முரசொலி தலையங்கம்

“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!

ஆதிக்கவாதிகளால் பழிக்கப்படுவர், அறிவுவாதிகளால் போற்றப்படுவார் என்பதன் அடையாளம் தான் பெரியார் உலகமயமாகி வருவது ஆகும். - முரசொலி தலையங்கம்!

“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

06.09.2025

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் – என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் படம் பிடித்துக் காட்டினார் பாவேந்தர் பாரதிதாசன். மண்டைச் சுரப்பை உலகு தொழும் காட்சியைத் தான் இலண்டன் ஆக்ஸ்போர்டு காட்சிகள் நமக்குக் காட்டுகின்றன.

பகுத்தறிவுப் பகலவன் – சுயமரியாதைச் சுடரொளி – தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர் – தந்தை பெரியார் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்துள்ளார் திராவிட நாயகன் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் – தமிழ்நாட்டின் முதலமைச்சர் – திராவிட மாடல் ஆட்சி மூலமாக வென்று காட்டி வரும் வெற்றியாளர் – மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நூற்றாண்டு கண்ட இயக்கம், நூறு ஆண்டுகளாக காணாத காட்சி இது. உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், நம் பகுத்தறிவுப் பகலவனை அங்கீகரித்து அரவணைத்துக் கொள்ளும் காட்சி திராவிட இயக்க வரலாற்றில் முக்கியமான காட்சியாகும். செப்டம்பர் – 4 திராவிட இயக்க வரலாற்றில் கவனிக்கத் தக்க முக்கிய நாளாக மாறிவிட்டது. பொதுவாக, ‘செப்டம்பர் மாதம் – திராவிட மாதம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்திறப்பானது உலகக் கொண்டாட்டமாக ஆக்கிவிட்டது. திரைக்கலைஞர் தோட்டாதரணி வரைந்த ஓவியம் இது.

‘பெரியார் உலகமயம் – உலகம் பெரியார்மயம்’ என்பதை இலக்கு முழக்கமாக வைத்து முழங்கி வருகிறார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அந்த இலக்குக்கு மகுடம் கிடைத்திருக்கிறது இலண்டனில்.

“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!

பெரியாரின் பேரன், கொள்கை வாரிசு ஆகிய தகுதியோடு நிற்பதாகக் கம்பீரமாகச் சொன்னார் முதலமைச்சர்.

இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் சுயமரியாதை இயக்கம் தொடர்பான இரண்டு நாள் மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்து பங்கேற்று உரையாற்றி இருக்கிறார்கள். பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வெங்கடா சலபதியும், பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகரனும் இணைந்து உருவாக்கியுள்ள ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூலை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த சிறப்பான நூலை Cambridge University Press வெளியிட்டுள்ளது. அதேபோல், ‘’ The Dravidian Pathway’ என்ற நூலையும் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

பெரியாரியம் என்பது உலகளாவிய வரையறைகளைக் கொண்டது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவாக விளக்கி இருக்கிறார்கள். சுயமரியாதை (self–respect), பகுத்தறிவு (rationality), சமதர்மம் (socialism), சமத்துவம் (equality), மானுடப்பற்று (Humanism), ரத்த பேதமில்லை (Non–discrimination based on blood), பால் பேதமில்லை (Non–discrimination based on Gender), சுய முன்னேற்றம் (self development), பெண்கள் முன்னேற்றம் (women empowerment), சமூக நீதி (social justice), மதச்சார்பற்ற அரசியல் (secular politics), அறிவியல் மனப்பான்மை (scientific temper) ஆகிவற்றை உள்ளடக்கியது தான் பெரியாரியம். எனவே தான் உலகத் தத்துவ ஞானிகள் வரிசையில் போற்றத்தக்கவராக பெரியார் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

‘எனக்கு எந்தப் பற்றும் இல்லை. அறிவுப்பற்று, மானுடப் பற்று மட்டுமே உண்டு’ என்று சொன்ன உலகத் தலைவர் தந்தை பெரியார்.

கன்பூசியஸ், சாக்ரடீஸ், வால்டேர், ரூசோ, அரிஸ்டாட்டில், இங்கர்சால், பிளேட்டோ, பினோசா, கமால்பாட்சா, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ வரிசையில் வைக்கத்தக்க அறிவாசானாக பெரியார் இருக்கிறார். வள்ளுவரின், புத்தரின் தொடர்ச்சியாக இருக்கிறார். இவர்களை எல்லாம் தனது வாழ்நாளில் போற்றியவராகவும் பெரியார் இருந்தார்.

“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!

உலகம் முழுக்க பயணித்தார். உலகத் தத்துவங்களை இங்கு வந்து பரப்பினார். இங்கர்சால் எழுத்துகளை புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டார். மார்க்சும் எங்கெல்சும் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை’ ரஷ்யா செல்வதற்கு முன்பே தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். ‘மதம்’ குறித்த லெனின் நூலை வெளியிட்டார். பெர்னாட்ஷாவின் எழுத்துகளை வெளியிட்டார். கமால்பாட்சா மறைந்த போது இரங்கல் அறிக்கை வெளியிட்டார். ‘கமால்பாட்சா நாள்’ கொண்டாடினார். பெண் விடுதலையின் வேதநூலாகப் போற்றப்படும் ‘செகண்ட் செக்ஸ்’ நூல் வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வெளியாகி விட்டது.

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட் டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 1940 ஆம் ஆண்டே பேசிய தொலை நோக்குச் சிந்தனையாளர் பெரியார்.

யாரும் பேசத் தயங்கிய கருத்துகளைப் பேசினார். காப்பி அடிக்க முடியாத போராட்டங்களை நடத்தினார். சட்டப் புத்தகத்தில் இல்லாத போராட்டங்களை நடத்தினார்.

‘மனித மனத்தை பழுதுபார்க்க வேண்டும்’ என்றார் சாக்ரடீஸ். அதைச் செய்தவர் தந்தை பெரியார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் பேசும் போது அவர்களை தலைநிமிர வைக்கப் பேசினார். ஒடுக்குவோர் மத்தியில் உரையாற்றும் போது அவர்களை தலைகுனிய வைக்கும் வகையில் பேசும் துணிச்சல் அவருக்கே இருந்தது.

‘நோயை’ அல்ல, ‘நோய்க்கான காரணங்களை’ ஒழிக்க நினைத்தவர் பெரியார் மட்டும் தான். தீண்டாமையைக் கண்டித்தவர்கள் கூட அதன் மூலத்தைக் கைவைக்க நினைக்கவில்லை. அதற்கான துணிச்சல் இல்லை. சனாதனிகள் கூட ‘தீண்டாமையை’ கண்டித்து பேசி வருகிறார்கள். ‘ஒற்றுமை தான் சனாதனம்’ என்று உளறிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் தீண்டாமைக்கான காரணங்களை, அடிப்படையைக் கேள்வி கேட்டவர் அவர் மட்டும் தான். சட்டத்தில், ‘தீண்டாமை ஒழிப்பு’ இருக்கிறது. அதனை ‘ஜாதி ஒழிப்பாக’ மாற்றச் சொன்னவர் அவர்.

அதனால் தான் இன்று ஆதிக்கவாதிகளால் பழிக்கப்படுகிறார். ஆதிக்கவாதிகளால் பழிக்கப்படுவர், அறிவுவாதிகளால் போற்றப்படுவார் என்பதன் அடையாளம் தான் பெரியார் உலகமயமாகி வருவது ஆகும்.

சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!

banner

Related Stories

Related Stories