முரசொலி தலையங்கம்

“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!

பெரு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரிச் சலுகைத் தள்ளுபடிகளை அறிவிக்கும் பாஜக அரசு, GST வரி வசூலில் விழுக்காடுகளைக் குறைப்பதில் என்ன பெருமை இருக்க முடியும்? - முரசொலி தலையங்கம்

“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

05.09.2025

மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும்!

நாட்டில் உள்ள வரிகளை ஒருங்கிணைக்கப் போகிறோம் என்று சொல்லி ஒன்றிய அரசு, மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்தது.

2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று புதிய ஜி.எஸ்.டி. வரியை அறிமுகம் செய்தார்கள். 5 விழுக்காடு, 12 விழுக்காடு, 18 விழுக்காடு, 28 விழுக்காடு என்று நான்கு பிரிவுகளாக வரிகளைப் போட்டார்கள். 'கம்ப்யூட்டர் மெஷின் கன்பிபூஃஸ் ஆகியிடுது' என்று இதனைத்தான் கோவைத் தொழில் அதிபர் ஒருவர் நிர்மலா சீதாராமனிடம் சொன்னார். இதற்காகவே அவர் தனியறையில் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார்.

சரக்கு மற்றும் சேவை வரியால் அதிகம் பாதிக்கப்பட்டது மக்கள்தான். அடுத்ததாக பாதிக்கப்பட்டது மாநில அரசுகள். அதன் நிதி உரிமை பறிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வோம் என்று சொன்னார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு தந்தார்கள். அதையும் நிறுத்தி விட்டார்கள். இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றன.

இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை இரண்டு பிரிவுகளாக ஆக்கிவிட்டது ஒன்றிய அரசு. இனிமேல் 5 விழுக்காடு, 18 விழுக்காடு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தான் வரிகள் விதிக்கப்படும். 12 விழுக்காடு, 28 விழுக்காடு என்று இருந்த இரண்டு பிரிவை நீக்கிவிட்டார்கள்.

சரக்கு மற்றும் சேவை வரியை எளிமைப்படுத்தப் போகிறோம் என்றும், பிரதமரின் தீபாவளிப் பரிசு என்றும் இதற்கு விளக்கம் சொல்கிறது பா.ஜ.க. அந்தப் பொருள் விலை குறையும், இந்தப் பொருள் விலை குறையும் என்று ஊடகங்களுக்கு செய்தி கொடுத்து வருகிறார்கள். ஆனால் மாநில அரசுகள் இதனால் சந்திக்கும் நெருக்கடி குறித்து ஒன்றிய அரசு கவலைப்படவில்லை.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநிலங்கள், யூனியன் பகுதிகளின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை அழுத்தமாக வைத்துள்ளார்.

அதற்கு முன்னதாக 8 மாநில நிதி அமைச்சர்கள் தனியாக கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகம், பஞ்சாப், மேற்கு வங்காளம், இமாசலப் பிரதேசம், அரியானா ஆகிய மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றார்கள். ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்ய வேண்டும் என்று இம்மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மக்களுக்கு அநியாய வரி போடுவதையும், அந்த வரியை மக்கள் ஒழுங்காகச் செலுத்துகிறார்கள் என்பதையும் பெரிய சாதனையாகச் சொல்வது பா.ஜ.க. அரசாகத்தான் இருக்க முடியும். இதில் என்ன பெருமை இருக்கிறது? வரியைக் குறைத்து விட்டதாகச் சொல்லும் பா.ஜ.க. அரசுதான், சில மாதங்கள் கழித்து, ‘பார்த்தீர்களா? ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகம் ஆகிவிட்டது' என்பதையும் பெருமையாகச் சொல்லும். விலை குறையப் போகிறது என்று இன்று சொல்பவர்கள், அதிகவரியை வசூலித்ததையும் சாதனையாகச் சொல்லத்தான் போகிறார்கள்.

“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!

பெரு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிச் சலுகைத் தள்ளுபடிகளை அறிவிக்கும் பா.ஜ.க. அரசு, ஜி.எஸ்.டி. வரி வசூலில் விழுக்காடுகளைக் குறைப்பதில் என்ன பெருமை இருக்க முடியும்? மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்ய வேண்டிய கடமை மாநிலங்களுக்குத்தான் இருக்கிறது. மாநில அரசுகளிடம்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியால் பயனுண்டா? ஜி.எஸ்.டி. வரிப்பணம், மாநிலங்களுக்கு உரிய அளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறதா? ஜி.எஸ்.டி.தரும் அளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்த அளவிலாவது தரப்படுகிறதா? ஏதுமில்லை.

ஜி.எஸ்.டி. - வரி விதிப்பு என்பதே மாநில அரசின் நிதி மூச்சுக்காற்றை நிறுத்தும் செயல்தான். இதனையும் தாக்குப் பிடித்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்த நிதியையும் முறையாக, முழுமையாக வழங்குவது இல்லை. மாநிலங்களின் நிதி உரிமையையும், நிதி பலத்தையும் சுரண்டியதுதான் ஜி.எஸ்.டி. ஆகும். மாநிலங்களை பங்காளிகளாக அல்ல, பகையாளிகளாக நடத்தி வருவதுதான் ஜி.எஸ்.டி. ஆகும். மாநில அரசுகளின் வருவாயைச் சிதைப்பதுதான் இதன் முக்கியமான நோக்கம் ஆகும்.

ஜி.எஸ்.டி.யால் என்னென்ன பொருள்கள் எவ்வளவு விலை உயர்கிறது என்று தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னபோது, 'இறுதிச் சடங்கு நடத்துவதற்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு' என்று 2022 ஆம் ஆண்டு பதில் அளித்தவர்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை. இதைப் பற்றிக் கேட்டபோது, “மாநிலங்களுக்கு 1.50 லட்சம் கோடியை வட்டியில்லாத கடனாகத் தந்திருக்கிறோமே, இது போதாதா?” என்று கேட்டவர்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இப்படிப்பட்டவர்கள் கையில் நிதி மூலதனம் சிக்கி சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. ஆந்திராவின் பெயர் ஐந்து இடத்தில் இருந்தது. பீகாரின் பெயர் ஐந்து இடத்தில் இருந்தது. மேற்கு வங்கம் ஒரு இடத்தில் வந்தது. நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இத்தகைய சூழலில்தான் மாநில அரசை நடத்தி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

இந்த நிலையில் வரிச் சீர்திருத்தம் செய்வதை விட முக்கியமான நிதிச் சீர்திருத்தம் தேவை. ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடங்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories