அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அநியாய அறிவிப்பைச் செய்துள்ளார். இதனை ஒன்றிய பா.ஜ.க அரசு கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்புடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி, இந்தியாவுக்கு மிகமிக மோசமானது ஆகும்.
“எல்லாம் நல்லதல்ல! எனவே, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியா 25 விழுக்காடு வரியையும் அபராதத்தையும் செலுத்தும். இந்தியா, அமெரிக்காவின் நண்பனாக இருந்த போதிலும், கடந்த ஆண்டுகளில் சிறிய அளவிலான வர்த்தகமே இந்தியாவுடன் செய்து வருகிறோம். ஏனெனில் அவர்கள் மிக அதிக அளவு வரி விதிக்கின்றனர். உலகில் மிக அதிக வரிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான, அருவருப்பான, நாணயமற்ற வர்த்தகத் தடைகளை அவை கொண்டுள்ளன.
உக்ரைனில் ரஷ்யா செய்து வரும் கொலைகளை நிறுத்த வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் விரும்பும் வேளையில், அந்த நாட்டிடம் இருந்து இந்தியா எப்போதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ராணுவத் தளவாடங்கள், எரி சக்திப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது” – இப்படிப் போகிறது அமெரிக்க அதிபரின் செய்திக் குறிப்பு. இவை எதேச்சதிகாரக் கருத்துக்கள் ஆகும்.
கடந்த ஏப்ரல் மாதமே இது போன்ற ஒரு அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தார். “அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள ‘மோசமான நாடுகளில்’ ஒன்றாக இந்தியாவைப் பட்டியலிட்டது டிரம்ப் அரசு. இதன் காரணமாக இந்தியா மீது 27 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. அதுவரை 2 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா மீது 27 விழுக்காடு வரி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அமெரிக்கச் சரக்குகளுக்கு இந்தியா 52 விழுக்காடு வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியா மிகவும் கடினமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வர்த்தகக் கொள்கைகளைப் பொறுத்தவரை, ‘இந்தியா மிகவும் கடினமாக நடந்துகொள்வதாகவும்’ அப்போது டிரம்ப் தெரிவித்தார். இந்தியச் சந்தையில் அமெரிக்க இறக்குமதிகள் போட்டியிடுவதை இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடினமாக்குகிறது என்று குறிப்பிட்ட அவர், “இந்தியா மிக மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்து சென்றிருந்தார். அவர் எனக்கு சிறந்த நண்பர். நான் அவரிடம், ‘நீங்கள் என் நண்பர்தான். ஆனால், நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை’ என்று சொன்னேன். அவர்கள் 52 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கிறார்கள். நாம் பல ஆண்டுகளாக அவர்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை” என்று அப்போது டிரம்ப் சொன்னார்.
‘இன்றுதான் அமெரிக்காவுக்கு உண்மையான விடுதலை நாள்’ என்றும் டிரம்ப் அறிவித்தார். இந்த அனைத்து வரியும் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி 12.01 மணி முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இந்த வரி விதிப்புக்கு உலகத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அப்போதும் ஒன்றிய பா.ஜ.க அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்தது. “இந்த சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது, இதனால் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடைபெற்று வருகிறது” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னார்.
சீனா கடுமையான எதிர்ப்பைக் காட்டியது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு சீனா அதிக வரி விதிப்பதன் மூலமாக தனது எதிர்ப்பைக் காட்டியது. ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் அப்போது கடுமையாக எதிர்த்தன. இந்த நிலையில் சில நாடுகளுக்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்தார் டிரம்ப். அதில் இந்தியாவும் ஒன்று.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இதுவரை ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் நடந்துள்ளன. ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி டெல்லியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, அடுத்தக் கட்டப் பேச்சுக்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில் தன்னிச்சையாக வரியை உயர்த்தி எதற்காக டிரம்ப் அறிவிக்க வேண்டும்? என்ன அவசரம்? என்று கேட்பதை விட, ஒன்றிய பா.ஜ.க. அரசு மீது அவருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
“இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார் டிரம்ப். அது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்தார்கள். ஆனாலும் பிரதமர் மோடி இதற்குப் பதிலே சொல்லவில்லை. இது அவரது பலவீனத்தின் அடையாளம் ஆகும்.
அமெரிக்காவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு எதிர்வினையாக இந்த வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை பா.ஜ.க. அரசு விளக்க வேண்டும். அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.