முரசொலி தலையங்கம்

“இப்படி சொல்வதற்கு வெட்கமாக, அவமானமாக இல்லையா?” - அமித்ஷாவை வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!

2014 ஏப்ரல் 21 அன்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது நினைவில் இருக்கிறதா பா.ஜ.க.வினருக்கு? என்று முரசொலி தலையங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

“இப்படி சொல்வதற்கு வெட்கமாக, அவமானமாக இல்லையா?” - அமித்ஷாவை வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

12.06.2025

ஊழலோடு கூட்டணி அமைத்த அமித்ஷா!

அ.தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறாராம் அமித்ஷா. இதனைச் சொல்வதற்கு அவருக்கு வெட்கமாக, அவமானமாக இல்லையா?

'மோடியா? லேடியா?' என்று கேட்டவர் ஜெயலலிதா. மறந்து போய்விட்டதா அமித்ஷா அவர்களுக்கு?

2014 ஏப்ரல் 21 அன்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது நினைவில் இருக்கிறதா பா.ஜ.க.வினருக்கு?

“ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்றிருக்கிறதா? அந்த வளர்ச்சி ஏழை, எளிய, நடுத்தர மக்களை சென்றடைந்து இருக்கிறதா? ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சி அடைந்திருக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்தும் கண்ணாடியாக விளங்குபவை மனிதவளக் குறியீடுகள். விளம்பர வளர்ச்சி எது என்பதையும், உண்மையான வளர்ச்சி எது என்பதையும் இந்த மனிதவளக் குறியீடுகள் தெளிவுபடுத்தும்.

* குஜராத்தில் 16.6 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 11.3 சதவிகித மக்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.

* உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதை அடைவதற்குள் 38 குழந்தைகள் குஜராத்தில் இறந்து விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஒரு வயதை அடைவதற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 21 மட்டுமே.

* ஒரு லட்சம் குழந்தை பிறப்பில் தாய் இறப்பு விகிதம் குஜராத்தில் 122. தமிழகத்தில் இது 90 தான்.

* 2012-13 ஆம் ஆண்டு குஜராத்தில் பெறப்பட்ட அன்னிய முதலீடு வெறும் 2,676 கோடி ரூபாய். ஆனால், தமிழ்நாட்டில் பெறப்பட்டதோ 15,252 கோடி ரூபாய்.

* கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவிகிதம் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 29 சதவிகிதம் குறைந்துள்ளது.

* பொது விநியோகத் திட்டத்திலிருந்து உணவுப் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பது குஜராத்தில் 63 சதவிகிதம் ஆகும். இது தமிழ்நாட்டில் 4 சதவிகிதம்தான்.

“இப்படி சொல்வதற்கு வெட்கமாக, அவமானமாக இல்லையா?” - அமித்ஷாவை வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!

வாக்காளர்களே இப்போது சொல்லுங்கள்... சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா?” என்று கேட்டார் ஜெயலலிதா. மோடியை விடத் தனது ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று சொன்னவர் மட்டுமல்ல; மோடியை அம்பலப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிகம் பேசியவரும் ஜெயலலிதாதான்.

ஜெயலலிதா ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொன்னவர்கள் தான் பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும்.

2016 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் பிரதமர் மோடி பேசினார்.“பா.ஜ.க.வுக்கு அனைவரும் வாக்களியுங்கள். ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் (ஜெயலலிதா) கோபித்துக் கொண்டு அய்யாவுக்கு (கலைஞர்) வாக்களிப்பீர்கள். அல்லது அய்யாவிடம் கோபித்துக் கொண்டு அம்மாவுக்கு வாக்களிப்பீர்கள். மாற்று சக்தி இல்லை. ஒரு முறை கிணற்றில் விழுந்தால் அடுத்த முறை ஏரியில் விழுவீர்கள். இப்போது பா.ஜ.க. என்ற மாற்று சக்தி உங்களுக்கு கிடைத்து விட்டது. இப்போதைய ஆட்சியில் (அ.தி.மு.க.) லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாடே இதனால் பாதிக்கப்பட்டு விட்டது. லஞ்சம் வாங்குபவர்கள் (ஜெயலலிதா) கையில் ஆட்சி இருக்கிறது” என்று பேசினார் அன்றைய மோடி. இப்போது அ.தி.மு.க. என்ற கிணற்றில் அவர்களே போய் விழுந்திருக்கிறார்கள். ஊழலோடு கைகோர்த்திருக்கிறார்கள் மோடியும் அமித்ஷாவும்.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இங்கே பரப்புரை செய்ய வந்த அமித்ஷா, 'அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்' என்று பேசினார். திருச்சியில் பேசிய அமித்ஷா, ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கிப் பேசினார். “இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் ஜெயலலிதாவின் அரசாங்கம்தான்” என்றார். “மே 16 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார். இப்போது ஊழலோடு கூட்டணி வைத்துள்ளார் அமித்ஷா.

“இப்படி சொல்வதற்கு வெட்கமாக, அவமானமாக இல்லையா?” - அமித்ஷாவை வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!

“அ.தி.மு.க. அரசு, தமிழகத்துக்கு ஒன்றிய அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிராகரித்தும், செயல்படுத்தாமலும் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், தமிழகம் வளர்ச்சி காணாமல் ஊழல் மலிந்து காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்” என்று பட்டுக்கோட்டையில் பேசினார் அமித்ஷா. “இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த ஜெயலலிதாவின் அரசாங்கத்தை மக்கள் மாற்றி, பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று தான் போகும் இடமெல்லாம் பேசினார். இன்று ஊழலோடு கூட்டணி அமைத்துள்ளார் அமித்ஷா.

பழனிசாமி ஆண்ட போதும், 'நாட்டிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி, தமிழ்நாட்டில்தான் நடக்கிறது' என்று பேசியவர் அமித்ஷா. 09.07.2018 - அன்று திருச்சியில் அளித்த பேட்டியில்,“அ.தி.மு.க. தலைவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அவை அரசியல் வழக்குகள் அல்ல, ஊழல் வழக்குகள். இவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஊழல் செய்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கிறது. இந்த ஊழல் காரணமாக தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை. அ.தி.மு.க. அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழக மக்களைச் சென்று சேரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் கூட தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்கிறது” என்று சொன்னார். இதே பழனிசாமி வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அமித்ஷா. அவமானமாக இல்லையா?

banner

Related Stories

Related Stories