முரசொலி தலையங்கம்

ஜானகி அம்மையார் மீது இப்போது என்ன திடீர் பாசம்? : பழனிசாமியின் வேஷத்தைக் கலைத்த முரசொலி!

சாதனைகளைச் சொல்லி வோட்டுக் கேட்க முதுகெலும்பு இல்லாக் காரணத்தால் கப்சாக்களை விட்டு காலம் தள்ளுகிறார் பழனிசாமி

ஜானகி அம்மையார் மீது இப்போது என்ன திடீர் பாசம்? : பழனிசாமியின் வேஷத்தைக் கலைத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையைங்கம் (08-04-2026)

ஜானகி எம்.ஜி.ஆர் மறைவும் ஆர்.எம்.வீ அளித்த வாக்கு மூலமும்!

ஜானகி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கடற்கரையில் அடக்கம் செய்யக்கேட்டதாகவும், தி.மு.க. அரசு அன்று அனுமதி தரவில்லை என்றும் வாய்க்கு வந்த பொய் மூட்டையை அவிழ்த்துள்ளார் பழனிசாமி. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ஏதுமில்லை. ஏதாவது பொய்யைச் சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.

1996 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தலைவர் கலைஞர். தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர்கள் படம் எல்லாம் வரிசையாக கோட்டையில் அமைச்சரவை அரங்கில் மாட்டப்பட்டு இருக்கும். ஆனால் அதில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் படம் இல்லை. ஜெயலலிதா வைக்கவில்லை. இதனை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், உடனடியாக ஜானகி எம்.ஜி.ஆர். படத்தை மாட்டச் சொன்னார்கள். எனவே, தி.மு.க.வுக்கு பெருந்தன்மையை பழனிசாமி போதிக்கத் தேவையில்லை.

1996 மே 19 ஆம் நாளன்று ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தார்கள். இராமாவரம் தோட்டத்தில் தனது பேத்தி பிறந்த நாளைக் கொண்டாடி விட்டு மதிய உணவு சாப்பிட்டார் ஜானகி. பகல் 2.30 மணிக்கு திடீரென்று இருதயத் தாக்கு ஏற்பட்டு இயற்கை எய்தினார். இந்த செய்தி கிடைத்ததும் இராமாவரம் தோட்டத்துக்குச் சென்று இறுதி அஞ்சலி செய்தார் முதலமைச்சர் கலைஞர். ‘எங்கே தகனம் செய்கிறீர்கள்?' என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டார்கள். ‘இராமா- வரம் தோட்டத்திலேயே எம். ஜி. ஆருக்கும், அவரது தாயாருக்கும் நினைவகம் இருக்கிறது. அதற்கு அருகில் தகனம் செய்யப் போகிறோம்' என்றார்கள். உடனடியாக அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் கலைஞர். மே 20 ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவித்தார் முதலமைச்சர் கலைஞர்.

‘”மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி இராமச்சந்திரன் அவர்களின் உடல் நாளை ( 20.5.1996) மாலை சென்னை இராமாவரம் தோட்டத்தில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்”என்று முதலமைச்சர் அவர்கள்தான் அறிவிப்பே செய்தார்கள். இறுதி நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சிலார், சமூகநலத் துறை அமைச்சர் எஸ்.பி. சற்குண பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

முதலமைச்சர் கலைஞர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “இந்தத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்னை மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். நானே நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லி இருந்தேன். அதற்குள் இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வந்துவிட்டது” என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.

16.6.1996 அன்று இராமாவரம் தோட்டத்தில் ஜானகி அம்மையார் படத்திறப்பு விழா நடைபெற்றது. படத்தை திறந்து வைக்க அழைக்கப்பட்டவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான். கடந்த கால நினைவுகளைத் தொகுத்து மிக நீண்ட உரையாற்றினார் கலைஞர் அவர்கள்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்.ஜி.ஆர். அவர்களின் நிழல் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், ”ஜானகி அம்மையார் படத்தை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைப்பது காலம் அளித்த துல்லியமான தீர்ப்பு” என்று குறிப்பிட்டார்.

ஜானகி அம்மையார் மீது இப்போது என்ன திடீர் பாசம்? : பழனிசாமியின் வேஷத்தைக் கலைத்த முரசொலி!

“தமிழகத்தின் வரலாற்றை இந்த நூற்றாண்டில் எழுதத் தொடங்கிய தலைவர்கள், அந்த வரிசையில் அவர்களுடைய வழியிலே நடந்து செல்வதற்கு இன்றைக்கு ஒருவரை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள்தான் நம்முடைய டாக்டர் கலைஞர் அவர்கள் ஆவார்கள். அத்தகைய டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தப் படத்தினைத் திறந்து வைப்பதிலேதான், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அமைந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த அன்றைய நள்ளிரவு கலைஞர் அவர்களை ஜானகி அம்மையார் அவர்கள் வாழ்த்தி இருக்கிறார்கள்.

பாட்சித் தலைவரின் காதலியாக இருந்து அவர் கைப்பிடிக்கும் மனைவியாக ஜானகி அம்மையார் அவர்கள் மாறுவதற்கு அன்றைக்கு உடன் இருந்தவர், புரட்சித் தலைவர் அவர்களுக்கு உடன்பிறவாச் சகோதரராக இருந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அந்த ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்ததற்குப் பிறகு அவர்களது உடல் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதற்கு டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்கள். காலத்தின் இந்தத் தீர்ப்பை மாற்ற எவராலும் முடியாது.

இது இப்படி நடைபெறவில்லை என்றால் இதற்கு சிறப்பு வந்து சேராது. இவ்வளவு அமைதியாக நாம் இங்கே இருக்க முடியாது. இவ்வளவு மனம் உருகி அவர்களை வணங்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. என்னைப் போன்றவர்கள் கூட உங்கள் முன்னால் நிற்பதற்கு அனுமதியே கிடைத்திருக்காது. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருக்கு தொண்டர்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்”என்று பேசினார் ஆர். எம். வீரப்பன் அவர்கள். பழனிசாமி சொல்வதைப் போல சம்பவங்கள் அந்தக் காலத்தில் நடக்கவில்லை என்பதற்கு ஆர். எம். வீரப்பன் அவர்களது உரையே சாட்சி.

ஜானகி அம்மையார் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ‘இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது' என்று சொன்னவர் ஜெயலலிதா. ஜானகி அம்மையார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று( 28.1.1988) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாறு காணாத வன்முறையை நிகழ்த்தியது யார் என்பதை பழனிசாமி சொல்வாரா?

இத்தனை ஆண்டு காலத்தில் ஜானகி அம்மையார் பெயரை பழனிசாமியின் வாய் ஒருமுறையாவது உச்சரித்தது உண்டா? நான்காண்டு காலத்தில் ஏதாவது ஒரு திட்டத்துக்கு ஜானகி பெயரை வைத்துள்ளாரா பழனிசாமி? இப்போது என்ன திடீர் பாசம்? வேஷம்?

சாதனைகளைச் சொல்லி வோட்டுக் கேட்க முதுகெலும்பு இல்லாக் காரணத்தால் கப்சாக்களை விட்டு காலம் தள்ளுகிறார் பழனிசாமி

banner

Related Stories

Related Stories