
முரசொலி தலையங்கம் (09-12-2025)
விமானங்களை இயக்க வைக்காதது யார் தவறு?
இண்டிகோ விமானங்கள் ஆறாவது நாளாக ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பெர்ஸூக்கு ஒன்றிய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆறு நாட்களாக ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டு இருந்தது? வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!
இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் தொல்லைகளுக்கு உள்ளாகி துன்பத்தால் துவண்டு கொண்டிருக்க ஒருவார காலம் வேடிக்கை பார்த்துள்ளது ஒன்றிய அரசு.
ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது இண்டிகோ. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். படுத்துக் கிடக்கிறார்கள்.
“விமானங்களை இயக்குவதற்கும், விமானிகளுக்கான ஓய்வு நேரத்தை அதிகரிப்பதற்கும் ஜூலை 1, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைமுறைக்கு வந்த புதிய அரசாங்க விதிகளுக்குப் பிறகு, விமான நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையால் திணறி வருகிறது. இது விமானப் பணியாளர்களை நிர்வகிப்பதை சிக்கலாக்கியுள்ளது,” என்று இண்டிகோ வட்டாரங்கள் சொல்கின்றன.
நவம்பரில் மொத்தமாக இண்டிகோ 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நவம்பர் மாதக் கடைசியில் இந்த நிலைமை அதிக மோசம் ஆனது. டிசம்பர் கடைசியில் இன்னும் மோசமானது. “சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள், குளிர்காலம் தொடர்பான கால அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, விமானப் போக்குவரத்து அமைப்பில் அதிகரித்து வரும் நெரிசல் மற்றும் புதிய பணியாளர் வரிசை விதிகள் (விமான கடமை நேர வரம்பு) போன்ற பல எதிர்பாராத செயல்பாட்டு சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.” என்று அந்த நிறுவனம் சொல்கிறது. உண்மையான காரணம் என்பது இவை அல்ல.
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமானப் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக விதிகளை ஒன்றிய அரசு கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதனை இண்டிகோ நிறுவனம் ஏற்க மறுக்கும் வகையில் புதுவிதமாகக் கையாண்டது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் திடீரென விமானங்களைக் கொத்துக் கொத்தாக ரத்து செய்தார்கள். இது ஒருவிதமான மிரட்டல்தான். அதுவும் வெளிப்படையான மிரட்டலாகவே அமைந்து இருந்தது.

விமானச் சீட்டு வாங்கியவர்கள் அனைவரும் பந்தாடப்பட்டார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் போக முடியாத நெருக்கடி ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் மற்ற நிறுவனங்கள் கொள்ளை விலையை வைத்து பயணச் சீட்டுகளை விற்கத் தொடங்கினார்கள்.
விமானிகள் எத்தனை மணிநேரம் வேலை செய்யலாம், எவ்வளவு ஓய்வெடுக்க வேண்டும் என்பது குறித்த புதிய விதிகள், விமானிகளின் சோர்வைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டன. ஆனால், விமான நிறுவனம் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆரம்பத்தில் ஒன்றிய அரசின் சட்டத்தின் மீது பழி போடாமல், வானிலையை காரணமாகக் காட்டியது இண்டிகோ. தற்போது, மன்னிப்பு கேட்டு திறந்த மடலை வெளியிட்டுள்ளது.
விமானி அமைப்புகள் இண்டிகோ நிறுவனத்தையே குற்றம்சாட்டியுள்ளது. ஒன்றிய அரசின் சட்டம் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்த இண்டிகோ நிறுவனம், உரிய கால அவகாசம் கிடைத்த நிலையிலும், விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என அவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வைப்பதற்காகவே, இந்த திட்டமிட்ட நாடகத்தை இண்டிகோ நடத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
தற்போது, வாரத்திற்கு 48 மணி நேர ஓய்வு என்ற சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகி உள்ளதாக விமானிகள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
விமானிகளின் உடல்நிலை, பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தான் வாரத்திற்கு 48 மணி நேர கட்டாய ஓய்வு விதி அமல்படுத்தப்பட்டது, ஆனால் இண்டிகோ கொடுத்த நெருக்கடியை சரி செய்ய உடனடியாக இந்த விதி திரும்பப் பெறப்பட்டு உள்ளது.
இப்பிரச்சினையை தொடக்கத்திலேயே கவனித்து கையாண்டிருக்க வேண்டும் ஒன்றிய அரசு. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை வைத்துள்ளது இண்டிகோ. எனவே ஒட்டுமொத்தமாக விமானப் பயணமே சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.
இண்டிகோ நிறுவனத்துடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். விமானங்களை ரத்து செய்யக் கூடாது என்று உறுதியாகச் சொல்லி இருக்க வேண்டும். அந்த நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அது எதையும் செய்யவில்லை ஒன்றிய அரசு. ‘இண்டிகோ’வைக் கட்டுப்படுத்தாதது யாருடைய தவறு? இப்போது விதிமுறைகளை திரும்பப் பெற்றது அதனை விட மோசமான நடவடிக்கை ஆகும்.
ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்று விட்டு ஒன்றிய அரசு விமான சேவையில் இருந்து கை கழுவியதன் விளைவுதான் நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் அலறுகிறது.




