
‘குதிரை வேக குதிரை பேர ஆட்சி இது’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருப்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை ஆகும்.
தனது நாற்காலியைத் தக்க வைப்பதற்காக அனைத்து கேவலமான முறைகளையும் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை தமிழ்நாட்டு மக்கள் வழங்கவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் ஆட்சி அமைக்கும் த.வெ.க.வுக்கு இடையூறாக இருக்காது என்றும் தொடக்கத்திலேயே தி.மு.க. தலைவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
தி.மு.க. கூட்டணியில் வென்ற காங்கிரஸ் கட்சி, உடனடியாக த.வெ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விலகியது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், 'இன்னொரு தேர்தல் வரக்கூடாது' என்பதால் ஆட்சியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தன.
ஆனாலும், 'கொள்கை அளவில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதாகவும்' அறிவித்தன. பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலமாக பெரும்பான்மையை நிரூபிக்கும் வலிமையை விஜய் பெற்றார். அத்தோடு அமைதியாக அவர் இருந்திருக்க வேண்டும்.
இவை போதாது என்று அ.தி.மு.க.வை உடைக்கும் செயலை விஜய் செய்தார். அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களில் 25 பேரை தனியாக ஆக்கி அவர்களை தங்களது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாக்களிக்கவைத்தார்.'அமைச்சர் பதவி தருகிறோம், வாரியத் தலைவர் பதவி தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டப்படுவதாக' சட்டமன்றத்திலேயே எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருக்கிறார். இது அவைக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. எந்தக் கீழ்த்தரத்துக்கும் விஜய் கட்சி இறங்கும் என்பதை எடப்பாடி பழனிசாமி போட்டு உடைத்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரு உறுப்பினரையும் தங்களுக்கு ஆதரவானவராக மாற்றினார்கள். அதில்தான் எத்தனை நாடகங்கள் நடந்தன?
டி.டி.வி. தினகரன் தனது கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வைக் காணோம் என்றும், எனது கையெழுத்தை அவர் போட்டுள்ளார் என்றும் ஆளுநரிடம் மனு தருகிறார். கிண்டி காவல் நிலையத்திலும் புகார் தருகிறார். 'நான் போகவில்லை' என்று அந்த எம்.எல்.ஏ.வே பேட்டி தருகிறார்.

பின்னர் அவரே விஜய் ஆதரவாளராக மாறுகிறார். அந்த எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கிவிட்டார் டி.டி.வி. தினகரன். அப்படியானால் தினகரன் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தரப்பட்ட வாக்குறுதி என்ன?
'முதலமைச்சரைச் சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்?' என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நேராகக் கேள்வி கேட்டார்தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சபையில் உட்கார்ந்து இருந்த முதலமைச்சர் விஜயால் பதில் சொல்ல முடியவில்லை.
இப்படி ஒட்டுப்போட்ட கந்தல் துணியைப் போல ஒரு ஆட்சியை அமைத்துவிட்டு, ஆட்சியை ஒழுங்காக நடத்தாமல் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க விட்டு, மிகமிக ஏமாற்றத்தை வாக்களித்த மக்களுக்கு கொடுத்து வருகிறார் விஜய்.
தினந்தோறும் கொலைகள், பாலியல் வன்முறைகள், நிர்வாகச் சீர்கேடுகள், மின்வெட்டுகள், அதிகார துஷ்பிரயோகங்கள். இவை தான் நாம் பார்க்கும் காட்சிகள் ஆகும். சமூக வலைதளங்களைத் திறந்தாலே இந்த ஆட்சி மீதான ஆக்ரோஷமான எதிர்ப்புக் குரல்கள்தான் அதிகம் ஒலிக்கிறது. இவை எதுவும் விஜய் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த முனையவில்லை. மாறாக ஆடிக் கொண்டிருக்கும் தனது நாற்காலியைச் சரி செய்வதிலேயே அவர்களது எல்லாக் கவனமும் இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வென்று, அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கு மாறாக த.வெ.க. ஆட்சியை ஆதரித்து வாக்களித்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வைக்கப்பட்டுள்ளார்கள். பதவி விலகலைக் கொடுத்த சில நிமிடங்களில் அவர்கள் த.வெ.க.வில் இணைந்துள்ளார்கள். எதற்காக அவர்கள் பதவி விலக வைக்கப்பட்டுள்ளார்கள்? குதிரை பேரத்தால் உருவான ஆட்சி என்று அனைத்து அரசியல்கட்சிகளும் சொன்னார்கள். அது சரி தான் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்டு, ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கப்பட்டவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். இன்னொரு தரப்பு தனது பதவியை விட்டு விலகி த.வெ.க.வில் இணைகிறது.
இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆதரித்த ஆட்சி செல்லத்தக்க ஆட்சியா? நம்பிக்கைக்குரிய ஆட்சியா? ரகசிய பேரங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி இது. இந்த ஆட்சி மக்களைப் பற்றி கவலைப்படாது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே காலத்தைப் போக்கிக் கொள்ளும். இது மக்களுக்கான ஆட்சி அல்ல. அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆட்சியே ஆகும்.
த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு போய்விட்டார்கள். த.வெ.க.வை ஆட்சி அமைக்க ஆதரித்து வாக்களித்த 3 உறுப்பினர்கள் தங்களது பதவியை விட்டு விலகி இருக்கிறார்கள். இதன் மூலமாக ஆட்சிக்காக ஆதரவளித்த 3 வாக்குகள் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையவே செய்யும்.
சபாநாயகரின் அறைக்கு போய் பதவி விலகுகிறார்கள். அமைச்சர் அறைக்குச் சென்று கட்சியில் சேர்கிறார்கள். இதைவிடக் கேவலம் இருக்க முடியுமா?
விஜய் கூறிய தூய அரசியல் மடிந்து விட்டது. தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. குதிரை பேரங்கள் மூலமாக ஆட்சியைத் தக்க வைக்க நினைக்கும் விஜய்யை மக்களே விரட்டுவார்கள்.






