய வைத்துள்ளார் விஜய்.

அதாவது தனது ஆட்சியை ஆதரிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக்கையும் விஜய் நம்பவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டுதான் நான்கு பேரின் ராஜினாமா ஆகும்.

சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் அந்த நால்வரும். தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களுக்கு தங்களது பதவியை ராஜினாமா செய்யும் உரிமை இல்லை என்பதே உண்மை ஆகும். சினிமா சீன் மாற்றுவதைப் போல சட்டசபையில் நடந்து கொள்ள முடியாது.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவு (Whip Order) என்பது த.வெ.க. ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது ஆகும். அதனை மீறிய 25 உறுப்பினர்களை சட்டப்படி தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன். கொறடா உத்தரவை மீறினால் அது கட்சித் தாவல் ஆகும். அரசமைப்பு சட்டத்தின் 10 ஆவது அட்டவணையின் கீழ் பதவி போய்விடும். தனியாகச் செயல்படுகிறவர்கள் கொறடாவை நியமிக்கவும் முடியாது.

“நரசிம்மராவுக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் விஜய்க்கு வரப்போகிறது...” - முரசொலி தலையங்கம்!

21 பேர் தங்களது தவறை உணர்ந்து அ.தி.மு.க. தலைமையிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள். எனவே அ.தி.மு.க. தலைமை அவர்கள் 21 பேர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டது. மீதி நான்கு பேர் மீது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக அவர்களது ராஜினாமாவை ஏற்பதாகச் சொன்னார். அந்த நான்கு தொகுதிகளும் காலி என்றும் அவசர அவசரமாக அறிவித்தார்.

இப்போது அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டு விட்டார் சபாநாயகர். ‘அந்த நான்கு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன்' என்கிறார். 'ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன்' என்று முதலில் சொன்னவர், ‘இப்போது விளக்கம் கேட்டுள்ளேன்' என்று பதுங்குவது எதற்காக?

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கப் போகிறது. இது சாதாரண வழக்கு அல்ல. ஏதோ நான்கு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பது தொடர்பான வழக்கும் அல்ல. 'குதிரை பேரத்தால் விஜய் ஆட்சி அமைத்துள்ளாரா?' என்பதை தீர்மானிக்கப் போகும் வழக்கு அது. இந்த வழக்கின் தீர்ப்பால் விஜய் ஆட்சியே கேள்விக்குறி ஆகலாம்.

ஆட்சி அமைப்பதற்காகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காகவும் குதிரை பேரம் நடத்தியது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுசொல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் நால்வரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் விஜய் அதில் சிக்கிக் கொள்வார். இதுபோன்ற குதிரை பேர வழக்கில்தான் நரசிம்மராவுக்கும் பூட்டாசிங்குக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அப்படி ஒரு நெருக்கடிதான் விஜய்க்கு வரப்போகிறது.

    banner

    Related Stories

    Related Stories