முரசொலி தலையங்கம்
26.03.2025
நிதித்தனமாக பேசுங்கள்!
வழக்கம் போல தமிழ்நாட்டைப் பற்றி ஏளனமாகப் பேசி இருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் அப்படி பேசவில்லை என்றால்தான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கும்.
ஒன்றிய அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். "ஒன்றிய அரசு கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களைக் கொடுத்துள்ளது" என்று சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்படியானால் பத்து திட்டங்களையாவது வரிசையாகச் சொல்லி இருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. அப்படி இருந்தால்தானே சொல்லி இருப்பார்.
அவர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கைகளில் தமிழ்நாடு என்ற பெயராவது இருந்ததா? எந்த மாநிலத்துக்காவது தேர்தல் வந்தால் அந்த மாநிலத்துக்காக கண்துடைப்பு திட்டங்களை அறிவிப்பார்கள். அவ்வளவுதான்.
இப்போது மோடி நாற்காலியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு பேர், ஆந்திர சந்திரபாபுவும், பீகார் நிதிஷ்குமாரும். அதனால் அவர்களை மகிழ்விக்க, அந்த மாநிலத்துக்குத் திட்டங்களை அறிவித்திருப்பார்கள். மற்றபடி வேறு மாநிலங்களையும் கண்டுகொள்ள மாட்டார்கள். குறிப்பாக தமிழ்நாடு அவர்களது வரைபடத்தில் இருக்காது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தின் பெயரைச் சொன்னாலே பல் வலி வந்து விடும் என்று பயப்படக் கூடிய ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி.
"தமிழ்நாட்டில் வேறு ஒரு விவாதம் நடந்து வருகிறது. தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால் திருப்பி 27 பைசா கூட வழங்கப்படவில்லை என்ற வாதமே தவறாகும். கொஞ்சம் ஏளனமாகச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும் கோவையும்தான் அதிக வரி கொடுக்கிறது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னையும் கோவையும், 'நாங்க தான் பணம் கொடுக்கிறோம். அதனால் எங்களுக்கு பணம் திருப்பி கொடுங்க, அரியலூரும் கோவில்பட்டியும் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன?' என்று கேட்டால் எப்படி இருக்கும்?" என்று கேட்டு இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
தமிழ்நாடு அரசு ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறது. அதனை எடுத்துப் பாருங்கள். 'அனைவருக்குமான நிதிநிலை அறிக்கையாக' அது அமைந்திருக்கும். அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கையாக அது அமைந்திருக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அதிகமாக உதவுபவர்களுக்கு மட்டுமல்ல, யார் அடித்தட்டில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உதவுவது மாதிரியான நிதிநிலை அறிக்கையாக தமிழ்நாட்டின் அறிக்கை இருக்கும்.
'எங்களுக்கு ஏன் தரவில்லை' என்றுதான் நாங்கள் கேட்கிறோமே தவிர, அவர்களுக்கு ஏன் அதிகம் தருகிறீர்கள்? என்று நாம் கேட்கவில்லை.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய அடிப்படை நிதியைக் கூட தர மறுக்கிறீர்களே என்பதுதான் எங்களுடைய வேதனை. பள்ளிக் கல்விக்கான ரூ.2000 கோடி தர வேண்டிய இடத்தில் ரூ.1500 கோடியை கொடுத்துவிட்டால் கூட அது குறையாகச் சொல்ல முடியாது. ஆனால் மொத்தமாகத் தரவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. 'ஒன்றிய அரசு தராவிட்டாலும் நாம் அந்த நிதியைத் தருவோம்' என்று சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
இயற்கை பேரிடருக்காக ரூ.37 ஆயிரம் கோடி கேட் TODAYகாம். அதில் பாதியைக் கொடுத்திருந்தால் கூட அதைக் குறையாகச சொல்ல முடியாது. ஆனால் ஒரு விழுக்காடு பணத்தைக் கூடத் தரவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. நிதி நெருக்கடியில் இருந்த போது தமிழ்நாடு அரசு தன்னுடைய நிதியில் இருந்து நிவாரண உதவிகளையும் பணிகளையும் மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை 2,477 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
பத்து சிறப்புத் திட்டங்களை அறிவித்து, அதில் ஐந்தை நிறைவேற்றிக் காட்டி இருந்தால் கூட ஒன்றிய அரசுக்கு நன்றி சொல்லலாம். அறிவித்தது ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை. அதையும் ஏழு ஆண்டுகளாகக் கட்டவில்லை.
16 லட்சம் குடிநீர் இணைப்புகளை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் நிர்மலா. இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். குடிநீர் இணைப்பு கொடுத்தோம், வீடு கட்டித் தந்தோம் என்று. அதில் என்ன உண்மை?
• ஒன்றிய அரசு வீடுதோறும் குடிநீர் (Jal Jeevan Mission) என்ற திட்டத்தை வைத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 4,142 கோடி ரூபாயில், 732 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது. நிதியின்மையினால் திட்டங்களின் செயல்பாடு சுணங்கக் கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு தனது நிதியைக் கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
• ஒன்றிய அரசின் திட்டமான பிரதமர் நகர்ப்புர வீட்டு வசதித் திட்டத்தின் (PMAY-U), கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, 1.5 இலட்சம் ரூபா யாகவே இருக்கிறது. இத் திட்டத்தினைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசானது, வீடு ஒன்றிற்கு 12 முதல் 14 இலட்சம் ரூபாயை தன் சொந்த நிதியின் மூலம் மானியமாகக் கொடுத்து, ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் சொந்த வீட்டிற்கான கனவினை நிறைவேற்றியுள்ளது.
• ஒன்றிய அரசின் பிரதமர் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் (PMAY-G) கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, வீடு ஒன்றிற்கு 0.72 இலட்சம் ரூபாயாக, எட்டு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு, வீடு ஒன்றிற்கு 1.72 இலட்சம் ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. நமது அரசு செயல்படுத்தி வரும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், மாநில அரசின் மானியமானது 3.53 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இது, ஒன்றிய அரசு தன்னுடைய திட்டத்திற்கு வழங்கும் மானியத்துடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகம்.
ஒன்றிய அரசு தன்னுடைய திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியினை தமிழ்நாடு அரசின் மீது திணிப்பதால், மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்களுக்குப் போதிய நிதியளிப்பு இல்லாமல் போகிறது. இதுதான் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதி நிலைமை ஆகும்.
நிதி அமைச்சர் பதவியில் இருப்பவருக்கு நிதித்தனமாகப் பேச வேண்டும்.
அவருக்கு அது தெரியாது. ஏளனமாகத்தான் பேசத் தெரியும். கிண்டல் கேலிதான் தெரியும். அதனால்தான் அவரை நிதி அமைச்சராக வைத்திருக்கிறார் மோடி.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து கலந்துரையாடல் எல்லாம் நடத்துகிறீர்கள்? கூச்சமாக இல்லையா?