முரசொலி தலையங்கம்

“விஜய் அரசின் சரிவு தொடங்கி இருக்கிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

“பலம் இழந்த விஜய் அரசு!” என தலைப்பிட்டு, த.வெ.க.வின் குதிரை பேர ஆட்சியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!

“விஜய் அரசின் சரிவு தொடங்கி இருக்கிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டு மக்கள் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை இடங்களைத் தரவில்லை. கூடுதலாக அதிக இடம் பெற்ற கட்சியான த.வெ.க. இப்போது பல்வேறு கட்சிகளிடம் இருந்து இடங்களைக் கடன் வாங்கி ஆட்சி அமைத்துள்ளது. இவர்கள் யாரும் தேர்தலுக்கு முன்னதாக த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தவர்களும் அல்ல. விஜய்யை முதலமைச்சர் ஆக்குவதற்காக வாக்குகளைப் பெற்ற கட்சிகளும் அல்ல.

‘காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் விலை போய்விட்டது’ என்று உளறினார் விஜய். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிதான் முதலில் விஜய்யை ஆதரித்தது. ‘தி.மு.க. வைத்திருக்கும் கல்லாப்பெட்டி கட்சிகள்’ என்று மற்ற கூட்டணிக் கட்சிகளைக் கிண்டலடித்தார் விஜய்.

அவர்களும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், விஜய் ஆட்சி அமைப்பதற்கு தங்களது ஆதரவைத் தந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் அமைச்சரவைக்குள் போய்விட்டது. இவற்றை மொத்தமாகச் சேர்த்தால் 119 உறுப்பினர்கள் ஆதரவைக் கொண்டதுதான் விஜய் ஆட்சி.

அதாவது, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை என்பது 118. அதை விட ஒன்றே ஒன்றுதான் கூடுதலாக இருக்கிறது.

அமைச்சர் பதவி தருகிறேன். வாரியத் தலைவர் பதவிகள் தருகிறேன் என்று அ.தி.மு.க. வினருக்கு ஆசை வார்த்தை கூறினார் விஜய். அந்த அடிப்படையில் 25 பேரின் ஆதரவைத் தனக்குப் பெற்றார். பெரும்பான்மையை நிரூபிக்கும் நாளன்று இந்த 25 பேரும் விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதன் மூலமாக தனக்கு 144 உறுப்பினர் ஆதரவு இருப்பதைப் போல விஜய் காட்டிக் கொண்டார்.இது நியாயமான ஆதரவு இல்லை. அறமற்ற ஆதரவு ஆகும்.

அ.தி.மு.க.வின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர்கள் 25 பேர் பதவியும் பறிக்கப்படும். அதனால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடாவையே அங்கீகரிக்காமல் வைத்திருந்தார் பேரவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன். இதை விட மக்களாட்சிக்கும் சபை மரபுகளுக்கும் மாறான செயல் இருக்க முடியாது. கொறடாவையே யார் என்று அங்கீகரிக்காமல்தான் வாக்கெடுப்பை நடத்தினார் பேரவைத் தலைவர். இதுவே அவர்களது உள்நோக்கத்தைக் காட்டியது.

அப்படி அவர்கள் வாக்களித்து இருந்தாலும், கொறடா உத்தரவை மீறி மாறாக வாக்களித்தால் கட்சித் தாவல் சட்டப்படி அவர்களது பதவிகள் பறிக்கப்படும். அதைத் தெரிந்துதான், 25 பேரில் 5 பேர் நீங்கலாக மற்றவர்கள் அனைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று நேற்றைய தினம் அவரோடு சேர்ந்து விட்டார்கள். அதாவது த.வெ.க. ஆட்சி அமைய வாக்களித்த 20 பேர், தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டார்கள். இது விஜய்க்கு விழுந்துள்ள பெரிய அடி ஆகும்.

“விஜய் அரசின் சரிவு தொடங்கி இருக்கிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

குதிரைப் பேரங்கள், சதிச் செயல்கள் மூலமாக அ.தி.மு.க.வை உடைத்து தனது ஆட்சிக்கு பலத்தை ஏற்றிக் கொள்ள நினைத்த விஜய்யின் கெட்ட எண்ணம் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

தனது ஆட்சிக்கு 119 உறுப்பினர் ஆதரவு இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்களை பதவி விலக வைத்தது விஜய்யின் இன்னொரு சதிச் செயல் ஆகும். பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை பதவி விலக வைத்து த.வெ.க.வில் இணைப்பதுதான் குதிரை பேரம் ஆகும். ஏற்கனவே அ.ம.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., குதிரை பேரம் மூலமாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ‘தூய சக்தி’ விஜய் மீது அடிக்கும் துர்நாற்றம் இவை.

இவர்களை ராஜினாமா செய்யச் சொல்வாராம். இடைத்தேர்தலில் அவர்களே வெற்றி பெறுவார்களாம். கற்பனை உலகத்தில் மிதக்கிறார் விஜய். இது என்ன சினிமாவா? மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொள்கிறார். ஒரு தடவை ஏமாந்த மக்கள் மறுதடவை ஏமாற மாட்டார்கள் என்பதை விஜய் உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

தகுதி நீக்கம் கோரும் மனு நிலுவையில் உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் ஏற்றுக் கொண்டது சரியல்ல.

சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்ய அந்தக் கட்சியின் கொறடா, பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்த பிறகு அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வராகவே கருதப்படுகிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்டவருக்கு பதவியே இல்லாத போது, பதவி விலக முடியாது. பத்தாம் வகுப்பில் தோற்ற ஒருவர், ஒன்பதாம் வகுப்போடு டிசி கேட்பதைப் போல இருக்கிறது.

கட்சி மாறுகிறவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மட்டுமல்ல, வேறு எந்தப் பதவியில் இருந்தாலும் அதையும் பறிக்கலாம் என்று அரசியல் சட்ட மறு ஆய்வு தேசிய ஆணையம் பரிந்துரைத்து இருக்கிறது.

இது தொடர்பாக வழக்குப் போடப்பட்டால், இறுதித் தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தல் நடப்பதே தள்ளிப் போகும். விஜய் நினைப்பதைப் போல இடைத்தேர்தல்கள் வந்துவிடாது. அ.தி.மு.க.வில் போட்டியிட்டவர்களை, விலக வைத்து, அவர்களை த.வெ.க. சார்பில் வெற்றி பெற வைப்பது சினிமாவில் மட்டும்தான் நடக்கும். இந்த கதை டிஸ்கஷன், அரசியலில் நடக்காது.

•தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்தல்,

•அமைச்சர் பதவிகள் கொடுத்தல்,

•அ.தி.மு.க.வை உடைத்தல்,

•அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலக வைத்தல்

•அ.ம.மு.க. உறுப்பினரைப் பிரித்தல் – இப்படிப் பல செயல்களால்தான் விஜய், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முடிந்துள்ளதே தவிர, மக்களின் முழுமையான ஆதரவால் அல்ல.

மொத்தத்தில் 144 பலத்தை சபையில் காட்டிய விஜய், இன்று அதனை இழந்து நிற்கிறார். அவர் டெல்லி சென்றுள்ள நிலையில் இந்தச் சரிவு தொடங்கி இருக்கிறது. இன்றைய பலம் 119 தான். அதாவது, பெரும்பான்மை எண்ணிக்கையை விட ஒன்றே ஒன்று தான் அதிகம்.

banner

Related Stories

Related Stories