
இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதனை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர். அவர்கள் ஏமாற்றப்பட்டதை பின்னர் தெரிந்து கொள்வார்கள்” என்று புலம்பல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் பழனிசாமி.
அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு என்பதை உறுதி செய்துள்ளார் முதலமைச்சர். தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்பதன் மூலம் ஓய்வூதியப் பங்களிப்புக்குச் செலுத்த வேண்டிய கூடுதல் பங்களிப்பு தொகையாக ரூ.13 ஆயிரம் கோடியும், பணியாளர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக அரசுப் பங்களிப்பாக ரூ.11 ஆயிரம் கோடியும் ஆக ரூ.24 ஆயிரம் கோடி நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளது.

“எங்கள் ஓய்வு கால வாழ்க்கை அர்த்தமுள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார். இன்றைய அறிவிப்பின் மூலம் 6.5 லட்சம் பேர் வாழ்க்கையில் முதலமைச்சர் ஒளியேற்றி வைத்திருக்கிறார்” என்று அரசு ஊழியர் சங்கத்தினர் சொல்லி இருக்கிறார்கள். செய்ய முடியாது என்று சொல்லப்பட்டதை செய்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதனைப் பாராட்டி இருக்க வேண்டும். வரவேற்று இருக்க வேண்டும். மாறாக வயிற்றெரிச்சல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்பு வந்தபோதும் அறிக்கைவெளியிட்டார். அரசாணை வரும் போதும் அறிக்கை வெளியிடுகிறார்.
இன்றையதினம் அரசு ஊழியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பழனிசாமி, தனது ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களை எவ்வளவு கேவலப்படுத்தினார் என்பதை அரசு ஊழியர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பழசை பழனிசாமி மறந்திருக்கலாம். அரசு ஊழியர்கள் மறக்க மாட்டார்கள்.
தொடக்கப் பள்ளிஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு "இவ்வளவு சம்பளமா?" என இழிவுபடுத்தியவர்தான் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?" என்று கேட்டவர்தான் பழைய பழனிசாமி.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார். அரசு ஊழியர்களை மிரட்டினார். "கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும். அரசுஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்" என்று சொன்னார் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்.

அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் நாள் அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்ட அரசுதான் இந்த பழனிசாமி அரசு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை வெளியிட்டு, இது தமிழக அரசின் வரி வருவாய் தொகையில் 70 சதவீதம் என்று தெரிவித்திருந்தார் ஜெயக்குமார்.
பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர். தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?' எனக் கொச்சைப்படுத்தியவர்தான் இந்த பழனிசாமி.
போராட்டம் நடத்திய 85 ஆயிரம் அரசு ஊழியருக்கு விளக்க விசாரணைக் கடிதம் அனுப்பியவர்தான் இந்த பழனிசாமி. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்மீது குற்றக் குறிப்பாணை கள் (178), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவியவர்தான் இந்தப் பழனிசாமி.
பழனிசாமியின் 'அம்மா' ஜெயலலிதா அரசு ஊழியர்களை என்ன பாடுபடுத்தினார் என்பது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத காயங்கள் ஆகும்.
24.-7-2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டிடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, “அரசுக்குக் கிடைக்கின்ற மொத்த வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது” என்று சொன்னார்.
2002ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அன்று,"மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதமே உள்ள அரசு ஊழியர்களுக்கு 94 சதவிகிதம் செலவு என்றால், மீதி உள்ள 6 சதவிகித வருவாயில் வளர்ச்சிப் பணிகளுக்கு என்ன இருக்கிறது” என்று சொன்னவரும் அதே ஜெயலலிதா தான்.
அரசு அலுவலர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக புதிய சட்டம்கொண்டு வரப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சியிலேதான். இந்தச் சட்டத்தை மீறி வேலை நிறுத்தம் செய்பவர்கள் மற்றும் அதைத் தூண்டுபவர்கள் ஆகியோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியிலே தான்.






