முரசொலி தலையங்கம்

மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் என்பதற்கு சான்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்!: முரசொலி புகழாரம்!

“வீடு தேடி வரும் முதலமைச்சர்!” தலைப்பிட்டு திராவிட மாடலின் சிறப்புமிக்க திட்டமான, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை விளக்கிய முரசொலி தலையங்கம்!

மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் என்பதற்கு சான்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்!: முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தங்களது கோரிக்கைகளைச் சொல்ல அரசை நோக்கி மக்கள் வரும் காலத்தை மாற்றி, அரசே மக்களை நோக்கி வருவதைப் போல ஆக்கி திராவிட இருக்கிறார் மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் – ஆகிய திட்டங்களின் தொடர்ச்சியாக ‘மக்களைத் தேடி அரசு’ வருகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற முகாம்களின் மூலமாக ஒவ்வொரு மனிதரையும் அரசு நேரடியாகச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்களே, ‘மக்களோடு வாழ்’ என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அனைத்து அரசுகளும் மக்களுக்கான அரசுகள்தான். மக்களாட்சியின் இலக்கணம் என்பது அதுதான். அந்த இலக்கணத்தை நம் கண் முன் கொண்டு வந்து காட்டுவதாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

அரசுத் துறையின் சேவைகள் அனைத்தும், பொதுமக்களின் வீடுகளுக்கே வந்து வழங்கும் திட்டமாக இதனை உருவாக்கி இருக்கிறார் முதலமைச்சர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் உருவாக்கப்பட உள்ளன.

இந்த முகாமுக்கு வரும் மக்களுக்கு கையேடு வழங்கப்படும். அதன் மூலமாக தங்களுக்குத் தேவையான சேவையை மக்கள் பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ளச் சொல்லி தன்னார்வலர்கள், வீடுவீடாகச் சென்று அழைப்பு விடுப்பார்கள். முகாமில் தங்கள் கோரிக்கையைப் பதிவு செய்தால், உடனடியாகத் தீர்வு கிடைக்கும்.

சிதம்பரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்த முகாமில் கலந்து கொண்டார் சபரீஷ் என்ற மாற்றுத் திறனாளி. அவருக்கு காதோலிக் கருவி வேண்டும் என்று அந்த மாணவரின் தாய் தனது கோரிக்கையை பதிவு செய்தார். ஒரு மணி நேரத்தில் காதோலி கருவி அவருக்குத் தரப்பட்டது. "ஒரு மணி நேரத்தில் கொடுத்துவிட்டார்கள்.

இது என் பையனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எவ்வளவு தொகை என்று எனக்குத் தெரியாது. உடனடியாக வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி”என்று சபரீஷின் தாய் உருக்கமாகக் குறிப்பிட்டார். அதே போலத்தான் பலருக்கும் பல சேவைகள் உடனடியாகக் கிடைத்துள்ளன.

ஒவ்வொருவரும் தங்களது சேவைகளுக்காக பல்வேறு அலுவலகங்களுக்கு பல நாட்கள் அலைந்து பெற வேண்டிய சேவைகள், உடனடியாக ஒரே ஒரு முகாம் மூலமாக வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுதான், ‘மக்கள் முதல்வர்’ என்பதற்கான இலக்கணம் ஆகும். மக்களோடு மக்களாக இருக்கும் முதல்வர் என்பதற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் என்பதற்கு சான்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்!: முரசொலி புகழாரம்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை தி.மு.க. தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திரட்டினார்கள்.‘திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து சாத்தியமான அனைத்துத் திட்டத்தையும் உருவாக்கித் தருவேன்’ என்று வாக்குறுதி தந்தார்கள்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் – ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனித்துறையை உருவாக்கி, அவை அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்றி வைத்த சாதனை முதலமைச்சர்தான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த அடிப்படையில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

அடுத்தடுத்து வரும் மனுக்களைப் பரிசீலித்து தீர்வு காண, ‘முதல்வரின் முகவரி’ என்ற தனித்துறையை உருவாக்கினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதுவரை 95 லட்சத்து 65 ஆயிரத்து 885 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 92 லட்சத்து 27 ஆயிரத்து 751 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் தொடங்கி வைத்தார்கள். தொலைபேசி மூலமாக தங்களது கோரிக்கைகளை வைக்க, ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். சென்னை கோட்டூர்புரத்தில் 120 இருக்கைகளுடன் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அடுத்ததாக ‘எளிமை ஆளுமை’ என்ற திட்டத்தைத் தொடங்கினார்கள். இவை அனைத்தும் மக்களின் குறைகளைத் தீர்த்து வருகின்றன.

தாம்பரம் சேர்ந்த ராதா என்ற பெண்மணி, “நான் பூ வியாபாரம் செய்கிறேன். எங்களுக்கென்று நிரந்தரமாக வீடு இல்லை. ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் நடப்பதாக எங்க ஏரியாவுல ஆட்டோவுல சொல்லிட்டுப் போனாங்க. நான் அங்கே போய் மனு கொடுத்தேன். உடனே எனக்கு வீடு கிடைத்துவிட்டது. ஒரே ஒரு மனு கொடுத்தேன். என் கனவு நிறைவேறிவிட்டது” என்று சொல்லி இருக்கிறார்.

இரண்டு மணி நேரத்தில் சாதிச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார் திரு.வி.க. நகர் யமுனா. “சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு காலை எடுத்துட்டாங்க. இந்த முகாமுக்கு போய் எழுதிப் போட்டேன். வந்தாங்க. செயற்கைக் கால் செஞ்சு கொடுத்தாங்க. மூணு வருஷம் கழிச்சு இப்ப நான் நடக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியைச் சேர்ந்த ஜெகதீசன்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களுடன் முதல்வர் ஆகிய திட்டங்களின் நீட்சியாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். கோரிக்கைகள் கொடுப்பவர்களைப் பார்த்து எரிச்சல் அடையும் சூழ்நிலையை மாற்றி, கோரிக்கை மனுக்களைக் கேட்டு வாங்கும் அரசாக தனது அரசை மாற்றிக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

‘ஒவ்வொரு மனிதரின் தேவையையும் கேட்டு, பார்த்து நிறைவேற்றும் அரசு இது’ என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வார்கள். ஒரு தந்தையின் மனநிலையில் ஒரு தலைவர், ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories