முரசொலி தலையங்கம்
01.09.2025
தன்னைப் போலவே நினைக்கும் பழனிசாமி!
தன்னைப் போலவே மற்றவர்களையும், 'அப்படித்தான் இருப்பார்கள்' என்று நினைக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஜெர்மன், இங்கிலாந்து பயணத்தை தாங்கிக் கொள்ள முடியாமலும், தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் முதலீடுகளைப் பார்த்து எரிச்சல் அடைந்தும் அறிக்கை விட்டுள்ளார் பழனிசாமி.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 இலட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த நான்காண்டு காலத்தில் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUse) கையெழுத்திடப்பட்டுள்ளது. இவை நேரடியாக 20 லட்சத்து 45 ஆயிரத்து 87 நபர்களுக்கும், மறைமுகமாக 12 லட்சத்து 39 ஆயிரத்து 945 நபர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதாவது மொத்தமாக 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி அளிக்கப் பட்டுள்ளன. ஒப்பந்தம் கையெழுத்தானதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
கையெழுத்தான 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 710திட்டங்கள் நிலம் பெற்றது உட்பட, வணிக உற்பத்தி, சோதனை உற்பத்தி, பகுதி உற்பத்தி, கட்டுமானம் தொடங்குதல் போன்ற பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. இது மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 விழுக்காடு ஆகும். முதலீட்டு மதிப்புகளில் 71 விழுக்காடு ஆகும்.
புதிதாக என்ன நிறுவனம் வந்துள்ளது என்று கேட்கிறார் பழனிசாமி. VinFast, Godrej Consumer Products, Rockwell Automation, Yield Engineering System (YES), Tata Powerஉள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள், ஏற்கனவே உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் புதிய நிறுவனங்கள்தான். இதனை அவரே போய் பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (GIM 2024), ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 181 கோடி உறுதியளிக்கப்பட்டது. மொத்தம் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.1,07,931 கோடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, 1,65,154 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 83 விழுக்காடு ஆகும். முதலீட்டு மதிப்புகளில் 74 விழுக்காடு ஆகும்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், ரூ.3,79,809 கோடி அளவிற்கான முதலீடுகள் உறுதியளிக்கப்பட்டது. 310 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 8,07,026 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி அளிக்கப்பட்டுள்ளன. இதுவரையில், ரூ.62,344 கோடி முதலீடு வந்துவிட்டது. 63,310 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 258 திட்டங்கள் நிலம் பெற்றது உட்பட பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ளன. இது மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 83 விழுக்காடு ஆகும். முதலீட்டு மதிப்பு களில் 76 விழுக்காடு ஆகும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஐந்து முறை வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டார்கள். இந்த பயணங்கள் மூலம் 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக ரூ.18 ஆயிரத்து 498 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கையெழுத்தான 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் நிலம் பெற்றது உட்பட, பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ளன. இது மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 64 விழுக்காடு ஆகும். முதலீட்டு மதிப்புகளில் 46 விழுக்காடு ஆகும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் தமிழ்நாடு பரவலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் 82 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மத்திய மண்டலத்தில் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேற்கு மண்டலத்தில் 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று 256 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில், ரூ.3,69,310 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 256 திட்டங்களில், 193 திட்டங்கள் நிலம் பெற்றது உட்பட, பல்வேறு செயலாக்க நிலைகளில் உள்ளன. இது மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 75 விழுக்காடு ஆகும். முதலீட்டு மதிப்பீடுகளில் 76 விழுக்காடு ஆகும். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பழனிசாமி ஆய்வு நடத்திக் கொள்ளலாம்.
இப்படி தனது ஆட்சி காலம் குறித்து பழனிசாமியால் சொல்ல முடியுமா? 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை பழனிசாமியும் நடத்தினார். 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகச் சொன்னார். ஆனால் 172 ஒப்பந்தங்கள்தான் நிறைவேற்றப்பட்டன. பாதிக்கு பாதி காலி ஆகிவிட்டது.
தனது அறிக்கையில் தவறான புள்ளிவிபரங்களை தருகிறார் பழனிசாமி. 41 ஒப்பந்தங்கள் போட்டதாகச் சொல்லிய பழனிசாமி, அதில் எத்தனை நடைமுறைக்கு வந்தது என்பதைச் சொல்லவில்லை.
2019 ஆம் ஆண்டு அமெரிக்கா போனார் பழனிசாமி. 27 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகச் சொன்னார். ஆனால் அதில் 12 திட்டங்கள்தான் செயல்பாட்டுக்கு வந்தது. அதாவது 44 விழுக்காடு தான் செயல்பாட்டுக்கு வந்தது. மேலும் மொத்த மதிப்பீட்டில் 20 விழுக்காடுதான் முதலீடாக வந்தது. ஐக்கிய அரபு அமீரகம் போனார் பழனிசாமி. 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகச் சொன்னார். ஆனால் இரண்டு திட்டங்கள்தான் உற்பத்தியைத் தொடங்கியது. இவர் கையெழுத்து போட்ட மொத்த மதிப்பீட்டில் 29 விழுக்காடுதான் முதலீடாக வந்தது.
இப்படித்தான் இப்போதும் நடக்கும் என்று நினைக்கிறார் பழனிசாமி. 'தான் திருடி பிறரை நம்பாள்' என்ற பழமொழிக்கு இலக்கணமாக இருக்கிறார் பழனிசாமி.