முரசொலி தலையங்கம்

“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

பிரதமர் மோடி ஒரு அவையில் பேசவில்லை; மறு அவையில் பேச்சு வரவில்லை என்றும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இதுவரை இப்படி நடந்தது இல்லை என முரசொலி தலையங்கம் விமர்சனம்.

“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

முரசொலி தலையங்கம் (07-02-2026)

ஒரு அவையில் பேசவில்லை; மறு அவையில் பேச்சு வரவில்லை!

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இதுவரை இப்படி நடந்தது இல்லை. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்

தீர்மானத்தின் மீது பிரதமர் பேசாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்களவையில் பிரதமர் மோடி பேசவில்லை. பிப்ரவரி 4 மாலை 5.00 மணிக்கு அவர் பேசுவார் என்றார்கள். பேசவில்லை. பேச வரவில்லை. அதற்கு வசதியாக 3.00 மணிக்கே அவையை ஒத்தி வைத்துவிட்டார் சபாநாயகர் ஓம் பிர்லா. 5 ஆம் தேதியன்று காலையில் பிரதமர் பேசுவார் என்று சொல்லப்பட்டது. அப்போதும் பிரதமர் மோடி பேசவில்லை.

பிரதமர் பேசாமல் போனதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா சொன்ன காரணம்தான் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருந்தது.

இதோ சபாநாயகர் ஓம் பிர்லா சொல்கிறார்...

‘‘மக்களவையில் சில எம்.பி.க்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டனர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்த பிரதமர் மோடி மக்களவைக்கு வருவதாக இருந்தார். அவர் வருவதற்கு முன்பாக, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமர் இருக்கையைச் சுற்றி வளைத்திருந்தனர்.

பிரதமரின் உரையின்போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்று எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது தேசத்தின் கண்ணியத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான், நாடாளு மன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக் கொண்டேன்’’ என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இவர் சபாநாயகராக இருப்பதற்குப் பதிலாக கதை எழுதப் போகலாம். பிரதமர் மோடிக்கு சபைக்கு வருவதற்குப் பயம். உள்ளே வந்தால், யார் யார் என்ன கேள்வியை எழுப்புவார்களோ என்ற பயம். மக்களவை உறுப்பினர்களை தலைநிமிர்ந்து பார்க்க முடியாத நிலையில்தான், ‘பேச வேண்டாம்’ என்று முடிவெடுத்து இருக்கிறார் பிரதமர் மோடி. இதற்கு அவர்களாகக் கண்டுபிடித்த காரணம் தான், பெண் எம்.பி.க்கள் பிரதமரைத் தாக்க முயற்சிக்கிறார்கள் என்பது ஆகும்.

“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

இந்த நாட்டின் பிரதமரை, இரண்டு மூன்று எம்.பி.க்களிடம் இருந்து காப்பாற்றுவதற்குக் கூட சபாநாயகர் ஓம் பிர்லாவால் முடியாதா? இவர் எப்படி 500க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பாதுகாக்கப் போகிறார்? நாட்டின் பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்று உலகநாடுகள் அறிந்தால் ‘லோககுரு’வின் இமேஜ் என்ன ஆகும்? சரியாதா? இதற்கு மேல் சரிவதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்கிறாரா ஓம் பிர்லா?

இந்தியாவைக் காக்கும் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கியது இதுவரை நாடாளுமன்றத்தில் நடக்காதது.

மக்களவைக்கு வர முடியாத, பேச முடியாத, விளக்கம் அளிக்காத பிரதமர் மோடி, மாநிலங்களவைக்கு திடீரென வந்தார். வரும் போதே முகம் கடுமையான இறுக்கத்தில் இருந்தது. பேசத் தொடங்கினார். அவருக்கே பேச்சு வரவில்லை. எதிர்க்கட்சிகள் மிகக்கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுப்பினார்கள். இது போல எதிர்ப்புக் குரல்கள் வரும் போதெல்லாம், அதைப் பற்றிக் கவலைப்படாமல் பிரதமர் பேசுவார். எதிர்ப்பு அடங்கியதும், கிண்டல் அடிப்பார். இப்படி பல முறை நடந்துள்ளது.

ஆனால், இம்முறை வேறு மாதிரி நடந்து கொண்டார் பிரதமர். எதிர்க்கட்சிகளைப் பார்த்து, ‘அமைதியாக இருங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ‘எனக்கு பேச கஷ்டமாக இருக்கிறது’ என்றார். ‘என்னைப் பேச விடுங்கள்’ என்று பலமுறை கேட்டார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைப் பார்த்து பேசிய பிரதமர் மோடி, ‘‘கார்கே ஜி, உங்கள் வயதைக் கருத்தில் கொண்டு நான் சொல்கிறேன், தயவுசெய்து அமர்ந்து கொண்டு கோஷம் எழுப்புங்கள். உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்’ என்றார். எதிர்க்கட்சிகள் முழக்கம் கேட்டுக் கொண்டே இருந்தது. பிரதமரால் பேச முடியவில்லை. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு தான் நிம்மதி வந்தது பிரதமருக்கு.

அவரது வழக்கமான உரையாக அமையவில்லை. பேச்சு வராமல் திணறினார். கழிவிரக்கம் தேடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளை விமர்சித்துக் கொண்டு இருந்தார் பிரதமர். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப் போவதால் அங்குள்ள திரிணாமூல் அரசைப் பற்றித்தான் குறைசொல்லி அதிகம் பேசினார்.

“காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு மாற்றம் கொண்டு வந்தோம், பாகிஸ்தான் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரம் ஒழிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றனர். ஆனால், தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் எனக்குக் கவசமாக இருக்கும் வரை, அவர்களால் எதையும் செய்ய முடியாது” என்று அழுகாச்சி காவியம் வாசித்தார் பிரதமர்.

பாகிஸ்தான் பயங்கரவாதம் ஒழியவில்லை, அது இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் உதாரணமாக நடைபெற்று வருகிறது. பிரதமருக்கு இதுவே தெரியவில்லை. இடதுசாரிகள் என்று மோடி நினைக்கும் கட்சிகள் வேறு, நக்சல் அமைப்புகள் வேறு. இதுவும் அவருக்குத் தெரியவில்லை.

சீனா இந்திய எல்லை ஆக்கிரமிப்பு குறித்து எந்த விளக்கமும் அவர் உரையில் இல்லை. எப்ஸ்டீன் பைல்ஸ் பற்றி விளக்கம் அளிக்கவில்லை. அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. விளக்கங்கள் ஏதுமற்ற விளக்க உரையாக அது இருந்தது. மாநிலங்களவையிலாவது பேசி பதிவு செய்யலாம் என்று வந்து, ஒப்புக்கு உரையாற்றியதைப் போல இருந்தது அவரது உரை.

banner

Related Stories

Related Stories