முரசொலி தலையங்கம் (16-05-2025)
நேர்மையாக நடந்தாரா பழனிசாமி?
பொள்ளாச்சி சம்பவத்தில் தான் நேர்மையாக நடந்து கொண்டதாக வெட்கமில்லாமல் பச்சைப் பொய் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. அவர் நேர்மையாக நடந்து கொண்டிருந்தால் இந்த வழக்கே சி.பி.ஐ.க்கு போயிருக்காதே?
1. பொள்ளாச்சி சம்பவமானது – ஒரு நாளில் நடந்தது அல்ல. பல மாதங்களாக நடந்தது. இதனை ஒரு கும்பல் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தது. உள்துறையை கையில் வைத்திருந்த பழனிசாமிக்கு இது தெரியவில்லை. அ.தி.மு.க. ஆட்சி உளவுத் துறையும் சொல்லவில்லை. உள்ளூர் காவல் துறையும் இதனைக் கண்டுபிடிக்கவில்லை.
2. பாதிக்கப்பட்டவர் ஒருவர் அல்ல. பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன்வந்து புகார் சொன்னவர்கள் சிலரே. எனவே பழனிசாமி காலத்தில் பாலியல் சம்பவங்கள் எல்லையற்று நடந்துள்ளன. இது அவரது ஆட்சிக் காலக் காவல் துறைக்குத் தெரியாமல் இருந்திருக்காது. தெரிந்தே மறைத்திருக்கிறார்கள்.
3. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தரப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியே உயர் காவல் துறை அதிகாரிக்கு இதனைக் கவனப்படுத்துகிறார்கள். ஆனால் அவர் அதனை அலட்சியப்படுத்தி விடுகிறார்.
4. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு பிப்ரவரி 24 ஆம் தேதி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தருகிறார். அந்தப் புகார், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்கு எடப்பாடியின் போலீஸால் தரப்படுகிறது. புகார் தந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
5. இப்படி தாக்கியவர் யார்? அ.தி.மு.க.வைச் சேர்ந்த ‘பார்’ நாகராஜன். பொள்ளாச்சி நகராட்சி 34 ஆவது வார்டு அ.தி.மு.க. அம்மா பேரவைச் செயலாளர் இவர். புகார் கொடுத்தவர்களை இவர் தாக்கினார். இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் யார் என்று தெரிந்ததும், மறுநாளே ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார். இவரும் அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணியுடன் இருக்கும் படங்கள் இணையத்தில் இருக்கின்றன. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இப்போது தண்டனை பெற்றுள்ள அனைவருக்கும் இவர் நண்பர். இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கையாகக் கொடுத்த பிறகுதான், அவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்குகிறார் பழனிசாமி. இவர்தான் நேர்மையாக நடந்து கொண்டவரா?
6. பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், ஊர், முகவரி ஆகியவை மறைக்கப்பட வேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதனை வெளிப்படையாக அறிவித்தார்கள். பொதுவெளியில் பரப்பினார்கள். இதுதான் நேர்மையான நடவடிக்கையா?
7. பொள்ளாச்சி சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதால் விசாரணை நேர்மையாக நடக்காது என்று தெரிந்துவிட்டது. சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. உள்ளிட்ட இயக்கங்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார் பழனிசாமி. அவர்கள் மறுநாளே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு வெளிப்படையாகச் சென்று விசாரணை நடத்தி அதனை மீடியாவில் வர வைத்தார்கள். யார் பாதிக்கப்பட்ட தரப்பு என்று காட்டிக் கொடுக்கும் கங்காணி வேலையைச் செய்தார் பழனிசாமி.
8. நிருபர்கள் கேட்டபோது, ‘பொள்ளாச்சி சம்பவத்துக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று திருப்பிக் கேட்ட பழனிசாமிதான் நேர்மையின் உருவமா?
9. மார்ச் 12 ஆம் தேதியன்று, தி.மு.க. சார்பில் மகளிரணிச் செயலாளர் கனிமொழி அவர்கள் தலைமையில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதற்கு மறுநாள்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார் பழனிசாமி. அவராக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவில்லை. உத்தரவிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். இத்தகைய யோக்கியவான் இப்போது பேசலாமா?
10. ‘குற்றவாளிகளை நான்தான் கைது செய்தேன்’ என்கிறார் பழனிசாமி. விவகாரத்தை மறைக்க முடியாது என்று தெரிந்த பிறகுதான் கைது செய்தார். அதுவும் அ.தி.மு.க. பிரமுகர்களை அவர் கைது செய்யவில்லை.
11. மிக முக்கியமான குற்றவாளி அருளானந்தம். அவர் அ.தி.மு.க. மாணவரணியில் இருந்தவர். ஹெரோன்பால் என்பவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரையும் எடப்பாடி கைது செய்யவில்லை.
12. அ.தி.மு.க. பிரமுகர் அருளானந்தத்தை 2021 ஜனவரி 6 ஆம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. அதன்பிறகுதான் அருளானந்தத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினார் பழனிசாமி. மூன்றாண்டு காலம் அருளானந்தத்தைக் காப்பாற்றி வைத்திருந்த நேர்மையின் சிகரம்தான் பழனிசாமி.
13. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்கள். அவர்கள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்படும் அளவுக்கு பலவீனமாக வழக்கை நடத்தியதும் பழனிசாமியின் ஆட்சிக் காலம்தான்.
14. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஹெரோன்பால் என்பவரை தப்பிக்க வைக்கும் முயற்சிகளை பழனிசாமி ஆட்சியில் செய்தார்கள். இதனை பத்திரிக்கைகள் எழுதிய பிறகுதான் அந்த முயற்சியைக் கைவிட்டார்கள்.
15. இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் ஜேம்ஸ் ராஜா என்பவரது காரை சி.பி.ஐ. பறிமுதல் செய்தது. ஆனால் பழனிசாமி ஆட்சிக் காலத்தில் இதனைச் செய்யவில்லை.
16. இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கிருஷ்ணகுமார் என்பவரது பெயர் அடிபட்டது. அவரை பழனிசாமி ஆட்சி கண்டுபிடிக்கவில்லை.
17. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களுக்குமான தொடர்பை ‘நக்கீரன்’ இதழ் வெளியிட்டது. நக்கீரன் நிருபரை, எடப்பாடி பழனிசாமி பேரைச் சொல்லியும், அன்றைய அமைச்சர் வேலுமணி பேரைச் சொல்லியும்தான் மிரட்டினார்கள். இதனை அப்போதே நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ளது. விசாரணை என்ற பெயரால் தடயங்களை மறைத்தது பழனிசாமி அரசு. பின்னர் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
18. இப்போது ஒன்பது பேர் தண்டனை பெற்றுள்ளார்கள். இதில் ஐந்து பேர் மட்டும்தான் பழனிசாமி காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். மற்ற நான்கு பேரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டவர்கள். சி.பி.ஐ. வசம் இந்த வழக்கை ஒப்படைக்காமல் போயிருந்தால், இந்த நால்வரும் தப்பி இருப்பார்கள். அந்த ஐந்து பேரையும் காப்பாற்றி இருப்பார் பழனிசாமி.
19. பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசுவைக் காப்பாற்ற முயற்சித்தது அ.தி.மு.க. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தினார். அதன்பிறகுதான் வேறு வழியில்லாமல் கைது செய்தார் பழனிசாமி.
20. ‘நான் நேர்மையாக நடந்து கொண்டேன்’ என்று இப்போது சொல்லும் பழனிசாமி, அப்போது பொள்ளாச்சி காவல் துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுத்தார்? கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாண்டியராஜன் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். பொள்ளாச்சி துணை எஸ்.பி.ஜெயராம் மாற்றப்பட்டார். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடேசன் மாற்றப்பட்டார். நேர்மையாக நடந்திருந்தால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வந்திருக்காதே?
21. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை சாதனையாகச் சொல்லிக் கொள்கிறார் பழனிசாமி. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை மார்ச் 10–ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சி இரண்டு நாள் கழித்து அதாவது மார்ச் 12–ம் தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு பழனிசாமி பரிந்துரைத்தார். அதன்பிறகும் இரண்டுநாள் இழுத்தடித்துதான் அரசாணை போட்டார்.
22. வழக்கை உடனடியாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தாரா என்றால் இல்லை. சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் அரசாணை போட்ட பிறகும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை யையும் நடத்தச் சொல்லி இடைஞ்சல் கொடுத்தார். ‘சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்த பிறகும் சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பது ஏன்?’ என்று சென்னை உயர்நீதிமன்றம் 29.3.2019 அன்று கேள்வி கேட்டது. ‘வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் பணி நடக்கிறது’ என்று நீதிமன்றத்தில் பொய் சொன்ன ஆட்சி பழனிசாமி ஆட்சி.
23. ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் 2019 அக்டோபர் 16–ம் தேதி அறிவித்தது. அதனால்தான் பழனிசாமி ஆட்சியால் மூக்கை நுழைக்க முடியவில்லை.
24. “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் குறிப்பிடாத புதிய அரசாணையை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரைச் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பயன்படுத்திய காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரைப் பயன்படுத்தியதால் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 15–ம் தேதி உத்தரவிட்டது. இது பழனிசாமி ஆட்சியின் நேர்மையின்மைக்கு சாட்சியம் அல்லவா?
25. சம்பவம் நடந்தது முதல் தீர்ப்பு வந்த நாள் வரை எந்த நேர்மையான செயலையும் பழனிசாமி செய்ய வில்லை. நேர்மை என்பது எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. அதை பழனிசாமிகள் பயன்படுத்தக் கூடாது.