முரசொலி தலையங்கம்

“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!

‘வேதனையில் உழவர்கள்!’ என தலைப்பிட்டு த.வெ.க.வின் தோல்வி ஆட்சியை சுட்டிக்காட்டிய முரசொலி தலையங்கம்!

“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

‘நான் அடுத்த பிறவியில் உழவனாகப் பிறக்க வேண்டும்’ என்று டயலாக் விட்டார் முதலமைச்சர் விஜய். இப்போது இந்தப் பிறவியில் உழவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். விஜய் ஆட்சியில் அதிக வேதனையில் இருப்பவர்கள் உழவர்கள் தான். நாடு முழுவதும் உழவர்கள் அதிகப்படியான போராட்டங்களை தினமும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வாக்குறுதிகள் என்ற பெயரில் போலியான பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார் விஜய். அதை நம்பி வாக்களித்துள்ளார்கள் மக்கள். அத்தகைய வாக்குறுதிகளில் ஒன்று பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்வேன் என்பது ஆகும்.

“5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் பயிர்க்கடனில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று விஜய் அள்ளி விட்டார். இப்போது என்ன செய்துள்ளார் என்றால்... கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறுவிவசாயிகளுக்கு முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அதற்கு மேல் இருந்தால் அந்தக் கடனில் 50 விழுக்காடு வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் தள்ளுபடி திட்டமும் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒட்டுமொத்தமாக ஏமாற்றி இருக்கிறார் விஜய். இந்த வகையில் மொத்தமே ரூ.2 ஆயிரம் கோடி தான் தள்ளுபடி செய்துள்ளார் விஜய். இது நாடு முழுவதும் அவர் மீது கடும் கோபத்தை உருவாக்கி உள்ளது.

இதனைச் சமாதானப்படுத்துவதற்காகப் பயிர் தொகுப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதனால் எந்தப் பயனும் இல்லை என்று உழவர்கள் சொல்லி விட்டார்கள். ‘’காவிரி நீர் இல்லாமல் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிப்பது வீண். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத் தரும் வழியைப் பார்க்கவும் என்று உழவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அப்படித் திறந்து விட்டால் தான் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறைந்த பட்சம் 5.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடக்கும். கடந்த ஆண்டு இலக்கை மிஞ்சி 7 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது என்றால் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனையாகும்.

திராவிட மாடல் ஆட்சியில் மேட்டூர் அணை மிகச் சரியாக ஜுன் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முன்கூட்டியே – மே 24 ஆம் தேதியே திறந்து விடப்பட்டது. அத்தகைய சாதனையைச் செய்தவர் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். விஜய் ஆட்சியில் முதல் ஆண்டே ஜூன் 12 அன்று மேட்டூர் அணையை திறந்து விட முடியவில்லை. இதனால் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.

“காவிரி நீர் கிடைக்கவில்லை. ஆற்று நீர் கிடைக்காவிட்டால் குறுவை பயிர்கள் கருகும். பம்பு செட் பாசனத்தாலும் குறுவை சாகுபடியை முழுமையாக முடிக்க முடியாது. மும்முனை மின்சாரமும் சரிவர கிடைக்கவில்லை. இவை இரண்டுமே மிகப் பெரிய சிக்கலை உழவர்களுக்குக் கொடுத்துள்ளது. இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சர் விஜய் கவலைப்படவில்லை.

மேட்டூரில் தண்ணீர் இல்லை, அதனால் திறந்து விடவில்லை என்று அலட்சியமாகப் பதில் சொல்ல முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மே மாதத்தில் 2.5 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்திருக்க வேண்டும். ஆனால் அங்குள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்று சொல்லி காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை. இது ஒவ்வொரு தடவையும் சொல்வது தான்.

மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் விஜய், கர்நாடக அரசிடம் முறையாகப் பேசி தண்ணீரைப் பெற்றிருக்க வேண்டும். கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். அவரே போய் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்திருக்க வேண்டும். அல்லது ஒரு குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. இரண்டுக்கும் பொதுவானது காங்கிரஸ் தலைமை. ராகுல் காந்தியிடமே இந்தப் பிரச்சினையை கொண்டு செல்லலாமே?

“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!

பிரவீன் சக்கரவர்த்திக்கு இதைவிட என்ன வேலை இருக்கிறது? அவர் எம்.பி.ஆக வேண்டும் என்பதற்காகத் தான் ஒரு கூட்டணியையே உடைக்கும் வலிமை படைத்தவர் ஆச்சே? தமிழ்நாட்டு உழவர்களுக்காக கர்நாடக அணை தண்ணீரை காவிரியில் திறந்து விடும் சக்தி படைத்தவர் ஆச்சே அவர்? ஏன் இந்த முயற்சிகளை எல்லாம் எடுக்கவில்லை விஜய்?

மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடங்கி விட்டார். டெல்லியில் தங்கி இதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான். பல லட்சம் ஏக்கர் விவசாயம் கேள்விக்குறி ஆகிவிடும். அந்த ஆபத்தைக் கூட முதலமைச்சர் விஜய் உணரவில்லை.

அவருக்கு மக்கள் மீது துளியும் அக்கறை இல்லை. அவருக்கு இதுபோன்ற பிரச்சினைகளை உள்வாங்கும் சக்தியும் இல்லை. ஒரே ஒரு நாள் பதவி ஏற்றதுடன் தனது கடமை முடிந்துவிட்டது என்ற மனநிலையில் அவர் இருக்கிறார். ‘நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்’ என்ற நினைப்பில் நாட்களைக் கடத்துகிறார்.

banner

Related Stories

Related Stories