
முரசொலி தலையங்கம்
26.01.2026
இந்தியாவை வளர்த்து விட்டாரா மோடி?
இதுவரை உலகப் பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, இனி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். இங்கே தேர்தல் வரப்போகிறது. அதனால் அவரது தலையை அடிக்கடி பார்க்கலாம்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மோடி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால், 'இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேற்றி விட்டேன்' என்று அவர் சொன்னதுதான். இந்தியாவை அவர் எந்தெந்த வகையில் எல்லாம் முன்னேற்றி இருக்கிறார் என்பதை பட்டியல் போட்டு இருந்தால் பாராட்டலாம். அப்படி எதுவும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம் 2025 அறிக்கையின் படி உலகத்தில் உள்ள 193 நாடுகளில் இந்தியா 130 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, மருத்துவம், தனிநபர் வருமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். உலக நாடுகள் வரிசையில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்று பாருங்கள்.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தனிநபர் வருமானத்தில் 196 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 144 ஆவது இடத்தில் இருக்கிறது.உலக நாடுகளின் வரிசையில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
இந்தியாவின் பொருளாதாரத்தை அவர் வளர்த்துள்ளாரா? இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு வைத்துள்ளார். இதற்காக உயர்த்த ஆண்டுக்கு 8 விழுக்காடு வளர்ச்சி தேவைப்படுகிறது. ஆனால் அவர் அப்படி வளர்த்திருக்கிறாரா இல்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 அளவிலேயேதான் இருக்கிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்து வருகிறது. இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்குமான இடையிலான இடைவெளி நிரப்ப முடியாததாக இருக்க முடிகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு 92 ரூபாயைத் தாண்டிச் செல்வது இந்தியப் பொருளாதாரத்தின் மாபெரும் சவால் ஆகும். மோடி பிரதமராகப் பதவியேற்ற போது 58.58 ரூபாயாக இருந்தது. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைப் பார்த்து, அதற்கு காங்கிரஸ் அரசின் ஊழல்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அந்த வகையில் பார்த்தால், பா.ஜ.க. ஆட்சியின் ஊழல்கள் இரண்டு மடங்கு அதிகம் ஆகி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய மக்கள் அதிகமாக வேளாண்மையைச் சார்ந்து உள்ளார்கள். அதில் எந்த முன்னேற்றத் திட்டமும் இல்லை. உற்பத்தி துறையில் மந்த நிலைமை உருவாக்கும் வகையில் தான் ஒன்றிய அரசின் திட்டங்கள் உள்ளன. உணவுப் பொருள்கள், அவசியப் பொருட்கள், முக்கியப் பொருட்களின் விலைகள் அதிகமாகி உள்ளன. விலைவாசி உயர்வு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டை மீறியதாக ஆகிவிட்டது.
இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து தங் கள் முதலீடுகளைத் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார்கள்.
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் குறைந்துள்ளது. முதலீடு செய்தவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மோடி அரசு இழந்துவிட்டது. குறிப்பிட்ட ஒருசில நிறுவனங்களுக்குச் சாதகமான அரசாக மட்டுமே மோடி அரசு இருக்கிறது. அனைத்து தொழில் நிறு வனங்களும் சம வாய்ப்பை தரும் அரசாக இல்லை.இவர் சொல்லும் சுயச் சார்பு என்பது அதானிகளுக்கு மட்டுமே வளர்க்கும். இந்திய அரசின் வளங்களை அதானிக்கு தாரை வார்ப்பது மோடி அரசாங்கத்தில் வெளிப்படையாக நடந்துள்ளது.
அமெரிக்க கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடியை நெஞ்சுரத்துடன், துணிச்சலாகத் தாங்கும் மனவலிமையில் மோடி அரசாங்கம் இல்லை. சீன ஆக்கிரமிப்பை, கண்டுகொள்ளாமல் மறைக்கிறது மோடி அரசாங்கம். மோடிக்கு, சின்ன நாடான இலங்கை கூட பயப்படவில்லை. இந்திய மீனவர்களை துணிச்சலாக கைது செய்வதை இலங்கை இன்னமும் நிறுத்தவில்லை.

வேளாண்மையை இலாபமான தொழிலாக மாற்றுவேன் என்றார். மாற்றினாரா? உழவர் வருமானம் இரண்டு மடங்கு ஆகும் என்றார். இரண்டு மடங்கு ஆனதா? இல்லை. இரண்டு ஆண்டு காலம் தொடர்ந்து போராடி, 200 பேர் மரணம் அடைந்ததுதான் மோடி ஆட்சி காலம் ஆகும்.
கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டுக்கும் 15 லட்சம் போடுவோம் என்றார்கள். போட்டார்களா? இல்லை. கருப்புப் பணத்தையா வது ஒழித்தார்களா? இல்லை.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார் மோடி. தந்தாரா? இல்லை. வேலை இழப்புதான் அதிகம். புதிய வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை. பக்கோடா விற்கப் போகச் சொல்கிறார் உள்துறை அமைச்சர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழித்தது. அது இன்னமும் மீளவில்லை. எதற்காக அதைச் செய்தார்கள் என்ற மர்மம் இதுவரை விலகவில்லை.
தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா? இல்லை. காஷ்மீரில் தீவிரவாதம், பயங்கரவாதம் தொடர்கிறது. மோடி, அமித்ஷாவின் சட்டம் ஒழுங்குக்கு சாட்சி மணிப்பூர். மூன்று ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் வன்முறை நிற்கவில்லை. அங்கு இவர்கள் போவதும் இல்லை.
மொத்தத்தில் இந்தியாவில் இருந்தால் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் பிரதமர் பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்கிறார். தேர்தல் நடக்கும் மாநிலத்துக்கு தேர்தல் நேரத்தில் வருகிறார். இந்தியா என்ன நிலைமையில் இருக்கிறது என்றே தெரியாமல் பேசுகிறார்.
எதேச்சதிகாரத்தால் வகுப்புவாதத்தை வாழ வைத்து, இந்தியாவில் ஆட்சி நடத்தி விடலாம் என்று நினைக்கும் மோடி ஆட்சிக்கு எண்ணிக்கையைக் குறைத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே மக்கள் பாடம் கற்பித்தார்கள். அதில் இருந்து அவர் பாடம் கற்கவில்லை. தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் தக்க பாடத்தைக் கொடுக்கும்.






