முரசொலி தலையங்கம் (07-06-2025)
ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் வஞ்சகம்!
சாதி வாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப் போட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதில் இவர்களது வஞ்சக எண்ணம் வெளிப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் எந்த வஞ்சகத்தைச் செய்தார்களோ அதே வஞ்சகம்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பிலும் நடந்திருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று நிபந்தனை விதித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இவை இரண்டும் முடிய இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என்பதை அனைவரும் அறிவோம். ‘பெண்களுக்கு உரிமை தரக் கூடாது’ என்று நினைக்கும் கட்சிதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அதனால்தான் முடிந்தவரையில் அதனைத் தள்ளி விட்டார்கள். அதே வஞ்சகத்தைத்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்திலும் செய்யப் பார்க்கிறார்கள்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்போம் என்பது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட்ட அறிவிப்பாக இருக்குமானால் அதனை உடனடியாகச் செய்வதற்கு என்ன குறைச்சல்? எதற்காகத் தள்ளிப் போட வேண்டும்? 2027 ஆம் ஆண்டுக்கு எதற்காகத் தள்ளிப் போட வேண்டும்?
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் சாதிவாரிக் கணக்கெடுப்புடன் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, லடாக் உள்ளிட்ட பனிப் பகுதிகளில் 2026 அக்டோபர் 1ஆம் தேதியும், நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ஆம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டதால் அந்தப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனா நோய் பரவல் 2022 ஆம் ஆண்டு முற்றுப் பெற்ற நிலையில் அப்போதே பணிகளைத் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யவில்லை. ஏனென்றால், ‘மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கைகள் வலுப்பெற்றன. எனவேதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தது பா.ஜ.க. அரசு.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம்’ என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தக் கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடைத்தது. இது பா.ஜ.க.வுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூடியது. அதில், “அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. இப்போது ஏன் இந்த அவசரமான அறிவிப்பைச் செய்தார்கள்? அதற்கு ஒருவாரத்துக்கு முன்புதான் பகல்காம் தாக்குதல் நடந்துள்ளது. நாடு கொந்தளிப்பான சூழலில் இருந்தது. ‘ஒன்றிய அரசின் பாதுகாப்புக் குறைபாடு’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் திசை திருப்புவதற்காகவும், பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் வர இருப்பதாலும் அவசரமாக இந்த அறிவிப்பைச் செய்தார் பிரதமர் மோடி.
“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரசுக் கட்சி சொல்கிறது. அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரசுக் கட்சி சொல்வதைப் போல மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டவர் தான் பிரதமர் மோடி. அப்படிப்பட்டவர் மனம் மாறினார். பீகார் தேர்தல் அவரை மனம்மாற வைத்தது. அதிலாவது அவர் உண்மையாக இருந்திருக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு முதல் சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அவர் தொடங்குவதாக அறிவித்திருக்க வேண்டும். மாறாக இரண்டு ஆண்டு காலத்துக்கு தள்ளிப் போட்டுள்ளது, அவர்களுக்கு உண்மையில் இதனை நடத்துவதற்கு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது.
1931ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. எனவே தற்போது நம்மிடம் இருக்கும் சாதிவாரித் தரவுகள் 1931 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டவை. நம்மிடம் இருக்கும் தரவுகள் 1931 தரவுகள் ஆகும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. நம்மிடம் உள்ள தரவுகள் 2011 உள்ள தரவுகள்தான். எனவேதான் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் என்பது இன்றைய காலக் கட்டாயம் ஆகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த இவர்களுக்கு மனமில்லை என்பது நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆனபோதே தெரிந்துவிட்டது. ஏனென்றால் இதற்கான நிதியை முழுமையாக அப்போதே அவர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மொத்தம் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 2025–26 நிதிநிலை அறிக்கையில் 574 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இவர்களது வஞ்சக எண்ணத்தை அந்த நிதி நிலை அறிக்கையே காட்டிக் கொடுத்து விட்டது. எனவே 2027 என்று இவர்கள் இப்போது சொல்வது அதிர்ச்சி அளிக்கவில்லை.
எல்லாவற்றையும் அறிவிப்புடன் தலைப்புச் செய்தி ஆக்கினால் போதும் என்று மட்டுமே நினைக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். அதன்பிறகு செய்யப்படும் தொகுதி மறுசீரமைப்பானது முறையானதாக அமைய வேண்டும். அதிலும் வஞ்சகம் வாழ்ந்துவிடாமல் தடுத்தாக வேண்டும்.