இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 50 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஆண்டு ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பின்னர் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து யார் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வந்தது.
இதனிடையே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் கடந்த வரம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் ஈரானிய தளபதிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் இரு நாடுகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் சிரியா மீது தாக்குதலை நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அங்கு ஏராளமான புரட்சி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சிரியாவில் துரூஸ் இன மக்கள் அதிகம் வசிக்கும் ஸ்வேடா நகரில் சிரியா ராணுவத்துக்கும் துரூஸ் இன படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.
இதில் துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் சிரியாவின் அரசு கட்டடங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து டமஸ்கஸ் நகரில் அமைந்துள்ள சிரிய ராணுவத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.