முரசொலி தலையங்கம்

"கொத்தடிமைக் கூட்டமான பழனிசாமியை மிரட்டி உட்கார வைத்திருக்கிறார் அமித்ஷா" - முரசொலி விமர்சனம் !

"கொத்தடிமைக் கூட்டமான பழனிசாமியை மிரட்டி உட்கார வைத்திருக்கிறார் அமித்ஷா" - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (11-06-2025)

எந்த லோகத்­தில் இருக்­கி­றார் அமித்ஷா?

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறாராம் அமித்ஷா? அவர் எந்த லோகத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை!

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. பா.ஜ.க. கட்டிய புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் கூட உள்ளே இல்லை. தமிழ்நாட்டில் இருந்து ஒரு பா.ஜ.க. உறுப்பினர் கூட மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே செல்லவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் நாலே நாலு பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்களும் கடந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து - அ.தி.மு.க. தயவால் உள்ளே சென்றவர்கள்.தனித்து நின்று பா.ஜ.க. அடைந்த வெற்றி அல்ல இது.

இந்த லட்சணத்தில்தான் பா.ஜ.க. ஆட்சியை அமைக்கப் போகிறது தமிழ்நாட்டில் என்று சொல்லி இருக்கிறார் அமித்ஷா. அதனால் உஷாராக, 'எங்கள் கூட்டணி' என்கிறார் அமித்ஷா. “வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியைப் பெறும்” என்று சொன்னார். பிறகு, “அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைக்கும்” என்றார்அமித்ஷா.

"கொத்தடிமைக் கூட்டமான பழனிசாமியை மிரட்டி உட்கார வைத்திருக்கிறார் அமித்ஷா" - முரசொலி விமர்சனம் !

'அ.தி.மு.க. ஆட்சியை அமைக்கும்' என்று எடப்பாடி பழனிசாமியே இன்னும் நம்பவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெரியும், அ.தி.மு.க. கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது என்று!

2019 - நாடாளுமன்றத் தேர்தல்

2019 - சட்டமன்ற இடைத்தேர்தல்

2019 - 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்

2021 - ஊரக உள்ளாட்சித் தேர்தல்

2021 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

2022 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

2023 -- ஈரோடு இடைத்தேர்தல்

2024 -- நாடாளுமன்றத் தேர்தல்

2024 - விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் - ஆகிய 9 தேர்தல்களிலும்தோற்றவர்தான் பழனிசாமி.

எனவே, அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியையே பரிசாகப் பெறத் தயாராகி வருகிறார் பழனிசாமி. இப்போது அவர் வைத்திருக்கும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறையப் போகிறது. அதுதான் களநிலவரம் ஆகும்.

அவரே மூழ்கிக் கொண்டு இருக்கிறார். மூழ்கிக் கொண்டிருப்பவரின் தோளைப் பிடித்து தப்பிக்கப் பார்க்கிறது பா.ஜ.க. மூழ்கிக் கொண்டிருப்பவரின் தோளைப் பிடித்தால் இரண்டு பேரும் மூழ்க வேண்டியதுதான் இயற்கை ஆகும். அதனைத்தான் அடுத்த தேர்தலில் பார்க்கப் போகிறோம். இதற்கு மத்தியில்தான் அமித்ஷாக்களின் தலைப்புச் செய்திகள்.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழ்நாடு வந்து இதுபோன்ற அளப்புகளை அளந்துவிட்டுச் செல்வது அமித்ஷாக்களின் வழக்கம். 'எத்தனை ஷாக்கள் வந்தாலும் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது' என்றார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். ஆமாம்! இது உண்மைதான் என்பதை அமித்ஷா ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுதான் அவரது மதுரைப் பிரகடனம் ஆகும். “ஷாவால் முடியாமல் போகலாம், தமிழக மக்கள் அதைச் செய்வார்கள்” என்று தமிழ்நாட்டு மக்கள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு மதுரையில் இருந்து போய்விட்டார் அமித்ஷா. அடுத்த ஆறு மாதம் கழித்து வரலாம் அவர். அமித்ஷாவை ஏதோ மந்திரவாதியைப் போல பா.ஜ.க. நினைத்து வைத்திருந்தது. அதில் மண் அள்ளிப் போட்டுவிட்டார் அமித்ஷா.

'மலையைத் தூக்கப் போகிறேன்' என்று ஒருவர் ஊருக்குள் வந்த கதை அனைவரும்அறிந்த பழைய கதைதான். மலையைத் தூக்கப் போகிறார் என்பதற்காக ஆறு மாதங்கள் அவருக்கு அந்த ஊரே சோறு போட்டது. மலையைத் தூக்கக் குறிக்கப்பட்ட நாளும் வந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் அதனைப் பார்க்க வந்தார்கள். கூலாக அந்த ஆள் சொன்னார்: “எல்லோரும் சேர்ந்து தூக்கி என் தோளில் வையுங்கள்” என்றார். அப்படித்தான் இருக்கிறது அமித்ஷாவின் பேச்சுகள்.

"கொத்தடிமைக் கூட்டமான பழனிசாமியை மிரட்டி உட்கார வைத்திருக்கிறார் அமித்ஷா" - முரசொலி விமர்சனம் !

ஆக்கவும் அழிக்கவும் வல்லவராகச் சொல்லிக் கொண்ட அமித்ஷா, “தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வை தங்கள் தலையில் தூக்கிக் கொண்டாடு வதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணிக்காக அள்ளிக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். தமிழ்நாடு என்ற மலை மீது, மகத்தான மாமனிதர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை அமர வைத்துத் தூக்கிக் காட்டிவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள். இதெல்லாம் அமித்ஜி அறிவாரா?

ஏழெட்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் தேர்தல் முடிவுகளை முதலில் வாங்கிப் பாருங்கள் ஜி!. அதில் பா.ஜ.க. நிலைமை என்ன, அ.தி.மு.க. நிலைமை என்ன என்று பாருங்கள். ஆந்திராவைத் தாண்டினால் தமிழ்நாடுதான் என்பது மாதிரியான விமானப் பயணமல்ல தேர்தல். 'ஒடிசாவைப் பிடித்தோம், டெல்லியைப் பிடித்தோம், மகாராஷ்டிராவைப் பிடித்தோம், அது போல தமிழ்நாட்டைப் பிடிப்போம்' என்பது சுற்றுலா பயணம் அல்ல. இது அரசியல்.

இந்த நுட்பமான அரசியலை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் மிகச் சரியாகச் சொன்னார்கள்.“இது தமிழ்நாடு. பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கருத்தியல் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. எனவே இங்கே பா.ஜ.க. வெல்ல முடியாது” என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். இந்தக் கள நிலவரத்தை - அரசியல் யதார்த்தம் அறியாமல் ஆறு மாதத்துக்கு வரும் ஆன்மிக பயணத்தை அரசியல் பயணமாகக் கணக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.

அவர் உள்துறையைக் கவனிக்கும் அமைச்சர் அவ்வளவு தான். இந்திய நாட்டின் விதியைத் தீர்மானிப்பவர் அல்ல என்பதை ஊடகங்கள் முதலில் உணர வேண்டும். 'அமித்ஷா வருகிறார்’ என்பதற்காக அவர்கள் காட்டும் அலப்பறைகள் அருவெறுப்பாக இருக்கிறது.

‘தினத்தந்தி'யில் (9.6.2025) தலைப்புச் செய்தியாக அமித்ஷாவின் பரபரப்பு பேச்சு இடம் பெற்றுள்ளது. அவர் பரப்பாக பேசும் படமும் இடம் பெற்றுள்ளது. அதற்கு கீழே என்ன செய்தி தெரியுமா? “மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது” என்பதுதான் அந்தச் செய்தி. இன்று நேற்றல்ல இரண்டரை ஆண்டு காலமாக மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சரால் அங்கு அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. பா.ஜ.க. ஆண்ட மாநிலம் அது. பிரதமர் இதுவரை அங்கு போகவே இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் வாக்கு கேட்டு போகவில்லை. உள்துறை அமைச்சர் ஓரிரு முறை சென்றிருக்கலாம். ஆனால் அமைதி போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

பா.ஜ.க. ஆளுகையில் ஒரு மாநிலம் எப்படி ஆகும் என்பதற்கு உதாரணம் மணிப்பூர். எல்லா மாநிலத்தையும் இப்படி ஆக்கப் பார்க்கிறார்கள். கொத்தடிமைக் கூட்டமான பழனிசாமியை மிரட்டி உட்கார வைத்திருக்கிறார்கள். அவரது தோளில் ஏறப் பார்க்கிறார்கள். மூழ்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. கும்பல் அடையப் போகும் தோல்வியானது, அதனுடைய வகுப்புவாத, எதேச்சதிகாரப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாகவே அமையும்.

banner

Related Stories

Related Stories