
‘இந்தி எதிர்ப்புப் போர் என்பது மொழிப்போர் மட்டுமல்ல, இது இன உரிமைப் போர்” என்றார் தலைவர் கலைஞர்!
தமிழ் காக்க, தமிழினம் காக்க நடைபெற்று வருவதுதான் மொழிப்போராட்டம் ஆகும். முதலாவது மொழிப்போர் என்று 1938 ஆம் ஆண்டு சொல்லப்பட்டாலும் அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, இந்தி ஆதிக்கத்தை, மொழித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழ்நாட்டில் இந்தியப் பிரச்சார சபா தொடங்கப்பட்ட காலத்தில் அதற்கான நிதி திரட்டப்பட்டபோது, தமிழர்கள் யாரும் நிதித் தரக்கூடாது என்று சொன்னவர் பெரியார். பல்வேறு மாநாடுகளில் தீர்மானம் போட்டார் பெரியார். தனது ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து எழுதினார் பெரியார். இவை எல்லாம் 1938 போராட்டத்துக்கு முந்தைய பத்தாண்டுகள் ஆகும்.
1938 ஆம் ஆண்டு அரசின் சார்பில் பள்ளிகளில் இந்த கட்டாயம் ஆக்கப்பட்ட போதுதான் அது மிகப்பெரிய போராட்டம் ஆனது. இதில் அரசியல் இயக்கங்களைவிட தமிழ் இயக்கங்கள், தமிழறிஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்று தூண்டினார் பெரியார். அதனால் விழிப்புணர்வு பெற்று தமிழறிஞர்கள் அப்போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் குடும்பம் குடும்பமாகச் சிறை சென்றார்கள். பெரியார் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். பேரறிஞர் அண்ணா கைது செய்யப்பட்டார்.

1938 – இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரத்தில் கலைஞருக்கு வயது 14.நாள்தோறும் மாணவர்களைக் கூட்டிக் கையில் தமிழ்க் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி, கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணியை நடத்தினார். இத்தகைய போராட்டத்தால் இந்தித் திணிப்பு அப்போது கைவிடப்பட்டது.
மீண்டும் 1948 ஆம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டது. பெரியாரும், அண்ணாவும் தலைமைவகித்து மொழிப் போராட்டம் நடத்தினர். பின்வாங்கியது இந்தி. இருந்தாலும் ஆண்டுதோறும் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை நடத்தியது திராவிட இயக்கம். 1950 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த எழுத்துகளை அழிக்கத் தொடங்கியது. அதன் பிறகு தான் புகைவண்டி நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் தமிழில் எழுதியது ஒன்றிய அரசு.
1963 – இந்தித் திணிப்பைக் கண்டித்து போராட்டக் களம் அமைக்கப்பட்டது. கலைஞர் தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. ‘நான் பெற்றுக் கொண்டிருக்கிற இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவேன். பணியாற்றுவேன். பலியாகவும் தயாராக இருக்கிறேன்’ என்றார் கலைஞர். மதுரையில் சட்டத்தை எரித்து கலைஞர் கைதானார். கலைஞருக்கு தேனியில் அண்ணா அவர்கள் வீரவாள் பரிசளித்துப் பாராட்டினார். அந்த மூன்றாண்டு காலமும் மொழிப்போரால் கனன்றது தமிழ்நாடு. அதுவரை போராட்டமாக இருந்தது, 1965 ஆம் ஆண்டு போராக மாறியது. கழகத்தோடு இணைந்து மாணவர்கள் நடத்திய போர் அது. அடுத்து அமைந்த கழக அரசு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கும் சூழலை அரசியல் வெற்றி ஏற்படுத்திக் கொடுத்தது.

1970 திருச்சி மாநாட்டில் ஐம்பெரும் முழக்கத்தை தலைவர் கலைஞர், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்று அறிவித்தார் ஒரு முழக்கமாக இணைத்தார். அடுத்த ஆண்டு கோவையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய இன்றைய தலைவர் – அன்றைய மாணவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘தமிழுக்காக உயிர் தரத் தயார், அந்தப் பட்டியலில் என்னை இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று முழங்கினார்.
‘‘இந்தி எதிர்ப்பு என்பது செத்த குதிரை’’ என்று 1978 ஆம் ஆண்டு பிரதமர் மொரார்ஜி சொன்னபோது, ‘‘அது செத்த குதிரையல்ல, தூங்கும் குதிரை’’ என்றார் கலைஞர். தூங்கும் குதிரையைத் தட்டி எழுப்பினார் கலைஞர்.
1986 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தை இந்தி வாரமாகக் கொண்டாட அன்றைய அரசு அறிவிப்பு செய்த போது, ‘தேவநகரி வரி வடிவத்தில் உள்ள இந்த இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும்’ என்று எழுதி அதனைக் கொளுத்தினார் தலைவர் கலைஞர்.
1993 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் இந்தி நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு இளைஞரணிச் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொலைக்காட்சிப் பெட்டிகள் உடைக்கப்பட்டன.
2012 ஆம் ஆண்டு என்.சி.ஐ.ஆர்.டி. வெளியிட்ட பாடப்புத்தகத்தில் 1965 மொழிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துப்படம் இடம்பெற்றிருந்தது. அதனை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதன்பிறகு அந்த கருத்துப்படம் நீக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இந்திக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துக் கூறியபோது, ‘மீண்டும் 1965 கிளம்பும்’ என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். ‘அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இப்போதும் மும்மொழித் திட்டத்தை புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலமாகப் புகுத்துகிறார்கள். அதனை ஏற்க மறுத்துவிட்டார் முதலமைச்சர் அவர்கள். இதனால் நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனாலும் மொழித் திணிப்பை ஏற்காமல் போராடி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது மட்டுமல்ல, ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடிக் கொண்டு தான் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஜனவரி 25 அன்று தமிழ்நாடு முழுவதும் கழக முன்னணியினர் முழங்கினர்.
‘‘இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களில் ஒன்றானது – திராவிடக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுமான தமிழ்த் தேசியத்தை வளர்த்துக் காத்திடவும் – தமிழ் மொழிக்குப் பிறமொழியால் ஆபத்து அணுவளவும் நேராமல் தடுக்கவும் பொறுப்பேற்றுப் பணியாற்றக்கூடியவர்களாக நாமாகத் தான் இருக்கிறோம் – (22.4.1977) என்று கலைஞர் சொன்னார். அத்தகைய பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர்.
‘‘மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள்’’ என்ற தலைவரின் முழக்கம் கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வு ஆகட்டும்.
முடியவில்லை மொழிப்போர்! செந்தமிழைக் காக்க சேனை ஒன்று தேவை!






