முரசொலி தலையங்கம் (08-09-2025)
நிராகரிக்கப்பட்ட பழனிசாமி
“நந்தவனத்தில் ஓர் ஆண்ட்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” - என்பது கடுவெளிச்சித்தர் பாடல். இந்தப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தன்னிடம் முதலமைச்சர் என்ற அதிகாரம் கிடைத்த போது தமிழ்நாட்டையே நாசப்படுத்தியவர்தான் இந்த பழனிசாமி. இப்போது தனது கட்சியை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்.
தகுதியில்லாத ஒருவருக்கு அந்த நாற்காலி தரப்பட்டால், அந்த நாற்காலி நாசமாகும் என்பதற்கு அடையாளம்தான் பழனிசாமியால் நாடு பார்க்கும் பலன் ஆகும்.
ஜெயலலிதா, இறந்து போனார். சசிகலா, சிறைக்குப் போனார். இந்த நிலையில் கடந்த காலத்தில் ஒழுங்காக கப்பம் கட்டியவர் சசிகலா குடும்பத்தினரால், நாற்காலியில் தற்காலிகமாக உட்கார வைக்க டம்மியாகக் கொண்டார். வரப்பட்டவர்தான் பழனிசாமி. தனது பெயர் அறிவிக்கப்பட்டது, சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து சென்று வணங்கினார் பழனிசாமி. ‘உங்களது கால் தூசுக்கு சமம்’ என்பது போல நடித்தார் பழனிசாமி. ‘சரியான கொத்தடிமைதான்’ என்பதை அங்கீகரிக்கும் வகையில் தோள் தட்டி ஆசீர்வதித்தார் சசிகலா. அவர் தட்டிக் கொடுக்கும் போது கண்மூடி, கைகூப்பி நின்றார் பழனிசாமி. இதனை அ.தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஊர் பார்த்தது. உலகம் பார்த்தது. சமூக வலைத்தளங்களில் இன்று சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கும் காட்சிதான் இவை.
சசிகலா சிறைக்குள் போனதும், நாற்காலியை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டார் பழனிசாமி. ‘டம்மி அல்ல நான், நானே மம்மி’ என்று காட்டிக் கொண்டார். தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டார். கூட்டி வந்த கூட்டத்தில் கையாட்டும் போது, தன்னை எம்.ஜி.ஆர்.ஆகக் கூட நினைத்துக் கொண்டார். தனது பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. தலைமையின் அனைத்துக் கட்டளைக்கும் தலையாட்டினார். தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க. தலைமையிடம் அடகு வைத்து கையது கொண்டு மெய்யது பொத்தி நான்காண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் நாசப்படுத்தினார்.
‘நீ யார்? எனக்கு பதவி வாங்கிக் கொடுத்தாயா? நீ ஏன் சொந்தம் கொண்டாடுகிறாய்?’ என்று சசிகலாவைப் பார்த்து ஒருமையில் கேட்டதுதான் பழனிசாமியின் ‘ஒரிஜினல்’ கேரக்டர். ‘தான்’ என்ற ஆணவத்தின் வடிவம் அவர். ஆம்புலன்ஸ் டிரைவரையே மிரட்டியது அவரது அராஜகக் குணத்தின் வெளிப்பாடு ஆகும். ‘அந்த ஆம்புலன்ஸிலேயே உன்னை அனுப்பி விடுவோம்’ என்பது எல்லாம் கட்டப்பஞ்சாயத்து பேச்சு ஆகும். பழனிசாமிக்குள் என்ன இருக்கிறது என்பதை அடையாளம் காட்டும் காட்சிகள் இவை. மாண்புமிகு முதலமைச்சரையே ‘ஒருமை’யில் பேசி வருகிறார். அதனை உணர்த்திய பிறகும் அப்படித்தான் பேசுகிறார். செல்லூர்ராஜூவை அவமானப்படுத்தியதும், தம்பிதுரையை அவமானப்படுத்தியதையும் ஊடகங்கள் முன்னால் நடந்த காட்சிகள் ஆகும்.
பச்சோந்தித் தனமான, தற்குறித் தலைமைதான் பழனிசாமி என்பது முதலிலேயே உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அவர் அ.தி.மு.க.வுக்குப் பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தேர்தலிலும் தோல்வியை மட்டும் பரிசாகத் தந்து வருகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
2019 - நாடாளுமன்றத் தேர்தல், 2019 - சட்டமன்ற இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்,2021 - ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 - ஈரோடு இடைத்தேர்தல், 2024 - நாடாளுமன்றத் தேர்தல், 2024 - விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் இடைத் தேர்தல் - ஆகிய அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர்தான் பழனிசாமி. இவரை மிகச் சரியாக முதலில் அடையாளம் கண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தான்.
அடுத்து சொந்தக் கட்சி முன்னணியினரால் நிராகரிக்கப்பட்டார் பழனிசாமி. சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பழனிசாமியின் தலைமையை நிராகரித்து விட்டனர். இவர்களை உள்ளே விட்டால், மீண்டும் தான் தரையில்தான் உருள வேண்டி இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பழனிசாமி, இவர்களை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும் விட்டார்.
இவர்களைத் தடுத்தது மட்டுமல்ல, உள்ளே இருக்கும் அனைவரையும் மதிக்கவில்லை என்பதைத்தான் செங்கோட்டையனின் பேட்டி எடுத்துக் காட்டுகிறது. ‘நாங்கள் ஆறுபேர் சென்று கோரிக்கை வைத்தோம். அதைக் கேட்கும் மனநிலையில் பழனிசாமி இல்லை’ என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார்.‘நான் வைத்தது தான் சட்டம், இருப்பவர்கள் இருங்கள்’ என்ற தன்மையோடு பழனிசாமி நடந்து கொள்கிறார். பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையன், ‘எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்கிறார். ‘எங்களையும் நீக்குங்கள்’ என்று சொந்தக் கட்சிக்காரர்களே சொல்வது, பழனிசாமி முகத்தில் விழுந்த அடியே ஆகும்.
பழனிசாமியின் தமிழ்நாடு பயணமும் தோல்வியாகத் தான் முடிந்தது. கூட்டி வந்த கூட்டம், அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அவர் பேசத் தொடங்கியது கலைகிறது கூட்டம். நிற்பவர்கள் மத்தியிலும், அவரது உரைக்கு வரவேற்பு இல்லை. மக்கள் நிற்க வைக்க இடம் தவிர, மற்ற இடத்தில் அவருக்கு எந்த வரவேற்பும் இல்லை. பல ஊர்களில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினார்கள். பொதுமக்களும் கருப்புக் கொடி காட்டினார்கள். அ.தி.மு.க. வினரும் கருப்புக் கொடி காட்டி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள், அ.தி.மு.க. முன்னணியினரால், அ.தி.மு.க. தொண்டர்களால்.. இப்படி ஒட்டுமொத்தமாக அனைவராலும் நிராகரிக்கப்பட்டவர்தான் பழனிசாமி. அவரது ஆணவம் அனைவராலும் நொறுக்கப்பட்டு வருவதைத்தான் இப்போது பார்க்கிறோம்.