
2023ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து எரிகிறது மணிப்பூர். இரட்டை எஞ்சினால் இன்னமும் அணைக்க முடியவில்லை.
தமிழ்நாட்டுக்குப் பரப்புரைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், 'மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், அந்த இரட்டை எஞ்சின் வளர்ச்சி ஏற்படும்' என்று சொல்லிப் போனது பொய் என்பதை மணிப்பூர் மூன்று ஆண்டுகளாக மெய்ப்பித்து வருகிறது. இதையேதான் இவர்கள் மேற்கு வங்க தேர்தல் பரப்புரையிலும் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். மணிப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த வன்முறையில் 3 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தின் சில பகுதிகளில் இரு சமூகத்தினரிடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதில்தான் 3 பேர் பலியானார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
முல்லம், ஷோங்ஃபால் ஆகிய கிராமங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முல்லம் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டவர்கள் மீது ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 வயது தன்னார்வலர் ஒருவர்கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்தே பதிலடி மோதல் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மொய்ராங் ட்ராங்லாபி பகுதி யில் உள்ள வீடு ஒன்றின் மீது மர்ம நபர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனும், 6 மாதக் குழந்தையும் கொல்லப்பட்டனர். அப்பாவி குழந்தைகளைக் கொன்றவர்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு ஆயில் டேங்கர்கள், ஒரு லாரியை தீ வைத்து எரித்தனர். அருகேயுள்ள தற்காலிகப் போலீஸ் நிலையத்தையும் அவர்கள் சூறையாடினர்.
குழந்தைகளைக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இம்பால் மேற்கு மாவட்டத்தின் சிங்ஜாமில் தீப்பந்த ஊர்வலம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களில் சிலர், தடையை மீறி மணிப்பூர் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பாதுகாப்புப் படையினர் கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து களைப் பதிவிட்ட 23 வயது இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். வன்முறையைத் தூண்டவோ அல்லது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கவோ முயற்சிக்கும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

மார்ச் 26 அன்று இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர், மணிப்பூர் போலீசாருடன் ஒருங்கிணைந்து மாநிலம் முழுவதும் முழு அளவில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு பிஷ்ணுபூர், சந்தேல், கங்போக்பி, சுராசந்த்பூர் மற்றும் தெங்னவுபோல் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்திய சோதனைகளில் மலை மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், வெடிபொருட்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், மொபைல் போன், சிம் கார்டு, போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
ஏப்ரல் 25 அன்று மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாபெரும் பேரணி நடந்துள்ளது. முதலமைச்சர் யும்னம் கேம் சந்த்சிங்கின் இல்லத்தை நோக்கி நான்கு திசையில் இருந்தும் போராட்டக்காரர்கள்திரண்டு வந்துள்ளனர். போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள். இந்த மோதலில் 22 பேர் காயம் அடைந்தனர். ஏப்ரல் 7 ஆம் தேதி இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு முதலமைச்சரிடம் கடிதம் தரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சமூக மக்களுக்கு ராணுவச் சீருடைகள் தரப்பட்டு அவர்கள் மற்ற சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டி விடப்படுவதாக 'வாய்ஸ் ஆப் தி நாகா யூத்' என்ற அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. இப்படி நாள் தோறும் மணிப்பூரில் இருந்து பதற்றம் ஏற்படுத்தும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அறிவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மணிப்பூர் பா.ஜ.க. அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 2023 மார்ச் 27இல் உத்தரவு பிறப்பித்தது. இதனை குக்கி சமூகத்தினர் எதிர்க்கிறார்கள். மே 3இல் மெய்தேய் சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
இவ்வளவுக்குப் பிறகும் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங்கை காப்பாற்றி வைத்திருந்தது பா.ஜ.க. தலைமை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலகினார். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்துக்குப் பின்னர் பா.ஜ.க.வின் யும்நம் ஹேம்சந்த் சிங் தலைமையில், 2026 பிப்ரவரியில் புதிய அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த பிறகும் மாநிலம் அமைதியாகவில்லை.

மணிப்பூரை அமைதியாக்க மாநில பா.ஜ.க. அரசாலும் முடியவில்லை. ஒன்றிய பா.ஜ.க. அரசாலும் முடியவில்லை. உண்மையில் பிரதமர் மோடிக்கு மணிப்பூரைப்பற்றி அக்கறை இல்லை. கலவரம் தொடங்கி 862 நாட்களுக்குப் பிறகுதான் மணிப்பூர் சென்றார் பிரதமர் மோடி. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டுக் கூட மணிப்பூர் போகவில்லை பிரதமர். அந்தளவுக்குத் தான் அவருக்கு அமைதி மீதும், மக்கள் மீதும் அக்கறையே!
இரட்டை எஞ்சின் பற்றி வாய் கிழியப் பேசும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவால்மணிப்பூரை அமைதியாக்க முடியவில்லை. சர்தார் படேலுக்கு அடுத்தபடியாக 'இரும்பு மனிதர்' பெயர் பலகையைப் பொருத்திக் கொள்ளும் அமித்ஷாவால் மணிப்பூரை அமைதியாக்க முடியாமல் போனது அக்கறையின்மையா? தகுதியின்மையா?






