முரசொலி தலையங்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!

தனிநபர் வருமானத்தில் 196 நாடுகளில் 144 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (08-12-2025)

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அந்நிய செலாவணி சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளது. முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 98.38 வரை சரிந்துள்ளது.

ஓராண்டுக்குள் ரூபாயின் மதிப்பு ரூ. 5 சரிந்துள்ளது. ரூ. 85 லிருந்து ரூ. 98 ஆகச் சரிந்து உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு 28 முதல் 27 விழுக்காடு சரிந்துள்ளது. நிகழாண்டில் ஆசியாவில் டாலருக்கு நிகரான அதிகச் சரிவைச் சந்தித்த பணமாகவும் இந்திய ரூபாய் உள்ளது .

இறக்குமதி தொடர்பான வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்படுதல், டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்டவை ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

“இந்தியா,- அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கம் அந்நியச் செலாவணி சந்தை- யில் ரூபாய் மதிப்பில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது” என்று அந்நியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“நடப்பு 2025-ம் ஆண்டில் உலக நாடுகள் கரன்ஸிகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் இழுபறியின் விளைவு இது” என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே என்று ஒதுக்கி விட முடியாது.

மிரே அசட் ஷேர்கான் நிறுவனத்தின் ஆய்வாளர் அனுஜ் சவுத்ரி என்பவர், "அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு கணிசமான அளவில் வெளியேறி வருவது, சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தின்போது 90.30-க்கும் கீழ் சரிந்தது”என்று கூடுதலாக இரண்டு காரணத்தைச் சொல்லி இருக்கிறார்.

"ரூபாயின் பலவீனம் சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை குறைந்து வருவதைக் காட்டுகிறது”என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கும் அருண் குமார் சொன்ன- தாக பி.பி.சி. செய்தி நிறுவனம் சொல்கிறது.

"ரூபாயின் வீழ்ச்சி இந்தியாவின் சர்வதேச நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நிலைமையின் ஓர் அறிகுறி. இது ஏற்றுமதி- இறக்குமதி, மூலதன வரவு மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறது. டிரம்பின் அதிக பட்ச வரிகள் நமது ஏற்றுமதியைப் பாதித்துள்ளன. இதனால் நடப்புக் கணக்கு மோசமடைந்து, அந்நிய நேரடி முதலீடு வெளியேறுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து ரூபாயை பலவீனமடையச் செய்கின்றன. இது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் ரூபாய் வீழ்ச்சியடைந்தால் நமது ஏற்றுமதி அதிகரிக்கும், ஆனால் இறக்குமதி விலை உயரும், இதனால் பணவீக்கம் உயரலாம்”என்று பேராசிரியர் அருண் குமார் சொல்லி இருக்கிறார்.

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் அறிக்கை பிரதமர் மோடி அரசாங்கத்தின் ஊதிப் பெருக்கப்பட்ட பொருளாதாரப் பிம்பத்தைக் கிழிப்பதாக அமைந்துள்ளது.

“இந்திய ரூபாய் மதிப்பு ஏற்கனவே ரூ.99-ஐ தாண்டிவிட்டது. அரசாங்கம் எவ்வளவுதான் முரசு கொட்டினாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பதை காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் சரியாக இருந்திருந்தால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாது. 2014-க்கு முன்பு ‘இந்தியாவின் ரூபாய் அதன் மதிப்பை இழக்க காரணம் என்ன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். நாடு உங்களிடம் இருந்து பதிலைக் கோருகிறது' என்று மோடி கேட்டார். இன்று நாங்கள் மோடியிடம் அதே கேள்வியை கேட்கிறோம். அவர் பதிலளிக்க வேண்டும்”என்று கார்கே கேட்கிறார். ஆனால் பிரதமர் மோடி பதில் சொல்ல மாட்டார். பொறுப்பான பதில் எதையும் அவர் இதுவரை சொன்னதும் இல்லை.

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து விட்டது, 250 ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்களை நான் முந்தி இருக்கிறோம், நான் பிரதமராக வந்தபோது 11 ஆவது இடத்தில் இருந்தோம், இப்போது நான்காவது இடத்துக்கு உயர்ந்து விட்டோம், மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவதுதான் எனது இலக்கு - என்று பொத்தாம் பொதுவாகப் பேசுவாரே தவிர, குறிப்பிட்ட பிரச்சினைக்கு பிரதமர் பதில் சொல்வது இல்லை.

ஒன்றிய புள்ளியியல் அமைச்சகம் கடந்த வாரம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரத்தை வெளியிட்டது. ஆனால் இதனை நம்ப முடியாது என்று சர்வ தேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) குற்றம் சாட்டி இருக்கிறது. இந்தியாவின் பள்ளி விபரங்களுக்கு முதல் தரம் தர முடியாது, மூன்றாவது தரம் தான் தர முடியும் என்று சொல்லி இருக்கிறது. "மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அறிவிக்கும் போது தகவல் பற்றாக்குறை உள்ளது”என்று குற்றம் சாட்டி இருக்கிறது ஐ.எம்.எப்.

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.47 ஆக சரிந்துள்ளது. இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம், தனிநபர் வருமானம், கிடைத்துள்ள வாய்ப்புகள் ஆகியவற்றை வைத்து ஐ.நா. சபை வெளியிட்ட குறியீட்டு வரிசையில் 193 நாடுகளில் 130 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. தனிநபர் வருமானத்தில் 196 நாடுகளில் 144 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

பா.ஜ.க. ஆண்டுதோறும் பெறும் நன்கொடைகள் அதிகமாகி வருகிறதே தவிர, மற்றபடி இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கண்ணுக்குத் தெரிவதைப் போல வளர்க்கவில்லை பா.ஜ.க. அரசு.

banner

Related Stories

Related Stories