முரசொலி தலையங்கம்

“தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் சந்திரபாபு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

“மாண்புமிகு சந்திரபாபுவுக்கு இதுகூடத் தெரியாதா?” என தலைப்பிட்டு தமிழ்நாட்டை விமர்சித்த ஆந்திர முதல்வருக்கு பதிலடி கொடுத்த முரசொலி தலையங்கம்!

“தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் சந்திரபாபு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க.வுக்கு பல்லக்குத் தூக்கி தென் மாநில உரிமைகளைக் காவு வாங்கி வரும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு அவர்கள், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சென்னை வந்திருந்தார். வந்தவர், பிரதமர் மோடியை பெருமைப்படுத்திச் சென்று இருந்தால் நமக்கு எந்த வருத்தமும் ஏற்படப் போவதில்லை. ஆனால் தமிழ்நாட்டை அவமானப்படுத்தி விட்டுப் போயிருக்கிறார்.

தமிழ்நாட்டை அவமானப்படுத்துவதாக நினைத்து தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் சந்திரபாபு. விமானநிலையங்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. எதையாவது குறை சொல்ல வேண்டும் என்று நினைத்து, சென்னை விமானநிலையத்தைக் குறை சொல்லி பேட்டி தந்துள்ளார் அவர்.

‘‘சென்னையில் உள்ள விமான நிலையம் மிகப் பழமையானது. ஆனால் அது ஐதராபாத், பெங்களூரு விமான நிலையத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறதா? ஐதராபாத்தை நான் மேம்படுத்திய பிறகு என்னை கர்நாடகம் பின்பற்றியது. தற்போது அடுத்த ஒரு நவீன விமானநிலையத்தை அமராவதியில் 5 ஆயிரம் ஏக்கரில் கட்டுகிறேன். இப்போது சொல்லுங்கள், தமிழ்நாடு எங்கே இருக்கிறது?’’ என்று கேட்கிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு.

சென்னை விமானநிலையம் மேம்படுத்தப்படவில்லை என்ற கேள்வியை பிரதமர் மோடியைப் பார்த்துத்தான் மாண்புமிகு சந்திரபாபு கேட்க வேண்டும். ‘சென்னை விமான நிலையத்தை இந்த நிலைமையிலா வைத்திருப்பது?’ என்ற கேள்வியை ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பார்த்துதான் கேட்க வேண்டும். தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டிலா விமானநிலையம் இருக்கிறது? விமானத் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறியாதவரா மாண்புமிகு சந்திரபாபு?

தொழில் நுட்ப வளர்ச்சியில் ஐதராபாத்தும், பெங்களூரும் முன்னேறி விட்டதாம். சென்னையைப் பற்றி யாரும் பேசுவது இல்லையாம். வேலைக்காக அமெரிக்கா போய்விட்டார்களாம் சென்னை மக்கள். அதில் ஒருவராம் சுந்தர் பிச்சை. சொல்கிறார் மாண்புமிகு சந்திரபாபு.

“தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் சந்திரபாபு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தான் சுந்தர் பிச்சை அமெரிக்காவுக்குப் போனாரா? என்ன அபத்தம் இது?

இது எவ்வளவு கேலிக்கூத்தான கருத்து என்பதை சந்திரபாபு அவர்கள் முன்பு சொன்ன கருத்தின் மூலமாகவே மறுக்கலாம்.

5.3.2025 அன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய மாண்புமிகு சந்திரபாபு அவர்கள், ‘’உலகம் முழுவதும் தமிழர்கள் நல்ல பதவிகளில் உள்ளனர்” என்று சொன்னார். ‘’ஆங்கிலம் படித்ததால் தமிழர்கள் உலகம் முழுவதும் கோலோச்சுகிறார்கள்” என்று சொன்னார்.

மொழிக் கொள்கை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சந்திரபாபு பதில் அளித்தார். அப்போது அவர், ‘’ஆங்கிலம் படித்ததால் தமிழர்கள் உலகம் முழுவதும் கோலோச்சுகிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளில் நாடு முழுவதும் தமிழர்கள் அதிகம் உள்ளனர். உயர் பதவிகளில் தமிழர்கள் அதிகம் இருப்பதற்கு அவர்களுடைய ஆங்கில அறிவு முக்கியக் காரணமாக உள்ளது.

ஆங்கிலத்தை நன்றாகக் கற்றதால்தான் அமெரிக்கா நிறுவனங்களில் உயர் பதவிகளில் தமிழர்கள் உள்ளனர். எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு முக்கியப் பதவிகளில் தமிழர்களைக் காண்கிறேன்”என்று பெருமையாகச் சொன்னவர் அவர்தான். தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக்கொள்கை பின்பற்றப்படும் நிலையில், தமிழர்கள் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு புகழாரம் சூட்டினார். ஆனால் இன்று பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்க, அப்படியே மாற்றிப் பேசுகிறார் சந்திரபாபு.

இந்தியாவிலேயே தகவல் தொழில் நுட்பத் துறையில் முதல் பாய்ச்சலை ஏற்படுத்தியது தமிழ்நாடு ஆகும். சென்னையில் 1999–ஆம் ஆண்டு, தலைவர் கலைஞர் அவர்களால் டைடல் பார்க் உருவாக்கப்பட்டது. திராவிட மாடல் அரசு தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நிலையினை இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளது.

கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, ஓசூர்,திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் , தூத்துக்குடி ஆகிய இடங்களில் எல்காட், தொழில்நுட்பப் பூங்காக்களும், சிறு தொழில்நுட்பப் பூங்காக்களும் நிறுவப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இம்மாவட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு தகவல்தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான மாபெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.

“தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் சந்திரபாபு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

இது எதையும் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் பேசுவது சரியா?

இன்றைக்கு பிரதமர் மோடியை ஆதரிக்கும் சந்திரபாபு, இரண்டு முறை மோடியை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியவர். 2002 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ரத்தக் குவியல் நடத்தப்பட்டது. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த சந்திரபாபு அவர்கள், “மோடி குஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்!” என்று சொன்னார்.

குஜராத் கலவரத்தைக் காரணமாகக் காட்டி 2004 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகினார் சந்திரபாபு.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது அந்தக் கூட்டணியை சந்திரபாபு ஆதரித்தார். அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சி பங்கெடுத்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து சந்திரபாபு விலகினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மோடி முடிவெடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் சந்திரபாபு. தெலுங்கு தேசத்தின் இரண்டு அமைச்சர்களும் பதவி விலகினார்கள்.

‘‘ஆந்திராவுக்கான உரிமை கேட்டு 29 முறை டெல்லி போனேன். எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை’’என்று சந்திரபாபு சொன்னார். மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தார் சந்திரபாபு. ‘நான் மோடிக்கு முன்பே முதலமைச்சர் பதவிக்கு வந்தவன்’ என்று சொன்னார். மோடியின் மனைவி குறித்த கேள்வியை தொடர்ந்து எழுப்பியவரும் அவர்தான்.

‘தனது அரசியல் குருவான அத்வானி முதுகில் குத்தியவர் மோடி’என்று சொன்னார் அவர். ‘குஜராத் வளர்ந்திருக்கிறதா? ஹைதராபாத் வளர்ந்திருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினார். 2019 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்துக்கு வந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வார்கள் என்பதற்கான ஆதாரங்களை வழங்கினார்.

இப்படி தன்னுடைய பழைய வரலாறுகளை சந்திரபாபு அவர்கள் மறந்துவிட்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இன்று பா.ஜ.க.வை ஆதரிக்கும் வேகத்தில் மாறவும் செய்வார்.

banner

Related Stories

Related Stories