முரசொலி தலையங்கம் (02-08-2025)
கடம்பூர் ராஜூ கக்கிய உண்மை!
"1999 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்து பெரும் வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டோம்" - என்று ஜெயலலிதா எடுத்த அன்றைய நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசி இருக்கிறார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை', 'இந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று அவர் மழுப்பினாலும், அவருக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் 'சங்கி' முழித்துவிட்டது என்பதே உண்மையாகும். ஜெயலலிதாவையே விமர்சிக்கும் நிலைக்கு பா.ஜ.க. பாசம், பழனிசாமி கூட்டத்துக்கு அதிகமாகி வருகிறது.
திராவிடம், பேரறிஞர் அண்ணா ஆகிய பெயர்களுக்கு இழுக்கு வரும் போதெல்லாம் வாய்மூடிக் கிடந்தவர் பழனிசாமி. 'திராவிடம்' என்பதை விமர்சித்தார் ஆளுநர் ரவி. இது பற்றி நிருபர்கள் கேட்டபோது, 'எனக்குப் புராணம் எல்லாம் தெரியாதுங்க' என்று பதில் சிரிப்பு சிரித்தார் பழனிசாமி, பெரியாரையும் அண்ணாவையும் திராவிடத்தையும் கொச்சைப்படுத்தி மதுரையில் ஒரு மாநாட்டில் காட்சிப்படம் ஒளிபரப்பினார்கள். அந்த மாநாட்டுக்கு தனது அமைச்சரவையில் இருந்த கொத்தடிமைகள் நான்கு பேரை அனுப்பி வைத்தார் பழனிசாமி. இந்தித் திணிப்பை நியாயப்படுத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கருத்தைச் சொன்னார். 'அது அவரின் சொந்தக் கருத்து' என்று பதில் சொன்னார் பழனிசாமி. இப்படி மொத்தமாக திராவிட இயக்கக் கொள்கைகளைப் பலியிட்டு வந்தார் பழனிசாமி.
பழனிசாமியை விட தான் 'பெரிய சங்கி' என்பதை வேலுமணி மெய்ப்பித்து வருகிறார். அதற்கு தானும் சளைத்தவனல்ல என்று காட்டத் தொடங்கி இருக்கிறார் கடம்பூர் ராஜு. பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்து பெரும் பிழையைச் செய்தாராம் ஜெயலலிதா. 26 ஆண்டுகள் கழித்து கடம்பூர் ராஜூ இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.
1999 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்தார் ஜெயலலிதா. அது ஏதோ அவசரத்தில் அவர் எடுத்த முடிவல்ல என்பதை பின்னர் ஒரு கூட்டத்தில் பேசும் போது, அதனை உறுதி செய்து பேசினார் ஜெயலலிதா.
"முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். பி.ஜே.பி.யோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் தைரியம், துணிச்சல் எனக்கு என்றைக்கும் உண்டு. அந்தத்தவறுக்குப்பரிகாரமாகத்தான்நானேபி.ஜே.பி. ஆட்சியைக் கவிழ்த்தேன். இனி எந்தக் காலத்திலும் பி.ஜே.பி.யோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைத்துக் கொள்ளாது" - இதுதான் ஜெயலலிதா சொன்னது ஆகும்.
வரலாற்றுப் பிழை அல்ல. தன்னைப் பொறுத்தவரையில் இதுதான் நிலைப்பாடு என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். 'மோடியா? லேடியா?' என்று கேட்டவர் ஜெயலலிதா. 'குஜராத் மாடலை விட, அ.தி.மு.க. ஆட்சியே சிறப்பானது' என்றார் ஜெயலலிதா. அதேபோல் ஜெயலலிதா ஆட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி.
2016 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் பிரதமர் மோடி பேசினார். “பா.ஜ.க.வுக்கு அனைவரும் வாக்களியுங்கள். ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் (ஜெயலலிதா) கோபித்துக் கொண்டு அய்யாவுக்கு (கலைஞர்) வாக்களிப்பீர்கள். அல்லது அய்யாவிடம் கோபித்துக் கொண்டு அம்மாவுக்கு வாக்களிப்பீர்கள். மாற்று சக்தி இல்லை. ஒரு முறை கிணற்றில் விழுந்தால் அடுத்த முறை ஏரியில் விழுவீர்கள். இப்போது பா.ஜ.க. என்ற மாற்று சக்தி உங்களுக்குக் கிடைத்து விட்டது. இப்போதைய ஆட்சியில் (அ.தி.மு.க.) லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாடே இதனால் பாதிக்கப்பட்டு விட்டது. லஞ்சம் வாங்குபவர்கள் (ஜெயலலிதா) கையில் ஆட்சி இருக்கிறது” என்று பேசினார் அன்றைய மோடி.
"இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி ஜெயலலிதா ஆட்சிதான்" என்று அமித்ஷா பேசினார். இதனை எல்லாம் பழனிசாமி அண்ட் கோ மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை.
சம்பாதித்ததையும் சம்பந்தியையும் காப்பாற்றுவதற்குத்தான் பா.ஜ.க. பக்கம் சாய்ந்திருக்கிறார் பழனிசாமி. அவரே கேட்பது போல, 'அவர் யாரோடு கூட்டணி வைத்தால் நமக்கு என்ன?' அதற்காக, ஜெயலலிதாவையே தூக்கி எறியத் துணிந்ததுதான் கவனிக்கத்தக்கது. சசிகலாவுக்கு ஒழுங்காகக் கப்பம் கட்டியதால் முதலமைச்சர் நாற்காலியைப் பெற்ற பழனிசாமி. சசிகலா சிறைக்குப் போனதும் 'நீ ஏன் உரிமை கொண்டாடுகிறாய்? உனக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? நீ எங்களுக்கு பதவி வாங்கித் தந்தாயா?' என்று ஒருமையில் நாவடக்கம் இல்லாமல் சவடால் விட்டதையும் தமிழ்நாடு மறக்கவில்லை. நன்றிகெட்டதனம்தான் பழனிசாமியின் குணம் என்பதை நம்மைவிட அ.தி.மு.க.வினர் அதிகமாக அறிவார்கள்.
பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் கடம்பூரார் உளறுகிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது கடம்பூர் ராஜு இதைச் சொல்லி இருந்தால் ஆடிட்டர் ராஜசேகருக்கும், தூத்துக்குடி ரமேசுக்கும் ஏற்பட்ட கதி தான் இவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதை இப்போது நினைவூட்டுவது தவறல்ல.