
மாநில உரிமைகளுக்கு எதிராக பியூஸ் கோயல் பேசியதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. அவருக்கு சரியான பாடம் கற்பிக்கும் தமிழ்நாடு! என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
பியூஸ் கோயல் மறக்கலாமா? என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
சரிவை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் பா.ஜ.க.வை எப்படியாவது காப்பாற்றலாமா என்ற நோக்கத்தோடு வந்திருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல். அவர் நேற்றைய தினம் ஒரு பேட்டி அளித்துள்ளார். ‘‘எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழ்நாட்டுக்கு வழங்கிய நல்லாட்சியை மீண்டும் கொடுப்பதே எங்கள் இலக்கு. அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் ஒரு மாநிலமாக உருவாக்கியதை நாம் மறக்க முடியாது” என்று சொல்லி இருக்கிறார் பியூஸ் கோயல்.
அவருக்கு மனச்சாட்சி என்ற ஒன்று இருக்கிறதா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பியூஸ் கோயல் என்ன சொன்னார்? என்ன பேட்டி கொடுத்தார்?
‘‘இந்திய மாநிலங்களிலேயே தனி மாநிலமாக தமிழ்நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே மத்திய அரசால் தொடர்பு கொள்ள முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே முடியவில்லை. அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களிடம் பலமுறை பேச முயன்றேன்.
எந்தப் பலனும் இல்லை. இந்தியாவில் 28 மாநிலங்களில் என்னால் இயல்பாகப் பேச முடியும். ஆனால் தமிழ்நாட்டில் முடியாது. தமிழக மின் துறை அமைச்சர் எல்லாவற்றையும் என்னிடம் கேட்டுவிட்டு, ‘அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்கிறார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் யாராலும் நாடாளுமன்றத்தில் வாயைக்கூட திறக்க முடியாது. சென்னையில் எழுதித் தரப்பட்ட உரையைத்தான் அவர்கள் அப்படியே வாசிப்பார்கள்” என்று பேட்டி அளித்தவர் பியூஸ் கோயல்.இன்று இவர் ஜெயலலிதாவுக்கு ‘போர்ஜரி சர்டிபிகேட்’ கொடுக்கிறார்.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இங்கு பரப்புரை செய்ய வந்த அமித்ஷா, அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பேசினார். திருச்சியில் பேசிய அமித்ஷா, ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கினார். ‘‘இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் ஜெயலலிதாவின் அரசாங்கம்தான் என்றார். ‘‘மே 16 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பேசினார்.
மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உட்பட மூன்று மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘‘கடனில் சிக்கித் தவிக்கும் மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் ‘உதய்’ உள்ளிட்ட மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.

• பா.ஜ.க.வுக்குத் தந்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் வாங்கிய அன்று, ‘இன்று இரவுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்’ என்றவர் வாஜ்பாய்.
• ‘அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா’ என்று சொன்னவர் ஜெயலலிதா.
• ‘மோடியா, இந்த லேடியா?’ என்று கேட்டவர் ஜெயலலிதா. இதையெல்லாம் மறந்து விட்டு ஜெயலலிதா துதிபாட வந்திருக்கிறார்கள் பா.ஜ.க. அமைச்சர்கள். அ.தி.மு.க.வை வைத்து ‘டெபாசிட்’ வாங்கலாமா என்ற நப்பாசை தான் இதற்கு அடிப்படை.
பெங்களூரு நீதிமன்றத்தில் நான்காண்டு சிறைத் தண்டனையும் -– 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகழை பா.ஜ.க. பாடத் தொடங்கியதன் பின்னணி அற்ப அரசியல்தானே?
2020 செப்டம்பர் மாதம் பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஒரு புள்ளிவிபரம் வெளியானது. ‘மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம் – 2029’ அடிப்படையில் எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் அது. இதில் பதினான்காவது இடத்தில் இருந்தது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட்டவர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது உடன் இருந்தவர் தொழில் -– வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர். இதை பியூஸ் மறந்து போனது ஏன்?

வாரிசு அரசியல் பற்றியும் பியூஸ் பேசி இருக்கிறார். வாரிசு அரசியலைப் பற்றி பேசும் தகுதி அவருக்கு இருக்கிறதா?
வேத் பிரகாஷ் கோயல் - – சந்திரகாந்தா கோயல் ஆகியோரின் மகனாக மும்பையில் பிறந்தவர் இந்த பியூஷ் கோயல். இவரது தந்தை வேத் பிரகாஷ் கோயல், பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அமைச்சரவையில் 2001 முதல் 2003 வரை கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். பா.ஜ.க.வின் தேசியப் பொருளாளராக இருந்தவர் இவர். அவர் வழியில் அரசியலுக்குள் நுழைந்தவர்தான் இந்த பியூஸ் கோயல் .
இவரது அம்மா சந்திரகாந்தா கோயலும் அரசியலில் இருந்தவர்தான். மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இவரது தாய். இவர்களால்தான் 2010ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக ஆனவர் இவர். இத்தகைய பியூஸ் கோயல் தான் குடும்ப அரசியலைப் பற்றிப் பேசுகிறார்.
மாநில உரிமைகளுக்கு எதிராக பியூஸ் கோயல் பேசியதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. அவருக்கு சரியான பாடம் கற்பிக்கும் தமிழ்நாடு!








