முரசொலி தலையங்கம்

”கழக அரசால் போற்றப்படும் வேலுநாச்சியார்” : முரசொலி புகழாரம்!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் அடையாளங்களில் ஒருவர் வேலுநாச்சியார்.

”கழக அரசால் போற்றப்படும் வேலுநாச்சியார்” : முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (22-09-2025)

வேலுநாச்சியாருக்குச் சிறப்பு!

வீரமங்கை வேலுநாச்சியார் சிலையைத் தலைநகர் சென்னையில் அமைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வேலூரில் இருக்கும் காவலர் பயிற்சி மையத்துக்கு வேலுநாச்சியார் பெயரைச் சூட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் அடையாளங்களில் ஒருவர் வேலுநாச்சியார். ஆண்கள் கோலோச்சிய போர்க்களத்தில் தனித்துத் தெரியும் தனிப்பெரும் பெண் ஆளுமை அவர்.இந்திய விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் அரசி இவரே.

முத்து வடுகநாதரின் நினைவிடத்தில் தனது தாலியைக் காணிக்கையாக்கி களத்தில் குதித்தார் அவரது மனைவி வீரமங்கை வேலுநாச்சியார். தனது கணவரைக் கொலை செய்தவர்களைத் தோற்கடித்தார்.

வேலுநாச்சியாருக்குப் பின் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் ஆட்சி செலுத்தி மக்களைக் காத்தார். இப்படிக் குடும்பம் குடும்பமாக மண்ணைக் காத்தது சிவகங்கை மண்!

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கும், சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியாருக்கும் 1730-ஆம் ஆண்டு வேலுநாச்சியார் பிறந்தார். போர்க்களம் சென்று வாளெடுத்து போர்புரியும் பயிற்சியை இளமையிலேயே பெற்றார். சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் ஆகிய திறமைகளை இளமையிலேயே பெற்றார். பல்வேறு மொழிகளில் புலமை பெற்றார். ஆறு மொழிகள் தெரியும். ஆங்கிலேயரிடம் ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் பேசினார்.

சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் (1750-1772) முத்துவடுகநாத தேவருக்கும் வேலுநாச்சியாருக்கும் 1746–ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவரது பட்டத்து ராணியானார்.

முத்துவடுகநாதர், ஆற்காடு நவாப் முகமது அலிக்குக் கப்பம் கட்ட மறுத்தார். அதன் காரணமாகக் கம்பெனிப் படையும், ஆற்காடு நவாபின் படையும் இணைந்து காளையார் கோவிலில் தங்கியிருந்த முத்துவடுகநாதர் மேல் போர் தொடுத்தன. இதில் வீர மரணம் அடைந்தார் முத்துவடுகநாதர்.

கணவர் இறந்துவிட்டார் என்று அழுது புலம்பாமல், வீட்டுக்குள் முடங்காமல் படை திரட்டினார் வேலுநாச்சியார். விருப்பாட்சி சென்றார். விருப்பாட்சி மன்னர் கோபால் அவருக்கு உதவிகள் செய்தார். வேலுநாச்சியாரைக் கொல்ல கொலையாளிகளை அனுப்பினார்கள். ஒற்றவர்கள் வந்தார்கள். அத்தனை சதிகளையும் முறியடித்தார் வேலுநாச்சியார். அங்கிருந்தபடியே மைசூர் மன்னர் ஹைதர் அலியின் நட்பை பெற்றார். ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும் ஹைதர்அலியிடம் கேட்டார் வேலுநாச்சியார். அவரும் வழங்கினார்.

”கழக அரசால் போற்றப்படும் வேலுநாச்சியார்” : முரசொலி புகழாரம்!

வேலுநாச்சியார் தலைமையில், மருது சகோதரர்கள் வழிகாட்டுதலில், இந்தப் படைகள் சிவகங்கை நோக்கிச் சென்றன. மதுரை கோச்சடையில் இரண்டு தரப்புக்கும் நடந்த சண்டையில் வேலுநாச்சியார் வெற்றி பெற்றார். நவாப் படைகளையும், கம்பெனி படைகளையும் விரட்டினார் வேலுநாச்சியார். எட்டு ஆண்டுகள் போராடினார். இறுதியில் வென்றார்.

சிவகங்கை கோட்டையை 1780–ஆம் ஆண்டு கைப்பற்றினார் வேலுநாச்சியார். பெரியமருதுவைப் படைத்தளபதியாகவும், சின்ன மருதுவைப் பிரதானியாகவும் (முதலமைச்சர்) நியமனம் செய்து ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சியில் வேளாண்மை செழித்தது. ஆறுகளை அகலப்படுத்தினார். ராணி வேலு நாச்சியாரின் 10 ஆண்டு ஆட்சி, 1789 டிசம்பரில் முடிவுற்றது. அவர், தமது அறுபத்தாறாம் வயதில் 25.12.1796 -இல் சிவகங்கையில் காலமானார்.

பெண்ணாய் இருந்து படை நடத்தி, தனது படையில் பெண்களையும் அதிகம் சேர்த்து, வெற்றியும் பெற்று, ஆட்சியும் நடத்தி பெரும் பேர் பெற்றவர் வேலுநாச்சியார். கணவரை இழந்தும், நாடு பறிக்கப்பட்டும் துன்ப துயரங்களை அனுபவித்த போது சோர்வடையாமல், போராட முன் வந்தவர் வேலுநாச்சியார். பல்லாண்டு காலம் ஊருக்கு வெளியே இருந்து படை கட்டி, படை நடத்தி வென்று காட்டியதன் மூலமாக வீரமங்கை எனப் போற்றப்படுகிறார் வேலுநாச்சியார். அவருக்கு இன்று சிலை அமைத்துள்ளார் முதலமைச்சர்.

விடுதலைப் போராட்டத் தியாகிகளை எந்நாளும் போற்றும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்துள்ளது. சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவை வெகுசிறப்பாகக் கொண்டாடினார் முதலமைச்சர் அவர்கள்.செக்கிழுத்த செம்மல்- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டார். வ.உ.சி. மறைந்த நவம்பர் 18 தியாகத் திருவுருவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் அரசு சார்பில் 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலையும், மருது சகோதரர்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் அஞ்சலை அம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அருங்காட்சியகம் வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் தான் வீரமங்கை வேலுநாச்சியாரும் கழக அரசால் போற்றப்படுகிறார். கொண்டாடப்படுகிறார். வாழ்க வீரமங்கை வேலுநாச்சியாரின் புகழ்!

banner

Related Stories

Related Stories