முரசொலி தலையங்கம் (18-07-2025)
எந்தப் பிரச்சினையைத் தீர்த்தார் பழனிசாமி?
“தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமித்ஷா வீட்டுக் கதவைத் தட்டினேன்” என்று சொல்லி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அத்தோடு, எந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கிறேன் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். அதனை பழனிசாமி சொல்ல வில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே அவரால் சொல்ல முடியும்?
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்தெந்த வகைகளில் வஞ்சிக்கிறது என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்லி வருகிறது தி.மு.க.
தமிழ்நாட்டின் நிதி உரிமைகள், ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாகப் பறிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தரப்படுவது இல்லை. தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை. பள்ளிக் கல்விக்கான ரூ.2000 கோடி நிதி மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடுதான் நிதி தந்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. நீட் தேர்வு மூலமாக அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு சிதைக்கப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கையானது இந்தித் திணிப்புக் கொள்கையாக மட்டுமே இருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியைவிட சமஸ்கிருதத்துக்குத் தரும் நிதி 17 மடங்கு அதிகமாக இருக்கிறது. தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கீழடி அறிக்கையை வெளியில் விடாமல் மறைக்கிறார்கள். இவை அனைத்துக்கும் மேலாக, தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் எந்தப் பிரச்சினை பற்றி அமித்ஷாவிடம் பேசினார் பழனிசாமி?
“நான் மத்திய மந்திரி அமித்ஷாவை கள்ளத் தனமாகச் சந்தித்தேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அமித்ஷா, இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். அவரைப் பார்க்கக் கூடாதா? தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத்தான் அமித்ஷாவைச் சந்தித்தேன்” என்று, எதுவும் தெரியாத பிள்ளையைப் போல பேசி இருக்கிறார் பழனிசாமி. இதனை அவர் கட்சியினரும் நம்பவில்லை. அமித்ஷாவும் நம்ப மாட்டார்.
“சம்பாதித்ததைக் காப்போம்; சம்பந்தியைக் காப்போம்” என்பதுதான் பழனிசாமியின் பஸ் பயணம் என்று சமூக ஊடகங்களில் பரவி வருவதை பழனிசாமி பார்த்தாரா எனத் தெரியவில்லை. பழனிசாமியை மிரட்டிப் பணிய வைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனாலும் ‘பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக’ ஒப்புக் கொள்ள பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க., பழனிசாமியை நம்பவில்லை. பழனிசாமி, பா.ஜ.க.வை நம்பவில்லை. எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் ‘கழுத்தறுப்பு’க் கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இதனைத் திசை திருப்புவதற்காகத் தான் ‘எனக்கு கண் வேர்க்குது’ என்ற பாணியில் பஸ் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் பழனிசாமி.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் பழனிசாமியின் உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடந்தது. ‘எடப்பாடிக்கு செக் – உறவினர் வீட்டில் தொடரும் ஐடி ரெய்டு’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை ரெய்டு’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் இறங்கிய ஐ.டி. அதிகாரிகள்’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் விடிய விடிய ரெய்டு’, ‘கூட்டணிக்கு குறி வைக்கப்படுகிறாரா எடப்பாடி?’, ‘வசமாகச் சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் உறவினர்’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் சிக்கியது என்ன?’, ‘ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர்’, ‘உறவினரின் வரி ஏய்ப்பு – எடப்பாடிக்கு சிக்கல்’, என்று ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன. இதன் பிறகுதான் உள்துறை அமித்ஷா வீட்டுக் கதவைத் தட்டினார் பழனிசாமி.
சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, டெல்லி போனார். வெளிப்படையாகக் காரணம் சொல்லப்படவில்லை. டெல்லி விமானநிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, “இங்கே எங்களுக்கு ஆபீஸ் இருக்கிறது, அதைப் பார்க்க வந்தேன், இது தெரியாம கேள்வி கேட்கிறீங்களே” என்று சலித்துக் கொண்டார் பழனிசாமி. ஆனால் மூன்று கார்களில் மாறி, உள்துறை அமைச்சர் வீட்டுக்குச் சென்றார் பழனிசாமி. உள்துறை அமைச்சர் வீட்டுக்கு இவ்வளவு ரகசியமாகச் செல்லத் தேவையில்லை. வெளிப்படையாகப் போகலாம். அவர் சொல்கிறாரே, ‘தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கத் தேவையான’ கோரிக்கை மனுவை எடுத்துக் கொண்டு கூட அவர் சந்தித்திருக்கலாம். யாரும் அவரை தவறாகச் சொல்ல மாட்டார்கள்.
அமித்ஷாவைச் சந்திக்க வரவில்லை என்று சொல்லி விட்டு, கார் மாறி மாறிச் சென்றதைத்தான், ‘கள்ளத்தனமாகச் சந்தித்தார் பழனிசாமி’ என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள். இது தவறல்ல. இதுதான் உண்மை.
முன்னாள் முதலமைச்சர், ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய பழனிசாமி, உள்துறை அமைச்சரை எதற்காக வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அது அவரது விருப்பம். ஆனால் அதனை மறைத்தார், மறைக்க முயற்சித்தார். மாட்டிக் கொண்டார். இன்று அதனை மாற்றிப் பேசுகிறார் பழனிசாமி. ‘தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காகப் போனேன்’ என்று சொல்லும் பழனிசாமி, என்ன பிரச்சினையைப் பேசினார் என்பதைச் சொல்ல வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சினையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தீர்த்து வைத்துள்ளாரா என்பதையும் சொல்ல வேண்டும்.
அமித்ஷா – பழனிசாமி சந்திப்பால் தமிழ்நாட்டு மக்களின் ஏதாவது ஒரு பிரச்சினையாவது தீர்ந்து விட்டதா என்பதையும் நாம் ஆராய வேண்டும். பழனிசாமியின் ‘சம்பந்தி’ பிரச்சினை ஒருவேளை தீர்ந்திருக்கலாம். அதனைத்தான் ‘மக்கள்’ பிரச்சினை என்று சொல்கிறாரோ?