முரசொலி தலையங்கம்

”பிஞ்சு மனதில் நடத்திய அரசியல் வன்முறை.. இப்போது வருத்தப்படும் மக்கள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

பேரன், பேத்திக்காக தவெக-விற்கு ஓட்டுப்போட்டோம் எனக்கூறும் மக்கள் தற்போது அதற்காக வருத்தப்படுவதாகவும், பிஞ்சு மனதில் நடத்தப்பட்ட அரசியல் வன்முறை என்றும் முதல்வர் விஜய் குறித்து முரசொலி விமர்சித்துள்ளது

”பிஞ்சு மனதில் நடத்திய அரசியல் வன்முறை.. இப்போது வருத்தப்படும் மக்கள்” :  முரசொலி தலையங்கம் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

குழந்தைகளை பகடைக்காயாகப் பயன்படுத்தியது...!

‘பேத்தி சொல்லி விசிலுக்கு வோட்டுப் போட்டேன்’, ‘பேரன் சொன்னதற்காக விசிலுக்கு வோட்டுப் போட்டேன்' என்று சொன்னவர்கள் அனைவரும், ‘இப்பத்தான் ஏன் போட்டேன்னு வருத்தப்படுறேன்” என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இது போன்ற பேட்டிகளைஅதிகம் பார்க்க முடிகிறது. பேரன், பேத்திகளுக்கு நல்லது சொல்லி வளர்க்காமல்அவர்கள் சொன்னார்கள் என்று வாக்களித்துவிட்டு இப்போது வருத்தப்படு வதால் என்ன பயன்?

அந்த அளவுக்கு குழந்தைகளைத் தூண்டினார் விஜய். தனது இத்தனை ஆண்டு கால சினிமாப் புகழை, முதலீடாகப் போட்டார் விஜய். அவர் கட்சி ஆரம்பித்தது வேண்டுமானால் இரண்டு ஆண்டுக்கு முன்பாக இருக்கலாம். ஆனால், மக்களை மயக்கத் தொடங்கி பல காலம் ஆகிவிட்டது. அந்த சினிமா மயக்கம் தான் அவருக்குப் பலரும் வாக்களிக்கக் காரணம். அதிலும் குறிப்பாக குழந்தைகளை தனது பேச்சில் அதிகமாகத் தூண்டினார்.

‘நீங்கள் உங்கள் அப்பா, அம்மாவை வாக்களிக்க வையுங்கள். இந்த ஒரு தடவை எனக்கு வாய்ப்பளிக்கச் சொல்லுங்கள்' என்று குழந்தைகளைத் தூண்டினார் விஜய். இது மன ரீதியான தாக்குதல் ஆகும். அதுவும் குழந்தைகள் மீது செய்யப்பட்ட தாக்குதல் ஆகும்.

குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு அது தேர்தலுக்காகக் கேட்கப்படும் வாக்கு என்றே தெரியாது. அவர்களுக்குப் பிடித்த ஒருவர், ஏதோ கேட்கிறார். அதைச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்குப் புரிந்திருக்கும். ‘சக்திமானைப்' பார்த்து அவர் செய்வது போலவே மாடியில் இருந்து இறந்தசிறுவர்களைப் பார்த்துள்ளோம். அதுபோன்ற பொய்மானைப் பார்த்து சிறுவர், சிறுமியர் செய்த செயலாகவே இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

‘தேர்தல் பிரச்சாரத்தில் த.வெ.க. சார்பில் குழந்தைகளைப் பயன்படுத்தியது தவறு' என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். "நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விஜய், குழந்தைகளைத் தூண்டும் வகையில் பேசினார். 'நீங்கள் உங்கள் பெற்றோரிடமும் அண்ணன், அக்காவிடமும் சொல்லுங்கள்' என்று சொன்னார். இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

”பிஞ்சு மனதில் நடத்திய அரசியல் வன்முறை.. இப்போது வருத்தப்படும் மக்கள்” :  முரசொலி தலையங்கம் விமர்சனம்!

த.வெ.க.சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “வெறும் செய்திகளின் அடிப்படையில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள்” என்று சொல்லி இருக்கிறார். வெறும் செய்திகளின் அடிப்படையில் அல்ல, விஜய் பேசிய பேச்சுகள் ஆதாரமாக உள்ளது. “வீட்டில் இருக்கும் குட்டி நண்பா, நண்பீஸ்... விஜய் மாமாவுக்கு வோட்டுப் போடச் சொல்லுங்கள். உங்கள் பெற்றோரையும் வோட்டுப் போடும் வயதில் இருக்கும் அண்ணா, அக்கா, சித்தி, சித்தப்பா எல்லோரையும் விசில் சின்னத்துக்கு வோட்டுப் போடச் சொல்லுங்க” என்று விஜய் பேசிய ஆதாரம் போதாதா? தேர்தல் முடிந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மேடையிலும் குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கு நன்றி சொன்னார் விஜய். இந்த ஆதாரம் போதுமே.

'பேத்தி சொன்னதற்காக விசிலுக்கு வோட்டுப் போட்டோம்', 'பேரன் சொன்னதற்காக விசிலுக்கு வோட்டுப் போட்டோம்' என்று சொல்பவர்களின் பேட்டிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எனவே, இது வெறும் செய்திகள் அல்ல. உண்மைகள் என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது. 'குழந்தைகளை தனது அரசியல் சுய லாபத்துக்காகப் பயன்படுத்தியது’ குறித்து ஜூலை 10 ஆம் தேதிக்குள் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சட்டமன்றத் தேர்தலில் குழந்தைகளை தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மூத்த பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் குழந்தைகளைத் தூண்டி விட்டு த.வெ.க.வுக்குப் பிரச்சாரம் செய்தார். த.வெ.க.வுக்கு வாக்களிக்குமாறு தங்கள் பெற்றோர்களையும் உறவினர்களையும் வலியுறுத்த வேண்டும் என, குழந்தைகளுக்கு விஜய் நிர்ப்பந்தித்தார். குழந்தைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட, இந்தப் பிரச்சாரமானது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் கடுமை யாகத் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஏராளமான காணொளிகளில், சிறார்கள் அழுதுகொண்டும், கதறிக்கொண்டும், கூச்சலிட்டுக்கொண்டும், அடம் பிடித்துக்கொண்டும் இருப்பது காணப்படுகிறது. இதன்மூலம், அவர்கள் தங்கள் பெற்றோர்களையும் குடும்பத்தில் உள்ள வயது வந்த உறுப்பினர்களையும் த.வெ.க.வுக்கு வாக்களிக்குமாறு நிர்ப்பந்திப்பது தெரிகிறது. தங்கள் கோரிக்கையை பெற்றோர்கள் நிறைவேற்றா விட்டால், குழந்தைகள் சாப்பிடக் கூட மறுப்பதாகவும், மேலும், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை மிரட்டுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் இடம் பெற்றுள்ளது. எனவே, சட்டமன்றத் தேர்தலில் குழந்தைகளைத் தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

”பிஞ்சு மனதில் நடத்திய அரசியல் வன்முறை.. இப்போது வருத்தப்படும் மக்கள்” :  முரசொலி தலையங்கம் விமர்சனம்!

தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. விஜய் மீது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பேச்சு சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆகிய மூன்றின் விசாரணையிலும் உள்ளது.

குழந்தைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட, விஜய்யின் பிரச்சாரமானது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் கடுமையாகத் தடை செய்யப்பட்ட முறை ஆகும். குழந்தைகளை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகள் மீது செல்வாக்குச் செலுத்தியது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவது என்பது பிஞ்சு மனங்களின் மீது நடத்தப்பட்ட அரசியல் அச்சுறுத்தல், வன்முறை ஆகும்.

banner

Related Stories

Related Stories