
ஆளுநர் ரவி ஆளும் மாநிலம் அமைதியாக இருக்கிறதா?
முரசொலி தலையங்கம் (ஏப்ரல் 29)
யாராவது சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் கூட, 'தமிழ் நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியாக இல்லை’, 'பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்து இப்படித்தான் நடக்கிறது’, ‘தி.மு.க. ஆட்சி இதனைத் தடுக்கவில்லை' என்று அறைகூவல் விடுத்துக் கொண்டு இருந்தார் ஆளுநர் ரவி. அவராகவே சத்தமில்லாமல் மேற்கு வங்கத்துக்கு மாறுதல் கேட்டுப் போனார். அங்கும் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அமைதியாக இருக்கிறதா மேற்கு வங்காளம்? அமைதி யாகத் தேர்தல் நடத்துகிறாரா ஆளுநர் ரவி?
எங்கே போனாலும், தனது வேலையை மீறி மற்ற இடங்களில் மூக்கை நுழைப்பதுதான் ஆளுநர் ரவியின் வழக்கம். அதையேதான் மேற்கு வங்கத்திலும் செய்தார். தேர்தல் நடத்த வேண்டியது, தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் தான் ஏதோ தேர்தல் நடத்துவதைப் போல இவர் காட்டிக் கொண்டார்.
சுதந்திரமான, நியாயமான, அச்சமற்ற தேர்தலை உறுதி செய்வதற்காக ஆளுநர் மாளிகையில் ஒரு உதவி மையத்தை ஆளுநர் ரவி தொடங்கினார். சுதந்திரமான தேர்தல், நியாயமான தேர்தல், அச்சமற்ற தேர்தல் மேற்கு வங்கத்தில் நடக்கிறதா? நடத்திக் காட்டிவிட்டாரா ஆளுநர் ரவி?
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. குறிப்பாக திரிணாமுல் - பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 148 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்.
மம்தா பானர்ஜி, மூன்று தேர்தலாக வென்று முதலமைச்சராக இருக்கிறார். நான்காவது முறையும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருக்கிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதை தங்களது மானப் பிரச்சினையாக நினைத்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அங்கேயே இருக்கிறார்கள்.

முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதியன்று நடந்தது. வாக்குப்பதிவின்போது வன்முறை சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 700-கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டன.இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வாக்காளர்களைத் தாக்கியது, கட்சி சார்பில் அமைக்கப்பட்ட பந்தல்களை உடைத்தது தொடர்பாக சி.ஆர்.பி.எப். போலீஸாருக்கு எதிராக 100 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு இருப்பதுதான். இரண்டு அரசியல் கட்சிகள் மோதிக்கொண்ட தால் அளிக்கப்பட்ட புகார்களை விட, பாதுகாப்புப் படைகள் மீதும் அதிகப்படியான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
* வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் ஜகாடல் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்கொடிகளை கட்டிக் கொண்டிருந்தவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. திரிணாமுல் - பா.ஜ.க தொண்டர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஏற்பட்டது. அன்றைய தினம் இரவு பா.ஜ.க. வேட்பாளர் பவன் சிங் வீட்டின் அருகே இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. இரு கட்சித் தொண்டர்களும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்கள். இதில் பாதுகாப்பு படை வீரர் யோகேஷ் சர்மா மீது குண்டு பாய்ந்தது. அவர் பெருத்த காயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
*திரிணாமுல் தொண்டர் ஒருவர் வீட்டில் 70க்கும் அதிகமான நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
*ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மித்தாலி பாக் என்பவரின் வாகனத்தை பா.ஜ.க. வினர் சேதப்படுத்தி இருக்கிறார்கள்.மித்தாலி பாக், காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'நான் எனது வாகனத்தில் பா.ஜ.க. அலுவலக வாசல் வழியாக போன போது எனது வாகனம் தாக்கப்பட்டது' என்று மித்தாலி பாக் சொல்லி இருக்கிறார்.
*முர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் கச்சா வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
*தேர்தல் வன்முறைகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. (CBI) விசாரணை செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*வாக்குப்பதிவின் இறுதி நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, பிர்பூம் மாவட்டத்தின் கரிசால்பகுதியில் உள்ளூர் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பதற்றம்ஏற்பட்டது. சந்தேகம் கேட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
*குமார் கஞ்ச் தொகுதியில் தங்களது வேட்பாளர் சுவேந்து சர்க்கார், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
*அசன்சோல் தட்சிண சட்டமன்றத் தொகுதியில் உள்ள ரஹ்மத் நகர் அருகே, பா.ஜ.க. வேட்பாளரான அக்னிமித்ரா பாலின் கார் மீது கற்கள் வீசப்பட்டு, அதன் பின்புறக் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

*முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யினருக்கும் அதே மாவட்டத்தில் அதிகச் செல்வாக்கு பெற்ற ஹுமாயூன் கபீரின்ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டது. இரு தரப்பும் கட்டைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட துடன் அங்கிருந்த காரையும் தாக்கினர்.அந்த மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
*கோராபஜார் வாக்குச்சாவடியில் நான்கு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியும் பிரச்சினை சரியாகவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்தார்.
இதுதான் ஆளுநர் ரவி ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆகும். ரவிதிறந்து வைத்திருக்கும் ஹெல்ப் லைன் வேலை செய்கிறதா எனத் தெரியவில்லை.
இந்த நிலையில் அமித்ஷா சொன்னது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது."தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் 60 நாட்களுக்கு மத்திய படை பாதுகாப்புதொடரும்”என்று சொல்லி அச்சத்தை அதிகப்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா."மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து 60 நாட்களுக்கு பாதுகாப்புக்கு மத்தியப் பாதுகாப்புப் படை நிறுத்தப்படும். எனவே மக்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை”என்று சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர். மேற்கு வங்க மாநில மக்கள் எத்தகைய அச்சத்தில்வாழ்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சரின் பேச்சே உணர்த்துகிறது.
இதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க. கவலைப்படவில்லை. 'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும்நீங்கள் மீன் சாப்பிடலாம், தடை போட மாட்டோம்' என்று பரப்புரை செய்கிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டுமானால் எதை வைத்தும் பரப்புரை செய்யும் பா.ஜ.க.






