முரசொலி தலையங்கம்

”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!

ரொட்டிக்கும் அரிசிக்கும் வேறுபாடு பார்ப்பதுதான் பா.ஜ.க.வின் அதிகார அளவுகோல்?

”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (09/09/2025)

மாற்றம் அல்ல, ஏமாற்றம்!

ஜி.எஸ்.டி.யில் மாற்றம் செய்துவிட்டு, தினந்தோறும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுக்கும் பில்டப்புகளைப் பார்த்து சகிக்க முடியவில்லை.

‘ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்துவிட்டோம்’ என்றால், அதை அதிகப்படுத்தியது யார்? இப்போது குறைத்த மோடி தான், அப்போது அதிகப்படுத்தினார்? அப்போது செய்தது தவறு என்றால், பரிகாரம் என்ன? பொதுமக்கள் பில் கொண்டு வந்து கொடுத்தால், பழைய பாக்கியை செட்டில் பண்ணத் தயாராக இருக்கிறார்களா?

வரி மாற்றத்தை ‘தீபாவளி பரிசு’ என்கிறார் பிரதமர் மோடி. ஜி.எஸ்.டி. வரி மாற்றம் தீபாவளி பரிசாக இருந்தால், எட்டாண்டு காலமாக மக்களை ஏன் வதைத்துக் கொண்டு இருந்தார்கள்?

“ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்” என்று சொல்லி பீற்றிக் கொண்டு பேட்டி அளித்து வருகிறார் நிர்மலா சீதாராமன். ஒவ்வொரு குடும்பத்தையும் எட்டாண்டுகளாக சிறுகச் சிறுகச் சிதைத்தது யார்? சித்திரவதை செய்தது யார்? அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வாரா நிர்மலா சீதாராமன்?

“நடுத்தரக் குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று பிரதமர் விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சொல்லி இருக்கிறார். அப்படியானால் எட்டு ஆண்டுகளாக நடுத்தரக் குடும்பங்களுக்கு பெரும் பாரமாக ஜி.எஸ்.டி. வரி விகிதம் இருந்தது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்றே பொருள்.

இந்த வரி மாற்றத்தை, ‘மக்களின் சீர்திருத்தம்’ என்கிறார் நிர்மலா. அப்படியானால் 2017 ஆம் ஆண்டு செய்ததை பா.ஜ.க.வின் அராஜகம் என்று சொல்லலாமா?

ஜி.எஸ்.டி.யை அதிகரிக்கும் போதும் பொருளாதாரம் பெருகும் என்றார்கள். இப்போது மாற்றம் செய்தால் போதும், பொருளாதாரம் பெருகும் என்கிறார்கள். இவர்களது பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது.

“ஜி.எஸ்.டி. வரி அமல் செய்யப்பட்டது இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கியமான சீர்திருத்தம் ஆகும். தற்போது ஜி.எஸ்.டி. 2.0 வரி விகிதம் நவராத்திரியின் முதல் நாளில் அமல் செய்யப்பட உள்ளது. இதன்படி இனிமேல் 5 சதவீதம், 18 சதவீதம் என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். புதிய வரி விகிதத்தால் சாமானிய மக்களின் வீட்டுச் செலவு குறையும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அதேநேரம் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். இந்த சொற்களைப் பாருங்கள். ஜி.எஸ்.டி. வரியை நான்கு விதமாக நிர்ணயித்த போதும் இதையேதான் பிரதமர் அவர்கள் சொன்னார்கள்.

ஜி.எஸ்.டி.யை உயர்த்தும் போதும், ‘நாட்டின் வளர்ச்சிக்கு இது தேவை’ என்றார் பிரதமர். இப்போது மாற்றம் செய்தால் போதும், “நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும்” என்கிறார் பிரதமர். என்ன கொடுமை சார் இது?

”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!

இதைவிட இன்னொரு கொடுமையான கருத்தையும் பிரதமர் சொல்லி இருக்கிறார். “மக்கள் அதிக அதிகாரம் உள்ளவர்களாக மாறுவார்களாம்”. ஜி.எஸ்.டி.யில் மாற்றம் செய்வதற்கும் மக்கள் அதிக அதிகாரம் உள்ளவர்களாக மாறுவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

பதப்படுத்தப்பட்ட பால், பன்னீர், சப்பாத்தி, ரொட்டி, பராத்தா போன்ற அனைத்து ரொட்டி வகைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி நீக்கப்பட்டிருப்பது, இதைச் சாப்பிடுகிறவர்கள் அனைவரையும் அதிக அதிகாரம் உள்ளவர்களாக மாற்றிவிடுமா?

ரொட்டி வகைகளுக்கான வரியைக் குறைத்துவிட்டு, அரிசிக்கான 5 விழுக்காடு வரியை நீக்காமல் இருப்பது அதிகாரத்தின் அராஜகம் அல்லவா? ரொட்டிக்கும் அரிசிக்கும் வேறுபாடு பார்ப்பதுதான் பா.ஜ.க.வின் அதிகார அளவுகோல்?

மக்களுக்காக இவ்வளவு இறக்கப்படும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரத் தயாரா? ‘ஒரே தேசம் – ஒரே வரி’ என்பது உண்மையானால் இதற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? இதற்கு மட்டும் நகரங்களுக்கு நகரங்களின் விலையில் வேறுபாடு?இதைச் செய்யக் கூடாது என்பது ‘தடுக்கும் சக்தி’ எது? அல்லது யார்?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுள்ள கேள்விகளுக்கு நேரடியாக அவர்களால் பதில் சொல்ல முடியுமா?“கடந்த எட்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் வேண்டுகோள்கள் உங்கள் காதுகளுக்கு கேட்கவே இல்லை. இப்போது ஜி.எஸ்.டி. வரியில் மாற்றத்தை கொண்டு வர ஒன்றிய அரசை தூண்டியது எது? மந்தமான பொருளாதார வளர்ச்சியா? வீட்டுக் கடன் அதிகரிப்பா? வீட்டு சேமிப்பு குறைவதா? பீகாரின் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா?”என்று கேட்டுள்ளார் ப.சி.

பா.ஜ.க.வின் ஆட்சி முறை சரிவை சந்தித்து வருகிறது. பிரதமர் மோடியின் பிம்பம் நொறுங்கி வருகிறது. அதை, இதை வைத்து சரி செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். விழ்ந்துவிட்ட தங்களது செல்வாக்கை சரி செய்து இதனைப் பயன்படுத்துகிறார்கள். அதுதான் உண்மை.

‘மாநிலங்களின் நிதி உரிமை, வளம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குரல் கொடுத்தார். அதற்கு உரிய பதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தரப்படவில்லை. கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், “புதியஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் கேரளாவுக்கு 8 ஆயிரம் கோடி முதல் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு இருக்கலாம். மாநிலங்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பு குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தெரிவித்தபோது அந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை” என்று சொல்லி இருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

மாநிலங்களுக்கு அவர்களே கொடுத்தார்கள். பின்னர், அவர்களே பறித்தார்கள். இப்போது மக்கள் தலையில் பாரத்தை அவர்களே வைத்தார்கள். அவர்களே எடுத்து விட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.எஸ்.டி. தவறை சரி செய்ததைப் போல, ‘நீட்’ தேர்வையும் ரத்து செய்யுங்கள். செய்வீர்களா?

banner

Related Stories

Related Stories